
கொரோனாவை விட்டுவிடுவோம்... அதற்கு முன்பான காலகட்டத்தில் முதியவர்கள் வெளியே பாதுகாப்பாக இருந்தார்களா என்றால், `இல்லை’ என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது. அதற்குச் சாட்சியமாக இருக்கிறது கடைசியாக வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை.
கொரோனா... உலகையே அதிரவைத்திருக்கும் பெயர். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நம் இயல்பு வாழ்க்கையைப் பாதித்திருப்பது கொரோனாநோய்த் தொற்றுதான். இந்த நோய்த் தொற்று பரவாமலிருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. தற்போது பல கட்டங்களாக அந்தக் கட்டுப்பாடுகள் பலவும் நீக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் இந்த வாரத்திலிருந்து இ-பாஸ் பெறுவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. சாலைகளில் மீண்டும் வாகன நெரிசல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது, தமிழகத்தில் மீண்டும் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவற்றையெல்லாம்வைத்து தமிழகம் இயல்புநிலைக்குத் திரும்ப ஆரம்பித்திருப்பதை உறுதி செய்துகொள்ள முடிகிறது.
பொதுப் போக்குவரத்து, கடைகள் திறப்பதிலிருக்கும் நேரக் கட்டுப்பாடுகள், பொது இடங்களில் கூட்டம் கூடி விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படாதது, பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படாதது, கேளிக்கைக் கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது என சில விதிமுறைகள் மட்டுமே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்த்தப்படாமல் மிஞ்சியிருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளும் இன்னும் சில நாள்களில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

என்னதான் நாம் இயல்புநிலைக்கு மாறத் தொடங்கியிருந்தாலும், கொரோனா காலத்துக்குப் பிறகான நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். இந்த மாற்றங்களை ஆங்கிலத்தில் `நியூ நார்மல்' என்றழைக்கிறார்கள். அதாவது `புதிய யதார்த்தம்' என்கிறார்கள். இந்த நியூ நார்மல் வாழ்க்கையில், சாப்பிடுவதற்கு முன்னர் மட்டுமே கைகழுவும் பழக்கம் கொண்டவர்களெல்லாம் அடிக்கடி கை கழுவுகிறார்கள், சானிட்டைஸர் பயன்படுத்துகிறார்கள். அலுவலகங்களில் கூடிக் கூடி உணவுகளை பரிமாறிக்கொண்டவர்களெல்லாம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உணவருந்துகிறார்கள். இதையெல்லாம் தாண்டி `மாஸ்க்’ என்ற கான்செப்ட்டையே யோசித்துக்கூட பார்க்காத நம் அனைவருக்கும் மாஸ்க் அத்தியாவசியமாகிவிட்டது.
பக்கத்து வீட்டுக்காரர் முகமே பாதி மறந்து போகும் அளவுக்கு மாஸ்க்மயமாகவே சுற்றித் திரிகிறார்கள் நம் மக்கள்... சாலை ஓரங்களில் ஜூஸ் கடைகள், பழக்கடைகள், தலைக்கவச விற்பனை என்றிருந்ததெல்லாம் மாறிப்போய், இன்று முகக்கவசக் கடைகளே அதிகம் காணப்படுகின்றன.

ஒரு கம்பியில் பல வண்ண மாஸ்க்குகளைத் தொங்கவிட்டு விற்பனை செய்யும் நபர்களை, சென்னையின் சாலைகளில் நூறடிக்கு ஓர் இடத்தில் காணமுடிகிறது. `நியூ நார்மல்’ வாழ்க்கையின் முக்கிய அம்சமே மாஸ்க்குகள்தான் எனச் சொல்லலாம்.
இந்த நேரத்தில், நடுத்தர வயதினரும் இளைஞர்களும்தான் இந்த நியூ நார்மல் வாழ்க்கைக்குத் தங்களை மாற்றிக்கொண்டு வெளியே வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஓய்வு பெற்ற முதியவர்களில் பலரும் இந்த நியூ நார்மல் வாழ்க்கையில் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. காரணம், இந்த கொரோனாநோய்த் தொற்று முதியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான். சரி, இப்போது ஏன் முதியவர்களைப் பற்றிப் பேசுகிறோம் என்கிறீர்களா? காரணம் இருக்கிறது. இன்று சர்வதேச மூத்த குடிமக்களுக்கான தினம்.

