Published:Updated:

கேரளா தங்கம் கடத்தல்: திருச்சியில் சிக்கிய 6 ஏஜென்டுகள்! - ரகசிய இடத்தில் என்.ஐ.ஏ விசாரணை

கடத்தல் வேட்டையில் சிக்கிய தங்கக் கட்டிகள்
கடத்தல் வேட்டையில் சிக்கிய தங்கக் கட்டிகள்

திருச்சியில் அண்டகுன்டான் தெரு, ஜாபர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்த ஆறு ஏஜென்டுகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் இரவோடு இரவாக அள்ளிச் சென்றனர்.

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், இது தொடர்பாகத் திருச்சியில் 6 பேரை இரவோடு இரவாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். ரகசிய இடத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தங்கம் கடத்தல் விசாரணை
தங்கம் கடத்தல் விசாரணை

கேரள மாநிலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகம், கொடி முத்திரையைப் பயன்படுத்தி தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் ஸரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், ரமீஸ் உள்ளிட்ட 16 பேர் தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்விவகாரத்தில் சுங்கத்துறையினரும் விசாரணையில் இறங்கினர். இதனால், தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட ரமீஸிடம் சுங்கத்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தல் தங்கம் பெரும்பாலும் தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஏஜென்டுகள் மூலமாக விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததை அறிந்த உடன் தன்னிடம் இருந்த அனைத்து கடத்தல் தங்கத்தையும் திருச்சிக்குக் கொண்டு வந்துவிட்டேன் என்று விசாரணையில் ரமீஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சியில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக முழு விவரம் பெறுவதற்கு ஸ்வப்னா சுரேஷை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி பெற்று உள்ளனர் சுங்கத்துறையினர். இது ஒருபுறமிருக்கத் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணையில் துரிதம்காட்டி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

அவர்கள் கேரளாவில் விசாரணை முடித்த கையோடு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குழுக்களாகப் பிரிந்து பல மாநிலங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரமீஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில் என்.ஏ.ஐ. அதிகாரிகள் திருச்சியில் ரகசியமாக முகாமிட்டுள்ளனர். ஏனெனில், விஷயம் வெளியில் கசிந்தால் முக்கிய ஏஜென்டுகள் தப்ப வாய்ப்பு உள்ளதால் சுவடே தெரியாமல் விசாரணை திருச்சியில் நடந்து வருகிறது.

கேரளா: `தங்கம் கடத்தலில் துணை தூதருக்கு பங்கு!’ - விசாரணையில் அதிரவைத்த ஸ்வப்னா

திருச்சியில் அண்டகுன்டான் தெரு, ஜாபர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்த ஆறு ஏஜெனன்டுகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் இரவோடு இரவாக அள்ளிச் சென்றனர். அவர்களிடம் விசாரணையில் கொல்கத்தா, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்களிடம் திருச்சியைச் சேர்ந்தவர்கள் கடத்தல் தங்க வணிகத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடத்தல் வேட்டையில் சிக்கிய தங்கக் கட்டிகள்
கடத்தல் வேட்டையில் சிக்கிய தங்கக் கட்டிகள்

தங்கம் கடத்தலில் திருச்சி மலைவாசல் பகுதியில் நகைக்கடை வைத்திருப்பவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. மேலும், அண்டகுன்டான் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 6 பேரைத் தேசிய புலனாய்வு முகமை என ரகசிய இடத்தில் வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு