Published:Updated:

எஸ்.பி.ஐ: `திடீர்னு அனுமதி கிடைச்சா என்ன பண்றது?’ - போலி வங்கிக் கிளை: பண்ருட்டி அதிர்ச்சி

போலி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையின் படிவங்கள்
போலி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையின் படிவங்கள்

எஸ்.பி.ஐ வங்கியின் போலி கிளையை அமைத்துக்கொண்டிருந்த முன்னாள் அரசு வங்கி அதிகாரிகளின் மகன் உள்ளிட்ட 3 பேர் பண்ருட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் கிளைக்கு இரு தினங்களுக்கு முன்பு சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கிருந்த மேலாளரைச் சந்தித்து, ``பண்ருட்டியில் ஏற்கெனவே தங்கள் வங்கிக்கு இரண்டு கிளைகள் இருக்கின்றன. தற்போது மூன்றாவதாக பஜார் கிளை பெயரில் வங்கி இயக்கப்படுகிறதா?” என்று கேட்டிருக்கிறார். ``அப்படி எதுவும் இல்லையே” என்று சொன்ன வங்கி மேலாளரிடம் பஜார் வங்கிக் கிளை என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டிருந்த படிவங்களைக் காட்டியிருக்கிறார் அந்த வாடிக்கையாளர். அதைப் பார்த்து பதறிப்போன வங்கியின் மேலாளர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுடன் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட காவலர்கள்
கைது செய்யப்பட்டவர்களுடன் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட காவலர்கள்

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பண்ருட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், எல்.என்.புரத்தைச் சேர்ந்த கமால்பாபு என்பவரது வீட்டிற்கு சென்று அதிரடி சோதனையை நடத்தினார். அப்போது அந்த வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறையில் போலியாக அச்சடிக்கப்பட்ட `பண்ருட்டி வடக்கு பஜார் கிளை பாரத ஸ்டேட் வங்கி’ என்ற பெயரில் படிவங்கள், பதிவேடுகள், ரப்பர் ஸ்டாம்புகள், பணம் போடும் மற்றும் எடுக்கும் படிவங்கள் என அனைத்தும் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் கமால்பாபுவை கைது செய்தனர். அதையடுத்து அவர் கொடுத்த தகவலின்படி படிவங்களை அச்சடிக்க உதவி செய்த அருணா பிரிண்டர்ஸ் உரிமையாளர் ஏ.குமார் (வயது 42) மற்றும் பண்ருட்டி ஈஸ்வரி ரப்பர் ஸ்டாம்ப் உரிமையாளர் மாணிக்கம் (வயது 52), இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கமால்பாபு
கைது செய்யப்பட்ட கமால்பாபு

தமிழகத்தை உலுக்கியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய பண்ருட்டி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், ``கமால்பாபுவின் பெற்றோர்கள் இருவருமே அரசு வங்கி ஊழியர்கள். அதனால் சிறு வயதில் இருந்தே கமால்பாபு பெற்றோர்களுடன் அடிக்கடி வங்கிக்குச் செல்வது வழக்கம். வங்கியின் நடைமுறைகள் அனைத்தும் சிறுவன் கமால்பாபுவை கவர்ந்ததால், தன்னை ஒரு வங்கி ஊழியராகவே மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கிறார். 13 வருடங்களுக்கு முன்பு அவர் தந்தை இறந்துவிட்டார்.

லட்சக்கணக்கில் மோசடி... தூத்துக்குடி இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி! | Shocking

அப்பாவைப் போல வங்கிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்கவே, 18 வயது நிறைவடைந்தால்தான் அங்கு வேலைக்குப் போக முடியும் என்று வீட்டில் ஆறுதலுக்காகக் கூறியிருக்கிறார்கள். அதனால் +2 படிப்பை முடித்துவிட்டு தனக்கு 18 வயது முடிந்ததும், `என் அப்பாவின் வேலையை எனக்குக் கொடுங்கள்’ என்று வங்கிக்கு இ-மெயில் அனுப்பியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட மாணிக்கம்
கைது செய்யப்பட்ட மாணிக்கம்

அதனை வங்கி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, வங்கி நடத்துவதற்காவது அனுமதி தாருங்கள் என்று சம்பந்தப்பட்ட வங்கிக்கு இ-மெயில் அனுப்பியதாகவும், அதற்கு அந்த வங்கி `Wait for sometime’ என்று பதில் அனுப்பியதாகவும் எங்களிடம் கூறினார் கமால்பாபு.

மேலும், `திடீரென்று வங்கி துவங்குவதற்கு அனுமதி அளித்துவிட்டால் அப்போது நன் என்ன செய்வது? அதனால்தான் ஊரடங்கு நேரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டால், ஊரடங்கு முடிந்ததும் வங்கியை ஆரம்பித்து துரிதமாகச் செயல்படலாம் என்றுதான் அனைத்தையும் பிரின்ட் செய்து வைத்தேன்’ என்றும் கூறினார்.

கைது செய்யப்பட்ட குமார்
கைது செய்யப்பட்ட குமார்

ஆனால், இதுவரை இந்த வங்கி கிளையின் பெயரில் எந்த பணப் பரிவர்த்தனைகளும் நடந்ததாகப் புகார் வரவில்லை. அப்படி நடந்திருந்தால் அதுகுறித்து புகார் அளிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்” என்றார். இவர்கள் மூவர் மீதும் மோசடி, நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்திற்காக செயல்பட்டது, அரசு முத்திரையைப் போலியாக தயார் செய்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு