Published:Updated:

` தனியார் விடுதி ஊழியரால் சிக்கிய நெல்லை கண்ணன்!' -பெரம்பலூரில் நடந்தது என்ன?

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன் ( தே.தீட்ஷித் )

தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என நினைத்த நெல்லை கண்ணன், சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி நெல்லை கண்ணனைப் பெரம்பலூரில் காவல்துறையினர் கைது செய்தனர்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நெல்லை கண்ணன் பேசிய பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதேநேரம், அ.தி.மு.க தரப்பிலிருந்தும் போலீஸில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நெல்லை கண்ணன்.

இதையடுத்து, நெல்லை கண்ணனை உடனடியாகக் கைது செய்யக் கோரி தமிழக பா.ஜ.க-வினர் போர்க்கொடி தூக்கினர். அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பா.ஜ.க சார்பில் சென்னை மெரினா காந்தி சிலை முன்பாகப் போராட்டமும் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனால், நெல்லை கண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என நினைத்த நெல்லை கண்ணன், சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.

மருத்துவமனையில் நெல்லை கண்ணன்
மருத்துவமனையில் நெல்லை கண்ணன்

அவரை நெல்லை காவல்துறை தேடி வந்த நிலையில் நேற்று இரவு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீஸார் அந்தத் தனியார் விடுதியை முற்றுகையிட்டனர். நெல்லை கண்ணனை அறையை விட்டு வெளியே செல்லாதவாறு தடுப்பு அமைத்தனர்.

நெல்லை கண்ணன் தங்கள் பாதுகாப்பில் இருப்பது குறித்து நெல்லை காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். இந்நிலையில் தனியார் விடுதி முன்பு பா.ஜ.க-வினர் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திரண்டனர். நெல்லை கண்ணனுக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருதரப்பினரும் கோஷமிட்டனர்.

`மோடி, அமித் ஷா மீது கடுமையான விமர்சனம்!’ -நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

நிலைமை மோசமாவதை உணர்ந்த பெரம்பலூர் போலீஸார் விடுதியின் பின்பக்க வாசல் வழியாக ஒரு காரில் ஏற்றி நெல்லை கண்ணனை ரகசிய இடத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த பா.ஜ.க-வினர் அந்த காரை விரட்டிச் சென்று தாக்கினர். போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் நபரை அழைத்துச் செல்லும் வாகனத்தை பா.ஜ.க-வினர் தாக்குதல் நடத்துமளவுக்குப் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி காவல்துறையிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

இரண்டு நாள்களாகத் தலைமறைவாக இருந்த நெல்லை கண்ணன் கைதானது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``உடல்நிலை சரியில்லாமல் தலைமறைவாக இருந்தவரைத் திருநெல்வேலி போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தார்கள். மதுரையிலிருந்த நெல்லை கண்ணன், தன்னை போலீஸார்கள் தேடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். பெரம்பலூரில் உள்ள ராஜீவ் என்பவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அந்த நபர் பட்டிமன்ற விழாக்களை ஏற்பாடு செய்யக்கூடியவர். அவரிடம், `நான் சென்னை போகவேண்டும். இரண்டு நாள்கள் தங்குவதற்கு ரூம் வேண்டும்' என்று நெல்லை கண்ணன் கேட்டிருக்கிறார்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

அவரும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்துக்கொடுத்திருக்கிறார். அவர் ஹோட்டலில் தங்கியிருந்தபோது அறையில் இருந்த போனில் தொடர்புகொண்டு தண்ணீர் கேட்டிருக்கிறார். விடுதி ஊழியரும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் நெல்லை கண்ணன் பெரம்பலூர் விடுதியில் தங்கியிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது.

போலீஸாரும், தகவல் உண்மைதான் என்பதை உறுதி செய்துவிட்டு நெல்லை போலீஸாருக்குத் தெரிவித்தனர். பா.ஜ.க மற்றும் முஸ்லிம் அமைப்புகள் திரண்டதால் அவரைப் பாதுகாத்துக்கொண்டு செல்ல நான்கு மணிநேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது" என்கின்றனர் விரிவாக.

அடுத்த கட்டுரைக்கு