Published:Updated:

அரியலூரில் பா.ம.க பிரமுகர் வெட்டிக்கொலை! - தேர்தல் முன்விரோதத்தால் நடந்த பயங்கரம்

எம்.திலீபன்

தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பா.ம.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். தி.மு.க ஒன்றிய செயலாளர் மற்றும் அவரின் மகன் தலைமறைவான சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட சரண்ராஜ்
கொலை செய்யப்பட்ட சரண்ராஜ்

அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல். தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். அவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க பிரமுகரான கருணாநிதி ஆகிய இருவருக்கும் தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருந்து வருகிறது.

கொலை
கொலை

இருதரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தி.மு.க ஒன்றியச் செயலாளரின் மகன் விக்கி மற்றும் அவரின் நண்பர் ராஜா ஆகியோர் ஏலாக்குறிச்சி பெட்ரோல் பங்கில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த வழக்கில் பா.ம.க பிரமுகர் கருணாநிதியின் ஆதரவாளரான செட்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் என்பவர் மீது முக்கிய குற்றவாளியாக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவ்வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

இந்நிலையில், சில மர்மநபர்கள் நேற்றிரவு கள்ளூர் பாலம் அருகேயுள்ள கருப்பசாமி கோயிலின் முன்பு சரண்ராஜைச் உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதில் சரண் ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணைக்காக தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல், அவரின் மகன் விக்கி மற்றும் அவரின் ஆதரவாளர்களை காவல்துறையினர் தேடியதில் அனைவரும் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது. என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினரிடம் பேசினோம்.

திமுக.ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல்
திமுக.ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல்

``திமுக ஒன்றியச் செயலாளர் ஜோதிவேல் மற்றும் பா.ம.க ஒன்றியச் செயலாளர் கருணாநிதி ஆகிய இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பகுதியில் யார் பெயர் எடுப்பது மற்றும் கட்சிப் போட்டியால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நடந்து முடிந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களின்போதும்கூட இருதரப்பிலும் அடிதடி ஏற்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தநிலையில் கடந்த மாதம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஜோதிவேலின் மகனை திருமானூர் பெட்ரோல் பங்கில் வைத்து சரண்ராஜ் என்பவர் வெட்டியிருக்கிறார். அதில் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டிருக்கிறது. இதில், முக்கிய குற்றவாளியான சரண்ராஜ் தலைமறைவாக இருந்துள்ளார். இவரைத் தேடிப் பிடித்துக் கொலை செய்திருக்கிறார்கள் ஜோதிவேல் ஆதரவாளர்கள்'' என்றனர்.