Published:Updated:

அமித் ஷா பேனரில் குற்றப் பின்னணி உள்ளவர்களின் படங்கள்! - அதிர்ச்சியளிக்கும் புதுச்சேரி பாஜக பேனர்கள்

பாஜக பேனர்கள்

”கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், அடிதடி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள், குற்றவாளிகள் தைரியமாகத் தங்கள் புகைப்படத்துடன் மத்திய உள்துறை அமைச்சருக்கே பேனர் வைப்பது பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் இல்லையா?”

அமித் ஷா பேனரில் குற்றப் பின்னணி உள்ளவர்களின் படங்கள்! - அதிர்ச்சியளிக்கும் புதுச்சேரி பாஜக பேனர்கள்

”கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், அடிதடி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள், குற்றவாளிகள் தைரியமாகத் தங்கள் புகைப்படத்துடன் மத்திய உள்துறை அமைச்சருக்கே பேனர் வைப்பது பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் இல்லையா?”

Published:Updated:
பாஜக பேனர்கள்

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்களையும், குற்றப் பின்னணி உடையவர்களையும் கட்சியில் இணைத்துவருவதாக பா.ஜ.க மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷாவுக்கு பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் குற்றப் பின்னணியுடையவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது அம்மாநில மக்களைப் பதற்றமடைய வைத்திருக்கிறது. புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலை ஆணையும் அமலில் இருக்கின்றன. ஆனால் அதையும் மீறி புதுச்சேரிக்கு வந்திருந்த அமைச்சர் அமித் ஷாவுக்காக நகர் முழுவதும் சுமார் 2,500 பேனர்களும், ராட்சத அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.

அமித் ஷா
அமித் ஷா

அவை அனைத்தும் பிரதான சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 100 அடி சாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு ராட்சத வளைவு சரிந்து விழுந்ததில் 70 வயது முதாட்டிக்கு தலையில் அடிபட்டு அவருக்கு 9 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன. ”தடைச் சட்டத்தை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றுங்கள்” என்று சுந்தர் என்பவர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புகாரளிக்கச் சென்றார். ஆனால் திடீரென அங்கே நுழைந்த பா.ஜ.க-வினர் அவரைத் தாக்கினார்கள். சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து காலாப்பட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக பெரியகடை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் சுந்தர். சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் இருப்பதாக கறார் காட்டி நடிகர் விஜய்யின் `பீஸ்ட்’ பட பேனரை இரவோடு இரவாக அகற்றிய நகராட்சி நிர்வாகம், இந்த விவகாரத்தை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. “தடையை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றாதது ஏன்?” என்று கடந்த 23-ம் தேதி ஜூ.வி சார்பில் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “இன்றும் நாளையும் விடுமுறை. அதனால் திங்கள் கிழமை அகற்றுவோம்” என்று பதிலளித்தார். ஆனால் தற்போதுவரை அந்த பேனர்கள் அகற்றப்படவில்லை.

பாஜக பேனர்கள்
பாஜக பேனர்கள்

இது ஒருபுறமிருக்க புதுச்சேரிக்கு வந்திருந்த உள்துறை அமைச்சருக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இடம்பெற்றிருந்த ஒரு சிலரின் புகைப்படங்கள் சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அவர்களில் ஒருவர் சந்துருஜி. போலியாகத் தயாரிக்கப்பட்ட ஏ.டி.எம் அட்டைகளைக்கொண்டு ஸ்வைப்பிங் மெஷின் மூலம் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த வழக்கில் புதுச்சேரி காவல்துறையாலும், தமிழகப் பகுதியான தந்திராயன்குப்பத்தில் துணை நடிகைகள் மற்றும் பெண்களை அடைத்துவைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையாலும் கைதுசெய்யப்பட்டவர்தான் இந்த சந்துருஜி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலி ஏ.டி.எம் அட்டைகள் மூலம் புதுச்சேரி, தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கைவரிசையைக் காட்டிய சந்துருஜியை 2018-ம் ஆண்டு கைதுசெய்து சிறையில் தள்ளிய புதுச்சேரி போலீஸ், அவர்மீது குண்டாஸ் வழக்கையும் போட்டது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களுடன் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பானு பிரதாப்சிங் வர்மாவுடன் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தின. அந்தப் புகைப்படங்களை சந்துருஜியே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பாஜக எம்.எல்.ஏ-க்கள்
பாஜக எம்.எல்.ஏ-க்கள்

இந்த சந்துருஜிதான் தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக பேனர்களை வைத்திருக்கிறார். அதேபோல அமித் ஷாவுக்காக வேறு சில இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் இருக்கும் சர்ச்சைக்குரிய மற்றொரு நபர் உமாசங்கர். ரெட்டியார்பாளையம் தெஸ்தான் கொலை வழக்கில் சிக்கி விடுதலையான இவர்மீது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழிப்பறி, கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் தொழில், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தவிர லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் டாப் ரெளடிகள் பட்டியலில் இவரின் பெயரும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைக்காலைச் சேர்ந்த பிரபல பெண் தாதாவான எழிலரசி தனது ஆதரவாளர்களுடன் கடந்த 2021-ம் ஆண்டு, ஜனவரி மாதம் மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தார். காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த எழிலரசிக்கு பா.ஜ.க தலைவர் சாமிநாதன் சால்வை அணிவித்த அந்தப் புகைப்படம் புதுச்சேரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள் மத்தியில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ``அவர் கட்சியில் சேரவும் இல்லை. அவருக்கு எந்தப் பொறுப்பு கொடுக்கவும் இல்லை” என்று கூறி பின்வாங்கியது புதுச்சேரி பா.ஜ.க. ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சந்துருஜி வைத்திருக்கும் பேனரில் முத்தியால்பேட்டை தொகுதி என்றும் உமாசங்கர் இடம்பெற்றிருக்கும் பேனரில் புதுச்சேரி பா.ஜ.க என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டார்களா என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

”கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், அடிதடி, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ரெளடிகள் தைரியமாகத் தங்கள் புகைப்படத்துடன் மத்திய உள்துறை அமைச்சருக்கே பேனர் வைப்பது பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் இல்லையா... காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்... குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் குற்றவாளிகள் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பேனர்கள் வைப்பதற்கு அனுமதித்தால் பொதுமக்களால் நிம்மதியாக இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism