Published:Updated:

காதல் விவகாரம்? -`பயிற்சி மருத்துவரைக் கடத்தி சித்ரவதை செய்த திமுக நிர்வாகி; கைது செய்த போலீஸ்!'

முருகப்பெருமாள் ஓட்டப்பிடாரத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்துக்குக் கடத்தி வரப்பட்டு, சுமார் 1 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள். இவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அதே மருத்துவமனையில், பணிபுரிந்து வரும் பயிற்சி மருத்துவர் ஒருவரை முருகப்பெருமாள் காதலித்து வந்திருக்கிறார். அந்த பெண் மருத்துவரும் முருகப்பெருமாளை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண் மருத்துவரின் வீட்டுக்குத் தெரிந்திருக்கிறது. அந்தப் பெண் மருத்துவரின் தாயார் தூத்துக்குடியில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி

அவர் தன் மகளின் காதல் விவகாரத்தைத் தீர்த்து வைக்க, தன் முன்னாள் மாணவரான ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத் தலைவரும், ஓட்டப்பிடாரம் தி.மு.க வடக்கு ஒன்றிய பொறுப்பாளருமான இளையராஜாவிடம் முருகப்பெருமாள் குறித்துக் கூறியிருக்கிறார். அதையடுத்து, கடந்த 18-ம் தேதி இளையராஜா, தன் ஆதரவாளர்கள் இருவருடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணி முடித்துவிட்டுத் திரும்பிய, பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாளை மருத்துவமனை வளாகத்தில் வைத்தே வழிமறித்து வெள்ளை நிறக் காரில் கடத்திச்சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்த கடத்திச்செல்லப்பட்ட முருகப்பெருமாளை, ஓட்டப்பிடாரம் அருகே தோட்டத்தில் அடைத்து வைத்து கொடுவாள், அரிவாள், இரும்பு பைப், உருட்டுக்கட்டை போன்ற பயங்கர ஆயுதங்களால் இளையராஜாவும், அவர் ஆள்களும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவர் அலுவலகத்துக்குக் கடத்தி வந்து, அங்கும் சுமார் 1 மணி நேரம் வரை அடித்து சித்ரவதை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

தாக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள்
தாக்கப்பட்ட பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள்

இதையடுத்து பயிற்சி மருத்துவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பர்ஸ் உள்ளிட்ட பொருள்களை இளையராஜா அபகரித்துக் கொண்டு, மீண்டும் அவரை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போது, ``இன்னும் ஒரு மணி நேரத்துல நீ தூத்துக்குடியை விட்டு ஓடிடணும். இங்க நடந்ததை யார்கிட்டயாவது சொன்னா... உன்னையும் உன் குடும்பத்தையும் கூண்டோடு அழிச்சுடுவேன்" என இளையராஜா மிரட்டினாராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் உயிருக்குப் பயந்து படுகாயங்களுடன் மதுரையில் இருக்கும் அவர் நண்பர் வீட்டுக்குச்சென்று அடைக்கலம் புகுந்திருக்கிறார். பின்னர், செங்கல்பட்டில் உள்ள குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உதவியுடன் கடந்த 19-ம் தேதி இரவு 10 மணிக்குத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முருகப்பெருமாள் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இளையராஜா
இளையராஜா

இதுதொடர்பாக முருகப்பெருமாள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் இளையராஜாவை போலீஸார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய TN 65 AA 7444 XUV என்ற வெள்ளை நிறக் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஊராட்சி ஒன்றிய தலைவர் இளையராஜாவின் ஆதரவாளர்கள் 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

`சிறுமிக்குப் பாலியல் கொடுமை; இறந்தநிலையில் பிறந்த சிசு!' -போலீஸில் சிக்கிய தூத்துக்குடி திமுக பிரமுகர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு