Published:Updated:

உமா மகேஸ்வரியைக் கொன்றது யார்?- துப்பு கிடைக்காமல் திணறும் நெல்லை போலீஸ்!

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி படுகொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் நெல்லை மாநகர போலீஸார் குழம்பித் தவிக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.

கணவருடன் உமா மகேஸ்வரி
கணவருடன் உமா மகேஸ்வரி

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயராகவும் தி.மு.க மகளிரணி மாவட்டப் பொறுப்பாளராகவும் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசந்திரன், பணிப்பெண் மாரி ஆகிய மூவரையும் வீட்டுக்குள் நுழைந்த ஒரு கும்பல் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பியது. நேற்று (ஜூலை 23-ம் தேதி) பட்டப்பகலில் இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

சோகத்தில் உறவினர்கள்
சோகத்தில் உறவினர்கள்

இந்தக் கொலையைச் செய்தவர்கள், உமா மகேஸ்வரிக்கு அறிமுகமானவர்களாக இருந்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். காரணம், வீட்டின் வரவேற்பு அறையில் தண்ணீர் கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. அத்துடன், கொலையாளிகள் அரிவாள் கொண்டு செல்லவில்லை. சிறிய கத்தியை மட்டுமே மறைத்து எடுத்துச் சென்றுள்ளனர். சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னரே இந்தக் கொலையைச் செய்திருக்கக் கூடும் எனவும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

உமா மகேஸ்வரியின் உறவினர்கள் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனால், அதில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மோப்பநாய் ‘பரணி’ வரவழைக்கப்பட்ட நிலையில், அதுவும் மேலப்பாளையம் நோக்கி சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலப்பாளையம் பகுதியில் வேலைக்காக வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் 50-க்கும் அதிகமான வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தினார்கள். நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களில் யாரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

உடலைப் பார்த்து கதறும் உறவினர்கள்
உடலைப் பார்த்து கதறும் உறவினர்கள்

உமா மகேஸ்வரியையும் அவரது கணவரையும் கொலை செய்த கும்பல், அங்கிருந்த பணிப்பெண் மாரியை இரும்புக் கம்பியால் தலையில் கொடூரமாகத் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளது. அவரை உயிரோடு விட்டால் கொலையாளிகள் குறித்த தகவல் வெளியே தெரிந்துவிடும் என்பதற்காகவே அவரையும் இறக்கமின்றி கொன்றிருக்கிறார்கள். பலியான பணிப்பெண் மாரிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், வறுமையான சூழலில் வாடகை வீட்டில் வசித்துவந்த அவர், குழந்தைகளைப் பள்ளியில் படிக்கவைப்பதற்காக வீட்டு வேலை செய்துவந்துள்ளார். அவர் கொல்லப்பட்டதால், அவரது குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்தக் கொலைக்கான காரணத்தை போலீஸார் இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை நடந்த வீட்டில் அல்லது அருகில் உள்ள வீடுகளில் சிசிடிவி கேமரா பொறுத்தப்படாததால், கொலையாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்தத் தெருவில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டில் இருக்கும் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

உடற்கூறு சோதனை நடந்த மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள்
உடற்கூறு சோதனை நடந்த மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள்

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்தக் கொலைகுறித்து அறிந்ததும் கண்டன அறிக்கை வெளியிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வந்து உமா மகேஸ்வரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நெல்லை மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க-வினரும் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நடந்துவருகின்றன. கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் முடிவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

உமா மகேஸ்வரி உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
உமா மகேஸ்வரி உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலையில் நீடிக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மையான குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே தி.மு.க-வினரின் கோரிக்கையாக உள்ளது.