Published:Updated:

`சட்டவிரோதமாக உறிஞ்சப்பட்ட நிலத்தடி நீர்!’ - துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

துரைமுருகன்
துரைமுருகன்

காட்பாடியில் துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரிமம் இல்லாத கேன் குடிநீர் ஆலைகளை மூட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாகச் செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு அதிரடியாக `சீல்’ வைக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்டுவரும் 37 குடிநீர் ஆலைகள் கண்டறியப்பட்டு ‘சீல்’ வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலை
துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலை

இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், ``உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் அனுமதியில்லாத குடிநீர் ஆலைகளைக் கண்டறிய பொதுப்பணித்துறை நீர்வளப் பொறியாளர்கள், வருவாய்த் துறை, காவல்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஒரு வாரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 40 குடிநீர் ஆலைகள் இயங்கிவருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், மூன்று ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளன. மீதமுள்ள 37 ஆலைகள் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மூடப்பட்டுவருகின்றன. முன்னதாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த ஆலைகள் தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தனர். அதைப் பரிசீலனை செய்த பிறகு இதுவரை, 29 ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலை
துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலை

மற்ற 8 நிறுவனங்களும் இன்று மாலைக்குள் ‘சீல்’ வைக்கப்படும். உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அந்த ஆலைகள் மீண்டும் திறக்கப்படாது. காட்பாடியில்தான் நிறைய குடிநீர் ஆலைகள் இயங்கிவருவது கண்டறியப்பட்டுள்ளது. யாருடைய ஆலைகளாக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்த நிலையில், காட்பாடியை அடுத்த உள்ளிப் புதூர் கிராமத்தில் உள்ள தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான `அருவி’ குடிநீர் ஆலைக்கும் காட்பாடி தாசில்தார் பாலமுருகன் முன்னிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, `உயர்நீதிமன்ற உத்தரவின்படிதான் நடவடிக்கை எடுத்துள்ளோம். தனி நபர் சார்ந்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

‘சீல்’ வைத்த அதிகாரிகள்
‘சீல்’ வைத்த அதிகாரிகள்

துரைமுருகனுக்குச் சொந்தமான ஆலையும் குடிநீர் எடுக்க அனுமதி பெறவில்லை. நிலத்தடி நீர்ப் பகுதிகளை நான்கு வகைகளாகப் பிரித்துள்ளோம். அப்படிப் பார்த்தால், துரைமுருகன் ஆலை அமைந்திருக்கும் பகுதியில் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது. விதிகளுக்கு உட்பட்டு அவருடைய ஆலையில் உள்ள குடிநீர் உறிஞ்சும் போர்வெல்களுக்கு சீல் வைத்துள்ளோம்’’ என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு