கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிர்பயா கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், அக்ஷய் குமார் சிங் தூக்குத்தண்டனையை மறுபறுசீலனை செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்பியுள்ளார். வரும் டிசம்பர் 17-ந் தேதி இந்த மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. எனினும், நிர்பயா குற்றவாளிகள் இந்த மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஹேங்மேன்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ராமநாதபுரம் போலீஸ் நிலைய தலைமை ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன் என்பவர், நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கில் போட, தான் தயாராக இருப்பதாக திகார் சிறைத்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதுபோல், மீரட்டைச் சேர்ந்த பவான் ஜல்லார்ட் என்பவரும் நிர்பயா வழக்கின் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

தன் தாத்தா, இந்திரா காந்தியைச் சுட்டுக் கொன்ற குற்றவாளிகள் இரண்டு பேர் மற்றும் கொடும் குற்றவாளிகளான ரங்கா, பில்லா ஆகியோரை தூக்கிலிட்டவர் என்று பவான் ஜல்லார்ட் கூறியுள்ளார். நாட்டில் மிகவும் கவனம் பெற்ற வழக்கு என்பதால், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் பணிகள் குறித்த தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் செல்போன்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன.
இதற்கிடையே, தங்களின் வாழ்நாள்கள் எண்ணப்பட்டுக்கொண்டு வருவதால், சிறையில் உள்ள நான்கு குற்றவாளிகளும் கலக்கமடைந்துள்ளனர். பெரும்பாலும் சோகத்துடனே இருக்கின்றனர். உணவுகளை முறையாக எடுத்துக் கொள்வதில்லை. அதிக மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இவர்கள் தற்கொலை செய்துகொண்டு விடக் கூடாது என்பதால் சிறை அதிகாரிகள் ஷிஃப்ட் முறையில் அவர்களைத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தூக்கில் போடப்படும் குற்றவாளிகள் இவர்கள்தான் என்பதை உறுதிபடுத்தும் விதமாக சிறையில் இருந்து, கடந்த வெள்ளிக்கிழமை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனால், எந்த நேரத்திலும் தாங்கள் தூக்கிலடப்படலாம் என்பதை நிர்பயா குற்றவாளிகள் உணர்ந்து, கடும் பயத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல், நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் சிறை எண்-3 க்குச் சென்று பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
குற்றவாளிகளை விரைவில் தூக்கிலிட வேண்டும். நாட்டில் இன்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை.நிர்பயாவின் தாயார்
நிர்பயாவின் தாயார் கூறுகையில், "நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்காக 7 ஆண்டுகள் காத்திருக்கிறோம். இன்னும் ஒரு வாரம் காத்துக் கொண்டிருக்கத் தயாராக இருக்கிறோம். விரைவில் அவர்களை தூக்கிலிட வேண்டும் அதற்கான டெத் வாரன்டுகளை நீதிமன்றம் உடனடியாகப் பிறப்பிக்க வேண்டும். என் மகள் இறந்த பிறகாவது நாட்டில் பாலியல் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், எதுவும் நடக்கவும் இல்லை. மாறவும் இல்லை. நித்தம் எதாவது ஒரு பெண், பாலியல் குற்றவாளிகளால் பாதிக்கப்படுகிறார்'' என்று வேதனை தெரிவித்துள்ளார்.