இந்தியாவில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை `மூத்த குடிமக்கள்’ என்கிறோம். முதியவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். நம் சமூகத்தின் ஆணிவேராகவும் முதியவர்கள்தான் இருந்துவருகிறார்கள். எனவே, இந்த நாளில் நிச்சயம் முதியவர்களைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்!
சரி, மீண்டும் கொரோனாவின் கதைக்கு வருவோம்... `கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களில், 50 சதவிகிதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்’ என்று மத்திய சுகாதாரத்துறை கடந்த மாதம் வெளியிட்ட தரவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், `கொரோனா உயிரிழப்புகளில் 37 சதவிகிதம் பேர் 45 முதல் 60-வயதுக்குள் இருப்பவர்கள்’ என்றும் அந்தத் தரவுகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அதிகம்.
பிரதமர் மோடி, கொரோனாநோய் குறித்து நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தியபோது முக்கியமாகச் சொன்ன விஷயங்களுள் ஒன்று...
`55 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.’பிரதமர் மோடி
கொரோனாவின் பிறப்பிடமான வூஹானிலும் 60 வயதுக்கு மேற்பட்டோர்தான் கொரோனாவால் அதிகம் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதைத் தரவுகள் நமக்குச் சொல்கின்றன. எனவே, கொரோனா முதியவர்களுக்குச் சற்றே ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்துகின்றன இந்தத் தரவுகள்.

காலையில் நடைப்பயிற்சி செய்வது, பகல் நேரத்தில் கடைகளுக்குச் செல்வது, மாலை நேரத்தில் பூங்காக்களுக்குச் சென்று அக்கம்பக்க நண்பர்களுடன் கதையாடுவது... இவையெல்லாம்தான் இந்தியாவிலுள்ள பெரும்பாலான முதியவர்களின் பொழுதுபோக்காக இருந்துவந்தது. இன்னும் சில முதியவர்கள் 80 வயதுக்கு மேலும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் வேட்டுவைத்துவிட்டது கொரோனா.
சரி, கொரோனாவை விட்டுவிடுவோம். அதற்கு முன்பான காலகட்டத்தில் முதியவர்கள் பாதுகாப்பாக இருந்தார்களா என்றால், `இல்லை’ என்பதுதான் பதிலாகக் கிடைக்கிறது. அதற்குச் சாட்சியமாக இருக்கிறது கடைசியாக வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை. 2018-ம் ஆண்டுக்கான குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்தது மத்திய அரசு.

அந்தச் சமயத்தில், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நம் நாட்டில் நடைபெற்ற குற்றங்களைப் பற்றி மட்டுமே செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டன. ஊடகங்களிலும் பேசப்பட்டன. ஆனால், இளமைப் பருவத்திலிருந்து அயராது உழைத்து, தற்போது இளைப்பாற வேண்டிய முதியவர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றங்கள் குறித்து நாம் அதிகம் பேசத் தவறிவிட்டோம். மூத்த குடிமக்களுக்கான இந்த நாளில் அது பற்றிப் பேசுவது அவசியமாகிறது. `60 வயதுக்கு மேல் மனிதன் பலமிழக்கத் தொடங்கிவிடுவான்’ என்கிறது அறிவியல். அப்படி பலமிழக்கத் தொடங்கியவர்களுக்கெதிராக பல ஆயிரம் குற்றங்கள் நம் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது வேதனைக்குரிய விஷயம்.
தமிழகத்துக்கு எந்த இடம்?
2018-ம் ஆண்டு முதியவர்களுக்கு எதிராகக் குற்றம் அதிகம் நடைபெற்ற மாநிலங்களின் பட்டியலில், 3,162 குற்றங்களோடு மூன்றாமிடத்தில் இருக்கிறது தமிழகம். முதல் இரண்டு இடங்களில் மகாராஷ்டிரா (5,961), மத்தியப் பிரதேசம் (3,967) ஆகிய மாநிலங்கள் உள்ளன. `இந்தியா முழுவதும் முதியவர்களுக்கு எதிராக 24,349 குற்றங்கள் நடைபெற்றுள்ளன’ என்கிறது மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை.
முதியவர்களுக்கு எதிரான குற்றங்களில், தமிழகத்தைப் பொறுத்தவரை 2016-ல் 2,895 குற்றங்களும், 2017-ல் 2,769 குற்றங்களும் நடைபெற்றிருந்தன. அது 2018-ம் ஆண்டில் 3,162 ஆக அதிகரித்திருப்பது வருத்தத்துக்குரிய ஒரு விஷயம்.
கொலை!
2018-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 971 முதியவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக முதியவர்கள் கொலை செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்குத்தான் முதலிடம். 2018-ம் ஆண்டு தமிழகத்தில் மட்டும் 152 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்கும் நம் நாட்டில் முதியவர்களுக்கு எதிராகவும் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்கிற தரவுகள் நமக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. 2018-ம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 63 பாலியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கு தமிழகத்தில் பதியப்பட்டுள்ளது.
பிற வழக்குகள்!
2018-ம் ஆண்டு, இந்திய அளவில் முதியவர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் கொலை முயற்சி பிரிவில் 445 வழக்குகளும், மிரட்டி பணம் பறித்தல் பிரிவில் 84 வழக்குகளும், கடத்தல் பிரிவில் 51 வழக்குகளும், திருட்டுப் பிரிவில் 4,390 வழக்குகளும், கொள்ளைச் சம்பவங்கள் பிரிவில் 848 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முதியவர்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில், கொலை முயற்சி பிரிவில் 76 வழக்குகளும், மிரட்டி பணம் பறித்தல் பிரிவில் 16 வழக்குகளும், கடத்தல் பிரிவில் மூன்று வழக்குகளும், திருட்டுப் பிரிவில் 628 வழக்குகளும், கொள்ளைப் பிரிவில் 182 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
நிலுவையிலுள்ள வழக்குகள்!
முதியவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாகப் பதியப்படும் வழக்குகளில், முக்கால்வாசி வழக்குகள் நிலுவையிலுள்ளன. தமிழகத்தில், 2017-ம் ஆண்டில் பதியப்பட்ட 2,769 வழக்குகளில் 2,083 வழக்குகள் விசாரணை முடிக்கப்படாமல் உள்ளன. 2018-ம் ஆண்டுக்கான 3,162 வழக்குகளையும் சேர்த்துக்கொண்டால் முதியவர்களுக்கெதிரான வழக்குகளில் மொத்தம் 5,245 வழக்குகளில் தீர்வுகள் காணப்படவில்லை. 2018-ம் ஆண்டின் முடிவில் இந்தியா முழுவதும் மொத்தம் 37,161 வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளன.
தீர்வு என்ன?
இந்தியாவில், 2007-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி, கடந்த ஆண்டு முதியோர் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்ட மசோதாவின்படி ``இந்தியாவிலுள்ள மாவட்டங்களில் மட்டுமல்லாமல் அனைத்து வட்டங்களிலும் மூத்த குடிமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு ஆணையம் அமைக்கப்பட வேண்டும். முதியோருக்கு போதுமான உணவு, இருப்பிடம், உடை, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்டவை தங்களது பிள்ளைகளிடமிருந்து கிடைக்காமல்போனால் அவர்கள் அந்த ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம். அதுமட்டுமல்லாமல், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கும் கடமையை மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்தச் சட்டத் திருத்த மசோதா ஏற்படுத்துகிறது. மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பும், மருத்துவ வசதியும் வழங்கும் தன்னார்வ அமைப்புகளுக்கு அரசு ஊக்கமும் உதவியும் செய்வதை இந்த மசோதா உறுதிப்படுத்துகிறது" என்று அந்த மசோதாவில் சொல்லப்பட்டிருந்தது.

மத்திய அரசின் `முதியோர் பாதுகாப்புச் சட்டம்' ஆதரவற்ற முதியவர்களுக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கும் ஓரளவுக்கான பாதுகாப்பை வழங்குகிறது. அதேபோல கொரோனா முதியவர்களுக்கு ஆபத்தானது என்பது உண்மைதான் என்றாலும், இன்னும் சில மாதங்களில் அந்த நோய்க்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு முதியவர்கள் கொரோனாவிடமிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. ஆனால், `முதியவர்களுக்கு எதிராகப் பெருகிவரும் குற்றங்களிலிருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கப்போகிறார்கள்?’ என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது.
`ஆண்டுக்குச் சராசரியாக 30,000 குற்றங்கள் முதியவர்களுக்கு எதிராக நடைபெறுகின்றன. இனிமேல் இது ,போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறாமல் தடுக்க மாநில அரசுகள் முதியவர்களுக்கென சிறப்புப் பிரிவு காவல் நிலையங்களை அமைத்து, அவற்றின் மூலம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்கும்பட்சத்தில் இது போன்ற குற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய வாய்ப்புள்ளது’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.