Published:Updated:

விநாயகர் விழா தகராறு; காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ- என்ன நடந்தது?

துப்பாக்கிச்சூடு நடத்திய ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ

போலீஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்.எல்.ஏ-மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

விநாயகர் விழா தகராறு; காவல் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ- என்ன நடந்தது?

போலீஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா எம்.எல்.ஏ-மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:
துப்பாக்கிச்சூடு நடத்திய ஷிண்டே ஆதரவு எம்எல்ஏ

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்துவிட்டாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைவரை விநாயகர் சிலைகள் கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை கரைப்பின்போது சிவசேனாவின் இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன. தாதரில் வெள்ளிக்கிழமையே ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவினர் மோதலில் ஈடுபட முயன்றனர். ஆனால் அதிகப்படியான போலீஸ் பாதுகாப்பு காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

மும்பை கடற்கரை
மும்பை கடற்கரை

ஆனால் அடுத்த நாள் இரவு மீண்டும் இரு அணிகளும் மோதிக்கொண்டன. ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே அணிகளைச் சேர்ந்தவர்கள் சிலை கரைப்புக்கு வருபவர்களுக்குத் தண்ணீர் வழங்க சிறிய அளவில் ஷெட் அமைத்திருந்தனர். உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்தவர்கள், ஷிண்டே அணியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை அடித்து அவரிடமிருந்த செயினை பிடுங்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினரும் தாதரில் கடுமையாக மோதிக்கொண்டனர்.

அர்விந்த் சாவந்த்
அர்விந்த் சாவந்த்

கல்வீச்சுத் தாக்குதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர். உடனே இரவு 12:30 மணிக்கு இரு தரப்பினரும் தாதர் போலீஸ் நிலையத்துக்குப் புகார் கொடுக்கச் சென்றனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டு ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ சதா சர்வான்கர் தன் மகனுடன் வந்தார். உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி அர்விந்த் சாவந்த், சட்டமேலவை உறுப்பினர் சச்சின் அஹிர் ஆகியோரும் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். இதனால் நள்ளிரவில் காவல் நிலையம் போர்க்களமாக மாறியது. காவல் நிலைய வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சதா சர்வான்கர், உத்தவ் தாக்கரே ஆதரவாளர்களை மிரட்டுவதற்காக தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டார்.

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

காவல் நிலையத்தில் செயின் பறிப்பு தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று உத்தவ் அணியின் அர்விந்த் சாவந்த் மனு கொடுத்தார். அதோடு எம்.எல்.ஏ-மீது வழக்கு பதிவுசெய்யாவிட்டால் சிவசேனா தொண்டர்கள்மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

காவல் நிலையம் முற்றுகை!

கைது தொடர்பான செய்தி வெளியானவுடன் மும்பை முழுவதுமிருந்து சிவசேனா தொண்டர்கள் தாதர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய எம்.எல்.ஏ-மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். போலீஸார் கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது துப்பாக்கிச்சூடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மாலைவரை இந்தப் போராட்டம் நீடித்ததால் வேறு வழியில்லாமல் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ சதா சர்வான்கர்மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இரு தரப்பையும் சேர்ந்த 25 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதோடு காணாமல்போன செயின் திரும்பக் கிடைத்தால் செயின் பறிப்பு வழக்கு திரும்பப் பெறப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதோடு, கைதான ஐந்து பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

சதா சர்வான்கர் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தான் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றும், தன்னுடைய பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், போலீஸார் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றும் சதா சர்வான்கர் தெரிவித்தார். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஐந்து பேரும் நேராக எம்.பி அர்விந்த் சாவந்த்துடன் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விளக்கினர்.