Published:Updated:

ஒடிசா: `பாலியல் தொல்லை; கருக்கலைப்பு!’ - 13 வயதுச் சிறுமி விவகாரத்தில் சிக்கிய இன்ஸ்பெக்டர்

ஒடிசா போலீஸ்
ஒடிசா போலீஸ்

ஒடிசாவில் 13 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒடிசாவில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 25-ல் பிராமித்ரபூரில் நடந்துவந்த கண்காட்சி ஒன்றைக் காண வந்திருக்கிறார். ஆனால், லாக்டௌன் காரணமாகக் கடைசி நேரத்தில் அந்தக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து, சொந்த ஊர் திரும்ப முயற்சி செய்த அந்தச் சிறுமி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். ஆனால், பேருந்து வசதி கிடைக்காததால், நீண்ட நேரம் பேருந்து நிலையத்தில் காத்திருக்க நேர்ந்திருக்கிறது.

Representational Image
Representational Image
Image by Image by Tumisu from Pixabay

இன்ஸ்பெக்டர்

அப்போது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிராமித்ரபூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த் சந்திர மஜ்ஹி தலைமையிலான போலீஸார் சிறுமியைக் காவல்நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் மஜ்ஹி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியை அடுத்த நாள் அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். பின்னர், கடந்த இரண்டு மாதங்களாக சிறுமியைக் காவல்நிலையம் வரவழைத்து காவலர்கள் கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதில், அந்தச் சிறுமி கர்ப்பமடையவே அதைக் கலைக்க உள்ளூர் மருத்துவர் ஒருவரின் உதவியை போலீஸார் நாடியதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு கடந்த ஜூன் 15-ம் தேதி கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சுந்தர்கர்க் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரி எஸ்.ஜனாவுக்கு புகார் சென்றிருக்கிறது. இதையடுத்து, உடனடியாக சிறுமியை அழைத்து விசாரித்த அவர், பிர்மித்ராபூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மஜ்ஹி, மற்றொரு காவலர், கருக்கலைப்பு செய்த மருத்துவர், அந்த சிறுமியின் தாயுடைய இரண்டாவது கணவர் உள்ளிட்ட 6 பேர் மீது ராய்போகா காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 23ல் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மஜ்ஹி உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை, போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

ஒடிசா போலீஸ்
ஒடிசா போலீஸ்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்

இந்த விவகாரம் ஒடிசாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், மாநில காவல்துறை தலைமையில் இருந்து இன்ஸ்பெக்டர் மஜ்ஹி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பணியிடை நீக்கம் செய்து கடந்த ஜூன் 25ல் உத்தரவிட்ட ஒடிசா மாநில டிஜிபி அபய், இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி நேற்று (ஜூன் 30) உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக ஒடிசா மாநில டிஜிபியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலும் பதிவிடப்பட்டிருக்கிறது. அதில், ``ராய்போகா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை குற்றப்பிரிவுக்கு மாற்றி நான் உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கெனவே சுந்தர்கர்க் சென்றுள்ளனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

`இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கட்டாயக் கருக்கலைப்பு!’ - சர்ச்சையில் பளுகல் எஸ்.ஐ

குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை

இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் அதிகாரிகள் கொண்ட குற்றப்பிரிவு போலீஸ் குழு, இந்த விவகாரம் தொடர்பாக ராய்போகா மற்றும் பிர்மித்ரபூர் காவல்நிலையங்களில் விசாரணை மேற்கொண்டது.

Representational Image
Representational Image
Image by Isabella Quintana from Pixabay

வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ள போலீஸார், இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்த இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. சிறுமிக்குக் கருக்கலைப்பு செய்த மருத்துவர் தொடர்பாக தனக்குப் புகார் வந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சுந்தர்கர்க் மாவட்ட ஆட்சியர் நிகில் பவன் கல்யாண், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தநிலையில், இன்ஸ்பெக்டர் ஆனந்த் சந்திர மஜ்ஹியை டிஸ்மிஸ் செய்து ஒடிசா டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார். அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள டிஜிபி அபய், சிறுமியிடம் மன்னிப்புக்கேட்பதாகவும் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு