Published:Updated:

`2 டன், 200 பெட்டிகள்; பிஸ்கட் குடோனில் குட்கா பதுக்கல்!’ - வேலூரில் சிக்கிய அ.தி.மு.க பிரமுகர்

குட்கா ஏற்றி வந்த வாகனங்கள்
குட்கா ஏற்றி வந்த வாகனங்கள்

வேலூர் அருகே பிஸ்கட் குடோனில் பதுக்கிவைத்திருந்த இரண்டு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ரெய்டில் சிக்கிய அ.தி.மு.க பிரமுகர் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டதால் சட்டை கிழிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பாக்குகள், வேலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்துவருகிறது. பெங்களூரு உட்பட வெளி நகர மார்க்கெட்டுகளிலிருந்து குட்காவை லோடு லோடாக கொண்டுவந்து பதுக்கி வைக்கிறார்கள்.

குடோன்
குடோன்

இந்த நிலையில், வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் பகுதியில் உள்ள பிஸ்கட் குடோனில் தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு சிறுசிறு பெட்டிக் கடைகளில் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக விரிஞ்சிபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட குடோனில் 23-ம் தேதி மாலை அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து இரண்டு லோடு வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் வந்திருந்தன.

அ.தி.மு.க பிரமுகர் சக்திவேல்
அ.தி.மு.க பிரமுகர் சக்திவேல்

அவற்றை இறக்கிக்கொண்டிருந்த நபர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதுதொடர்பாக, குடோன் உரிமையாளரான அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சக்திவேல் உட்பட 9 பேரை விசாரணைக்காக காரில் ஏற்ற முயன்றனர்.

அப்போது, அ.தி.மு.க பிரமுகர் சக்திவேல், காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபட்டார். இதில், அவரின் சட்டை கிழிந்தது. நீண்ட நேரமாக காரில் ஏறாமல் அடம்பிடித்த அவரை குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றிக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அ.தி.மு.க பிரமுகர் சக்திவேல்
அ.தி.மு.க பிரமுகர் சக்திவேல்

200 பெட்டிகளிலிருந்த இரண்டு டன் எடையிலான குட்கா, பான்மசாலா போன்ற போதைப் பாக்குகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், குட்கா கடத்தல் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து பிடிபட்ட 9 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு