Published:Updated:

`ஹலோ.. நாங்க அமித் ஷா வீட்டிலிருந்து பேசுகிறோம்!’- ஹரியானா அமைச்சரைப் பதற வைத்த போன்கால்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டு போனை ஹேக் செய்து அதன் மூலம் ஹரியானா அமைச்சருக்கு போன் செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமித் ஷா
அமித் ஷா

அதிவேக தொழில்நுட்ப யுகத்தில் தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கையில் உள்ள செல்போன் பட்டனைத் தட்டினால் நமக்குத் தேவையான பொருள்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன. இந்த அளவுக்குத் தொழில்நுட்பம் இந்தக் கால மக்களின் அங்கமாக மாறிவிட்டது. இதனால் பல்வேறு நன்மைகள் நடந்தாலும் அதை விட இரண்டு மடங்கு அதிகமான தீமைகளும் தினம் தினம் நடந்துகொண்டேதான் உள்ளன.

தொலைபேசி
தொலைபேசி
மாதிரி புகைப்படம்

இப்படியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீடு மற்றும் அலுவலக லேண்ட் லைன் போன் எண்களைக் கொண்டு மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹரியானா மாநில மின்துறை அமைச்சர் ரஞ்சித் சிங் சௌதாளாவுக்குக் கடந்த டிசம்பர் 20-ம் தேதி அமித் ஷா வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து போன் சென்றுள்ளது. எதிர்முனையில் பேசிய நபர், ‘டெல்லி, கிருஷ்ணா மேனன் பகுதியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டிலிருந்து பேசுகிறேன். கட்சி நிதிக்காக ரூபாய் 3 கோடி தேவைப்படுகிறது. விரைவில் தரவேண்டும் என அமைச்சர் சொன்னார்’ என்று கட்சி மூத்த நிர்வாகிகளைப் போல் பேசியுள்ளார்.

அமித் ஷா மீது வருத்தத்தில் இருக்கிறாரா மோடி?

இதைக் கேட்டு ஹரியானா அமைச்சர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். அடுத்த சில நாள்களில் தொடர்ந்து இதேபோல அமி த்ஷா அலுவலகம் மற்றும் வீட்டு எண்ணிலிருந்து போன் செய்து பணம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சௌதாளா, உடனடியாக அமித் ஷாவின் சிறப்பு அதிகாரிக்கு போன் செய்து, ‘என்னிடம் அமைச்சர் பணம் கேட்டாரா எனக்கு போன் வந்தது உண்மையா’ என்று விசாரித்துள்ளார். ‘அமைச்சர் அப்படி யாரிடமும் பணம் கேட்கவில்லை, உங்களுக்கு போன் செய்யவில்லை’ எனச் சிறப்பு அதிகாரி கூறியதைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளார் சௌதாளா.

ரஞ்சித் சிங்  சௌதாளா
ரஞ்சித் சிங் சௌதாளா

பின்னர் இந்த விஷயம் பெரிதாகவே, அமித் ஷாவின் சிறப்பு அதிகாரி டெல்லி காவல்துறைக்கு இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். உள்துறை அமைச்சர் விவகாரம் என்பதால் டெல்லி சிறப்பு காவல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அமைச்சரின் போனை ஹேக் செய்தவரைத் தேடும் பணி தொடங்கியது. அவர் பேசிய சிக்னல் ஹரியானாவில் காட்டியுள்ளது. இதை வைத்து மர்ம நபரின் இடத்தை அறிந்த டெல்லி காவல்துறையினர், ஹரியானா போலீஸாரின் உதவியுடன் மர்ம நபர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து, ஹரியானா அமைச்சர் சௌதாளா பேசுவது போல அந்த மர்ம நபருக்கு போன் செய்து ஹரியானா, பவான் பகுதிக்கு வந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து போனில் கூறிய இடத்துக்கு மர்ம நபர் வரவே அவரை மடக்கிப் பிடித்து டெல்லி காவலர்கள் கைது செய்துள்ளனர். அவரிடம் நடந்த விசாரணையில் மேலும் ஒருவருக்கும் இதில் தொடர்புடையது தெரிய வந்து கடந்த வெள்ளிக்கிழமை அவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட ஆப்
தடைசெய்யப்பட்ட ஆப்

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள காவல்துறையினர், “கைது செய்யப்பட்ட இருவரும் உப்கார் சிங் (47) ஜக்தர் சிங் (42) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்தான் இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் சந்தித்துப் பேசியுள்ளனர். பின்னர் நெருக்கமான இவர்கள், டிவியில் ஒளிபரப்படும் கிரைம் நிகழ்ச்சிகளைப் பார்த்து அதேபோல் ஏதேனும் செய்ய வேண்டும் என யோசித்து உள்துறை அமைச்சர் வீடு மற்றும் அலுவலக எண்ணைத் தவறாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கைதானவர்களில் உப்கார், பி.ஹெச்டி படித்துள்ளார். அவர்தான் இந்த யோசனையையும் வழங்கி அதற்கான வழிமுறைகளை கூறியுள்ளார். ஹரியானா அமைச்சரின் போன் எண்ணைத் தேடும் பணிகளை ஜக்தர் சிங் செய்துள்ளார். இவர்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட `கிரேஸி கால்’ என்ற ஆப் மூலம் இந்த வேலையைச் செய்துள்ளனர். ஒபேரா வெப் பிரௌசர் மூலம் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து ஏமாற்றியுள்ளனர். இவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சரின் தொலைபேசியையே தவறாகப் பயன்படுத்தி மோசடிக்கு முயற்சி செய்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.