Published:Updated:

`வேட்புமனுவில் சொத்து விவரம் மறைக்கப்பட்டதா?!’ - ஓ.பி.எஸ்., ரவீந்திரநாத் மீது வழக்கு பதிய உத்தரவு

ஓ.பி.எஸ்
News
ஓ.பி.எஸ்

வாக்குச் செலுத்தக்கூடிய வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடுவோரில் யாரைத் தேர்வு செய்வது என்பதற்கு வேட்பாளர்களின் விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம், காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. பொறியாளரான இவர், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகக் கடந்த 2018 வரை இருந்தவர். இந்நிலையில் இவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30 -ம் தேதி தனித்தனியாக இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், ``கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தில், உண்மையான சொத்து விவரங்களை மறைத்து பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளனர்.‌ எனவே, அவர்கள் இருவர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்த மனுக்கள் மீதான விசாரணை மாஜிஸ்ட்ரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜனவரி 6, ஜனவரி 7-ம் தேதிகளில் நடைபெற்றது.‌ வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் புகார் குறித்து மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை அறிக்கையை வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், புகாரில் தெரிவிக்கப்பட்ட இருவரையும் வாரன்ட் இன்றி கைதுசெய்யக் கூடாது எனவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிலானி
மிலானி

இது குறித்து மனுதாரர் மிலானியிடம் பேசினோம். ''வாக்குச் செலுத்தக்கூடிய வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடுவோரில் யாரைத் தேர்வு செய்வது என்பதற்கு வேட்பாளர்களின் விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் குற்ற வழக்குகள் உள்ளனவா, அசையும் சொத்து, அசையா சொத்து எவ்வளவு, கடன் விவரம், படிப்பு உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும். இதில் வேட்பாளர்கள் தங்களின் விவரங்களை மறைத்தாலோ அல்லது தவறான தகவல்களைப் பதிவுசெய்தாலோ அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி குற்றமாகும். இதற்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையே விதிக்கலாம்.

வேட்புமனு
வேட்புமனு

நாங்கள் ஓபிஎஸ்-ஸும் அவரின் மகனும் என்னென்ன விவரங்களை மறைத்துள்ளனர் என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். அவர்கள் இருவர்மீதும் ஜனவரி 10-ம் தேதிக்குள் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடைமுறையில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.