Published:Updated:

`இது தமிழ்நாடு அல்ல' - சென்னையைச் சேர்ந்த கேரள ஹைகோர்ட் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற டிரைவர் கைது!

கேரள தலைமை நீதிபதி மணிக்குமார்

தலைமை நீதிபதியின் காரைப் பின்தொடர்ந்து ஸ்கூட்டரில் வேகமாக வந்த நபர் ஒருவர், கோச்சிறி பாலம் அருகே திடீரென நீதிபதியின் காரை வழிமறித்து அவரைத் தாக்க முயன்றார்.

`இது தமிழ்நாடு அல்ல' - சென்னையைச் சேர்ந்த கேரள ஹைகோர்ட் தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற டிரைவர் கைது!

தலைமை நீதிபதியின் காரைப் பின்தொடர்ந்து ஸ்கூட்டரில் வேகமாக வந்த நபர் ஒருவர், கோச்சிறி பாலம் அருகே திடீரென நீதிபதியின் காரை வழிமறித்து அவரைத் தாக்க முயன்றார்.

Published:Updated:
கேரள தலைமை நீதிபதி மணிக்குமார்

சென்னையைச் சேர்ந்த நீதிபதி மணிக்குமார், கொச்சியிலுள்ள கேரளா ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாகக் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதி மணிக்குமார், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கொச்சி விமான நிலையத்திலிருந்து தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது சேராநல்லூர் கோச்சிறி பகுதியில் ஒருவர் தலைமை நீதிபதியின் காரைப் பின்தொடர்ந்து ஸ்கூட்டரில் வேகமாக வந்தார். கோச்சிறி பாலம் அருகே அவர் திடீரென நீதிபதியின் காரை வழிமறித்தார். நீதிபதியின் கார் டிரைவர் உடனே காரை நிறுத்தினார். அந்த நபர் பின்னர் ஆவேசத்துடன் காருக்கு அருகே சென்று தலைமை நீதிபதியைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார். ``இது தமிழ்நாடு இல்லை..." எனக் கூறி கெட்டவார்த்தையால் நீதிபதியைத் திட்டியதுடன் அவரைத் தாக்க முயன்றிருக்கிறார். நீதிபதியின் வாகனத்துக்குப் பின்னால் தனி வாகனத்தில் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றனர்.

கைதுசெய்யப்பட்ட டிஜோ
கைதுசெய்யப்பட்ட டிஜோ

பின்னர் தலைமை நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த நபர்மீது வழக்கு பதிவுசெய்து போலீஸார் விசாரணை நடத்தினர். மது போதையிலிருந்த அவர் பெயர் டிஜோ என்றும், கன்டெய்னர் லாரி டிரைவராக இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இடுக்கி உடும்பன்சேலைப் பகுதியைச் சேர்ந்த டிஜோ மீது கொலை முயற்சி பிரிவில் எர்ணாகுளம் முளவுகாடு போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். அவரது ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயம் தன்மீது ஹைகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இல்லை என்றும், நீதிபதியின் காரைச் சுற்றியது உண்மைதான், வேறு எதுவும் பேசவில்லை எனவும் டிஜோ தெரிவித்திருக்கிறார்.

பறிமுதல்செய்யப்பட்ட ஸ்கூட்டர்
பறிமுதல்செய்யப்பட்ட ஸ்கூட்டர்

ஆனால், ``டிஜோ மீது உடும்பன்சோலையில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. காரில் செல்வது நீதிபதி எனத் தெரிந்தே அவர் வழிமறித்து திட்டி, தாக்க முயன்றிருக்கிறார். அதற்கான காரணம் குறித்து விசாரித்துவருகிறோம்" என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.