Published:Updated:

பாமக பிரமுகர் தற்கொலை; திமுக ஒன்றியக்குழுத் தலைவரை குற்றம்சாட்டும் உறவினர்கள்... என்ன நடந்தது?

தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்

தி.மு.க-வின் காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகனின் மிரட்டலுக்குப் பயந்து பா.ம.க பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக எழுந்திருக்கும் புகார், பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

பாமக பிரமுகர் தற்கொலை; திமுக ஒன்றியக்குழுத் தலைவரை குற்றம்சாட்டும் உறவினர்கள்... என்ன நடந்தது?

தி.மு.க-வின் காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவர் வேல்முருகனின் மிரட்டலுக்குப் பயந்து பா.ம.க பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதாக எழுந்திருக்கும் புகார், பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

Published:Updated:
தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவுக்குட்பட்ட பெரியபோடிநத்தம் கிராமம், ராமர் கோயில் தெருவிலுள்ள கடைசி வீட்டில் வசித்து வந்தார் நாகேஷ்வரன், வயது 50. பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் நாகேஷ்வரன், அந்தக் கட்சியில் ஒன்றியப் பொருளாளர் பதவியையும் வகித்திருக்கிறார். தற்போது, பெரியபோடிநத்தம் கிராமத்துக்கு அருகேயுள்ள மகிமண்டலம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் வள்ளிமலை வேல்முருகனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, நாகேஷ்வரன் இன்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக புகார்ப் பரபரக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட நாகேஷ்வரன்
தற்கொலை செய்துகொண்ட நாகேஷ்வரன்

தற்கொலைக்குத் தூண்டியதாக ஒன்றியக் குழுத்தலைவர் வேல்முருகன் மீது வழக்கு பதிவுசெய்து, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நாகேஷ்வரனுக்கு ஆதரவாக பா.ம.க-வினர் திரண்டுப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த காவல்துறையினரிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர். தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகனுக்கு ஆதரவாக செயல்படுவதாக காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு வைத்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இது தொடர்பாக, மேல்பாடி காவல் நிலையத்தில் நாகேஷ்வரனின் தம்பி பாலாஜி கொடுத்த புகார் மனுவில், ‘‘என் அண்ணன் வசித்துவந்த அவரது வீட்டுக்கு எதிரே ஊர்ப் பஞ்சாயத்துக்குச் சொந்தமான பொதுகுடிநீர்க் குழாய் இருக்கிறது. இதன் அருகில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலம் அமைந்திருக்கிறது. அந்த நிலத்துக்கு பாதை ஏற்படுத்துவதற்காக கடந்த 03-12-2022 அன்று கிருஷ்ணன் மற்றும் அவரது மகன்கள் சிவராமன், அரிக்கிருஷ்ணன் மற்றும் பெருமாங்குப்பம் தலைவர் கோட்டீஸ்வரன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டுவந்து பொதுகுடிநீர்க் குழாயை அகற்றியும், அதன் அருகிலிருந்த வாழை மரங்களை பிடுங்கி எறிந்தும் நிலத்துக்கு பாதை ஏற்படுத்தினர்.

தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்
தி.மு.க ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன்

‘பொதுக்குழாயை அகற்றுவது தவறு’ என ஊர்மக்கள் சிலருடன் சேர்ந்து என் அண்ணன் நாகேஷ்வரன், அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தக் கும்பல், என் அண்ணனை ஆபாசமாகத் திட்டி அடிக்கப் பாய்ந்தனர். அதோடு, ‘அடித்துக் கொன்று நிலத்திலேயே புதைத்துவிடுவோம்’ என்றும் மிரட்டினார்கள். இதுபற்றி அன்றைய தினமே மேல்பாடி காவல் நிலையத்தில் என் அண்ணன் நாகேஷ்வரன் புகாரளித்தார். அந்தப் புகாரின்பேரில் காவல்துறையினர் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, 19-12-2022 அன்றைய தினம், எதிர்த் தரப்புக்கு ஆதரவாக தி.மு.க-வைச் சேர்ந்த காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் வேல்முருகன் என் அண்ணனை அழைத்து புகார் மனுவை ‘வாபஸ்’ பெற்றுக்கொள்ளுமாறு மிரட்டினார்.

புகார் மனுவை வாபஸ் வாங்காவிட்டால், என் அண்ணன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் போலீஸை வைத்து பொய் வழக்குப்போட்டு அசிங்கப்படுத்துவதாக மிரட்டி, ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டினார். புகார் மனுவை வாபஸ் பெறாத காரணத்தினால், ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன் சொன்னதை போலவே, போலீஸார் நேற்றைய தினம் என் அண்ணன் வீட்டுக்கு வந்தனர். இன்று காலை 10 மணிக்கு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு கூறிவிட்டு சம்மன் கொடுத்துவிட்டுச் சென்றனர். இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான என் அண்ணன் நாகேஷ்வரன் இன்று விடியற்காலை 5 மணிக்கே அவரது நிலத்திலுள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். எனவே, என் அண்ணனை மிரட்டி மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்குத் தூண்டிய ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகன் உட்பட அனைவரது மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருக்கிறார்.

போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த உறவினர்கள்
போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த உறவினர்கள்

இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வேல்முருகனிடமே விளக்கம் கேட்டோம். ‘‘என் மீது கொடுக்கப்பட்டிருக்கும் புகார் முற்றிலும் தவறானது. அதில் உண்மைத்தன்மை இல்லை. பிரச்னைக்குரிய அந்த நிலத்துக்குச் செல்லும் வழியை நாகேஷ்வரன்தான் ஆக்கிரமித்து வைத்திருந்தார். நிலத்தின் உரிமையாளரான கிருஷ்ணன் யாரென்றே எனக்குத் தெரியாது. ஆக்கிரமிப்புகளை அகற்றித்தருமாறு கிருஷ்ணன், தாசில்தாரிடம் ஒரு மனு கொடுக்கிறார். அந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதற்காக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் அங்குச் சென்றனர். அப்போது, பிரச்னை அறிந்து நானும் உடன் சென்றேன்.

நாங்கள் நாகேஷ்வரனை மிரட்டவே இல்லை. பேச்சுவார்த்தைக்குப் பின் அவரே வழிவிடுவதாகச் சொல்லிவிட்டார். அதோடு பிரச்னைத் தீர்ந்தது. அந்தக் கிராமத்தில் நான்கைந்து தெருக்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. நாகேஷ்வரன் தனது ஆக்கிரமிப்பை அகற்றுவதாகச் சொன்னதால், ஊர்மக்கள் அவர் மீது கோபப்பட்டிருக்கிறார்கள். ஊர்மக்களின் நெருக்கடியால்தான் நாகேஷ்வரன் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். உண்மையில் அவர் நல்ல மனிதர். பாட்டாளி மக்கள் கட்சியினர் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக என் பெயரை இழுத்துவிட்டிருக்கிறார்கள். அந்தக் கட்சி மட்டுமின்றி, அங்குள்ள அ.தி.மு.க-வினரும் எனக்கெதிராக புகார் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் எப்போதுமே எல்லோருக்கும் நல்லதை மட்டுமே செய்பவன்’’ என்றார்.