Published:Updated:

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; மாமியாரைக் குத்திக் கொன்ற மருமகன்! - நடந்தது என்ன?

கொலை
News
கொலை

சென்னையில் மாமியாரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸார் கைதுசெய்தனர்.

சென்னை வியாசர்பாடி அன்னை சத்யா நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் லதா (42). இவரின் மகள் சுதா. இவருக்கும் மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த பாலாஜிக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுதாவுக்கும் பாலாஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த சுதா, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வியாசர்பாடியில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.

திருமணம்
திருமணம்

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி பாலாஜி, தன்னுடைய நண்பர் திவ்யநாத் என்பவரை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது சுதாவைக் குடும்பம் நடத்த வரும்படி கூறி பாலாஜி தகராறில் ஈடுபட்டார். அதனால், மாமியார் வீட்டாருக்கும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாலாஜி, கத்தியால் தன் மனைவி சுதாவைக் குத்திக் கொலை செய்ய முயன்றார். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார். அதைப் பார்த்த சுதாவின் அம்மா லதா, மகளைக் காப்பாற்ற முயன்றார். அப்போது லதாவைச் சரமாரியாக குத்திய மருமகன் பாலாஜியும், அவரின் நண்பர் திவ்யானந்தும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய லதாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் லதா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுதா, எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாமியார் லதாவைக் கொலை செய்த குற்றத்துக்காக பாலாஜி (26), அவரின் நண்பரான பெரம்பூரைச் சேர்ந்த திவ்யானந்த் (31) ஆகியோரை போலீஸார் கைதுசெய்து, அவர்களிடமிருந்து கத்தியைப் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கத்தி
கத்தி

இது குறித்து லதாவின் மகள் சுதா, எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் 19.12.2021 அன்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். என்னுடைய அப்பா சீனிவாசன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்துவருகிறார். என்னுடைய அம்மா லதா, பெரியமேடு பகுதியில் வீட்டு வேலை செய்துவந்தார். எனக்கு மூன்று தம்பிகள். நான் கடந்த 2015-ம் ஆண்டு பெரியமேடு பகுதியிலுள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்தபோது மாதவரத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். பாலாஜி, பெயின்டராக வேலை பார்த்துவருகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாதவரம் ஓமகுளத்தில் நான் என் கணவர், குழந்தைகள் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது என்னுடைய கணவர் பாலாஜி, என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை அடித்து உதைத்தார். அதனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். கடந்த 18.12.2021-ம் தேதி வீட்டுக்கு வந்த என்னுடைய கணவர், `உன் பொண்ணு என்னை ஏமாத்துறா, அதுக்கு நீயும் உடந்தையா?’ என்று அம்மாவிடம் சண்டை போட்டார். அப்போது `உன்னையும் உன் பொண்ணையும் கொல்லாம விட மாட்டேன்’ என்று மிரட்டிவிட்டுச் சென்றார். 19.12.2021-ம் தேதி மதியம் 2:45 மணியளவில் நானும் அம்மாவும் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தோம். அப்போது வீட்டுக்கு வந்த என்னுடைய கணவர் பாலாஜி, அவரின் நண்பர் திவ்யானந்த் ஆகியோர் வெளியில் நின்று என்னைக் கூப்பிட்டனர்.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

அம்மா இருவரையும் வீட்டுக்குள் வரச் சொன்னார். அப்போது என் கணவர் பாலாஜி மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து என்னைக் குத்த முயன்றார். அதை நான் தடுத்தபோது என்னுடைய இடது முழுங்கையில் காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்த என்னுடைய அம்மா தடுத்தார். அப்போது `உன்னைக் கொலை செய்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறியபடி அம்மாவைக் கத்தியால் பாலாஜி குத்தினார். அப்போது அம்மாவை திவ்யானந்த் பிடித்துக்கொண்டார். இதையடுத்து என் கணவரின் நண்பன் திவ்யானந்த், `மச்சி அவ அம்மா செத்துட்டாடா... உனக்கு எல்லா பிரச்னையும் சரியாகிவிடும்டா' என்று சொன்னான். நான் அம்மாவைப் பார்த்து கதறி அழுதேன். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அம்மாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அங்கு அம்மா இறந்துவிட்டதாகக் கூறினர். என்னுடைய அம்மாவைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பாலாஜி, அவரின் நண்பர் திவ்யானந்த் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீஸார், ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.