Published:Updated:

`இனி எனக்கு மட்டும் பணம் கொடுங்கள்!' - கைதிக்கு சலுகை அளிக்கப் பேரம் பேசிய நெல்லை சிறைக் காவலர்

சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறைக் காவலர் வைரமணி
சஸ்பெண்டு செய்யப்பட்ட சிறைக் காவலர் வைரமணி

பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நபருக்குச் சலுகைகள் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார், சிறைக்காவலர் ஒருவர்.

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதைத் தடுக்க அடிக்கடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் உதவியுடன் பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. 

`உன்னை நீயே சாகடிக்கும் வரை தொந்தரவு செய்வேன்!'- புழல் சிறை எஸ்.பி-யைச் சுற்றும் புதிய சர்ச்சை!

இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் நடத்தப்படும் சோதனையின்போது பல்வேறு சிறைச்சாலைகளிலும் செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கைதிகளின் உறவினர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு கைதிகளுக்குச் சலுகை காட்டும் சம்பவங்களும் நடக்கவே செய்கின்றன.

Vikatan

கொரோனா தொற்று காரணமாக மத்திய சிறைச்சாலைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கவில்லை. இந்தச்சூழலில், தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே தனியார் பட்டாசு தொழிற்சாலையில் அண்மையில் விபத்து ஏற்பட்டது. 

Vikatan

அஜாக்கிரதை காரணமாக நடந்த இந்த விபத்துக்குக் காரணமான தனியார் ஆலையின் கிளை மேலாளரான மாரிச்சாமி என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. அதனால், சங்கரன்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாரிச்சாமிக்கு சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக அந்தச் சிறையின் தலைமை சிறைக் காவலர் வைரமணி என்பவர் பட்டாசு தொழிற்சாலையின் தலைமை மேலாளர் கோபிநாத் என்பவரிடம் பேரம் பேசியுள்ளார்.

சிறைக் காவலர் வைரமணி
சிறைக் காவலர் வைரமணி

அப்போது பேசிய மேலாளர், `இதுவரை 14,000 ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கிறார். அதைக் கேட்ட வைரமணி, `இனிமேல் யாரிடமும் பணம் கொடுக்காதீர்கள். அவர்கள் பணம் வாங்கிக் கொண்ட பின்னரும் கைதிக்கு டீ, காபி கூட கொடுக்கவில்லை. கதவைத் திறந்துவிட்டு வெளியே அமர வைக்கக்கூட அனுமதிக்கவில்லை.

மாரிசாமிக்கு நான் சிறைக்குள் அனைத்து உதவியும் செய்கிறேன். அதனால் இனி நீங்கள் பணம் கொடுப்பதாக இருந்தால் எனக்கு மட்டும் கொடுங்கள். நான் கைதி மாரிசாமியை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம்’ எனப் பேசுகிறார்.

Vikatan

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனால் இந்த விவகாரம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து தலைமை சிறைக்காவலர் வைரமணியை சஸ்பெண்டு செய்து சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு