Published:Updated:

`பணப் பரிவர்த்தனை; கைப்பற்றப்பட்ட சிம்கார்டுகள்' -என்.ஐ.ஏ அதிகாரிகள் களமிறங்கிய பின்னணி

தெளஃபீக்
தெளஃபீக்

களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ., வில்சனைத் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தின் பல இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ வில்சன், கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு 9.30 மணிக்கு சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மர்மக் கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில்வே நிலையத்தில் பதுங்கியிருந்த தக்கலை அருகிலுள்ள திருவிதாங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சமீம், மாலிக் தினார் நகரைச் சேர்ந்த தெளஃபீக் ஆகியோரை ஜனவரி 14-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

காயல்பட்டினத்தில் சோதனை
காயல்பட்டினத்தில் சோதனை

சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா) இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது தீவிரவாதிகள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக இருவரையும் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்கள் மற்றும் தீவிரவாதிகளுடன் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவ்வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு மாற்ற அனுமதிகேட்டு தமிழக டி.ஜி.பி திரிபாதிக்கும் உயர்நீதிமன்றத்திடமும் அளிக்கப்பட்டிருந்த மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ)க்கு மாற்றப்பட்டது.

சோதனை நடந்த மொய்தீன் பாத்திமாவின் வீடு
சோதனை நடந்த மொய்தீன் பாத்திமாவின் வீடு

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் என்.ஐ.ஏ பிரிவின் எஸ்.பி ராகுல் தலைமையிலான அதிகாரிகளிடம் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களைப் போலீஸார் சமர்ப்பித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் தனி அலுவலகத்தை ஏற்படுத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, காயல்பட்டினம், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் காஜாமைதீன் என்பவரின் இரண்டாவது மனைவி இந்திராகாந்தி வீட்டிலும், பட்டாம்பாக்கத்தில் ஜாபர் அலி, பரங்கிப்பேட்டையில் அப்துல்சமது ஆகியோரது வீடுகளிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

`போதைப்பொருள் டு ஹிஸ்புல் முஜாகிதீன் தொடர்பு வரை!' - தாவீந்தர் சிங் விவகாரத்தில் மிரண்ட என்.ஐ.ஏ

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினம், சீதக்காதி நகரில் தௌஃபிக்கின் நண்பரான செய்யது அலிநவாஸ் என்பவரின் இரண்டாவது மனைவி மொய்தீன் பாத்திமாவின் வீடு உள்ளது. இங்கு தெளஃபீக், சமீம் உள்ளிட்ட 6 பேர், கடந்த டிசம்பர் 11-ம் தேதி இரவில் தங்கிவிட்டுச் சென்றதாகக் கிடைத்த தகவலின்படி, கடந்த ஜனவரி 26-ம் தேதி இருவரையும் இங்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை சுமார் 6.05 மணி முதல் 10.10 வரை பாத்திமாவின் வீட்டில் சோதனையிட்டனர். தகவலறிந்து ஆறுமுகநேரி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாத்திமாவிடமும் குற்றவாளிகள் தங்கிச் சென்றது குறித்தும் விசாரணை நடத்தினர்.

என்.ஐ.ஏ அதிகாரிகள்
என்.ஐ.ஏ அதிகாரிகள்

இதில், மூன்று சிம்கார்டு அட்டைகள், வங்கியில் பண பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான ரசீதுகள், மொய்தீன் பாத்திமாவின் முதல் கணவரான சாசுதினின் புகைப்படம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதே காயல்பட்டினத்தில் ஏற்கெனவே ஐ.எஸ் அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக அபுல் ஹசன் சாதுலி என்ற கார் டிரைவர் வீட்டில் கடந்த நவம்பர் 1-ம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டுச் சென்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பாத்திமா வீட்டிலும் நடைபெற்ற இச்சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு