Published:Updated:

பரமக்குடி: அதிகாலையில் நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு! - கருணாஸ் ஆதரவாளர்கள்மீது புகார்

பெட்ரோல் குண்டுவீச்சு; போலீஸ் விசாரணை
பெட்ரோல் குண்டுவீச்சு; போலீஸ் விசாரணை ( உ.பாண்டி )

கருணாஸ் குறித்தும், அவர் நடத்திவரும் அமைப்பு குறித்தும் பாண்டித்துரை அவ்வப்போது விமர்சனம் செய்துவந்தார். இதனால் கருணாஸ் ஆதரவாளர்களால் பாண்டித்துரைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பரமக்குடியில் முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பின் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பாக நடிகர் கருணாஸின் ஆதரவாளர்கள்மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

 பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு; கருணாஸ் ஆதரவாளர்கள்மீது புகார்
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீடு; கருணாஸ் ஆதரவாளர்கள்மீது புகார்
உ.பாண்டி

பரமக்குடி, கிருஷ்ணா தியேட்டர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் நடத்திவரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்துவந்தார். கருணாஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அந்த அமைப்பிலிருந்து விலகி முக்குலத்தேவர் புலிப்படை அமைப்பை ஏற்படுத்தி, அதன் பொதுச்செயலாளராக தற்போது இருந்துவருகிறார்.

சிதறிக்கிடக்கும் கண்ணாடித் துண்டுகள்
சிதறிக்கிடக்கும் கண்ணாடித் துண்டுகள்
உ.பாண்டி

கருணாஸ் குறித்தும், அவர் நடத்திவரும் அமைப்பு குறித்தும் பாண்டித்துரை அவ்வப்போது விமர்சனம் செய்துவந்தார். இதனால் கருணாஸ் ஆதரவாளர்களால் பாண்டித்துரைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது உயிருக்கு கருணாஸ் மற்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் முத்துராமலிங்கம், சேதுபதி ஆகியோரால் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு கேட்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாண்டித்துரை சில நாள்களுக்கு முன்னர் மனு கொடுத்திருக்கிறார். பல்வேறு வழக்குகள் தொடர்பாக சேதுபதியை போலீஸார் தேடிவரும் நிலையில் அவர் தலைமறைவாகியிருக்கிறார்.

இன்று காலை 4 மணி அளவில் பாண்டித்துரையின் வீட்டின் காம்பவுண்டு கதவின்மீது பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் எறியப்பட்டுள்ளன. வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பகுதியில் கண்ணாடி பாட்டில் துண்டுகள் சிதறிக்கிடந்திருக்கின்றன. இது குறித்து மதுரையிலிருந்த பாண்டித்துரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பரமக்குடிக்கு வந்த பாண்டித்துரை இது குறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

சேதப்படுத்தப்பட்ட கார்.
சேதப்படுத்தப்பட்ட கார்.
உ.பாண்டி

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் பாண்டித்துரை வீட்டு முன் வீசப்பட்டிருந்ததுடன், அவர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வேறு நபர்களுக்குச் சொந்தமான இரு வாகனங்கள் சேதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு