Published:Updated:

`ஃபேஸ்புக் பதிவு; எச்சரிக்கை!’- பா.ம.க நிர்வாகியை வீடுபுகுந்து தாக்கிய இன்ஸ்பெக்டர்

இன்ஸ்பெக்டர் தாக்குதல்
இன்ஸ்பெக்டர் தாக்குதல்

`என் உயிரை விடவும் தயங்க மாட்டேன். என்பதை சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சுகாதர் அவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த காவல்துறை இன்ஸ்பெக்டர், சுதாகர். இவர், தன் காவல் எல்லைக்கு உட்பட்ட மூங்கில்பாடி கிராமத்திற்குள் மதுபோதையில் இரவு நேரத்தில் சென்று, அங்குள்ள பா.ம.க வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. சக்திவேலின் பெற்றோர் பதறிப்போய், இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சித் தடுக்க, அவர்களையும் ஒருமையில் திட்டி, தாக்க முயன்றதாகச் சொல்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, இன்ஸ்பெக்டர் சுகாதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுகாதர்
சுகாதர்

நடந்தது என்னவென்று பா.ம.க வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேலிடம் கேட்டதற்கு, ``இன்ஸ்பெக்டர் சுகாதர் மிகவும் மோசமானவர். சின்னசேலம் காவல் எல்லைக்கு உட்பட்ட தகரை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், அவருடைய கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக டிஎஸ்பி-க்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதையடுத்து, அக்கிராமத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சுதாகர், 'சாராயம் காய்ச்சுவதாக டிஎஸ்பி-யிடம் ஏன் சொன்னாய்' என்று அடித்துத் துன்புறுத்தியுள்ளார்.

ராயப்பூர் வி.கூட்ரோட்டில் இன்ஸ்பெக்டர் சுதாகர் வாகனச் சோதனை செய்து பலரையும் பிடித்துக்கொண்டிருந்தார். ராயப்பூரைச் சேர்ந்த பா.ம.க தொண்டர்கள் அந்த வழியாக வருபவர்களிடம் இன்ஸ்பெக்டர் வாகனச் சோதனையில் இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் ஒருவர் அந்த வழியாக வந்திருக்கிறார். அவரிடமும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த வி.சி.க வழக்கறிஞர் இன்ஸ்பெக்டரிடம், பா.ம.க தொண்டர்கள் சாதி பெயரைச் சொல்லி திட்டுவதாகக் கூறி இருக்கிறார். அதையடுத்து ராயப்பூர் வந்த இன்ஸ்பெக்டர், இரண்டு பா.ம.க தொண்டர்களைப் பிடித்து அடித்து, பொய் வழக்கு போட்டுள்ளார். இந்தத் தகவல் பா.ம.க ஒன்றிய செயலாளர் என்கிற முறையில் எனக்கு வந்தது. அதையடுத்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெரியவர்களை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தேன். அவர்களை கொச்சையாகத் திட்டியிருக்கிறார்.

அதையடுத்து 10-ம் தேதி இரவு 9:00 மணிக்கு, ``சின்னசேலம் வடக்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களைப் பொய் வழக்குகள் மூலமாக இனி தொட வேண்டும் என்று நினைத்தால், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக என் கட்சியின் தொண்டர்களுக்கும் என் சமுதாய மக்களுக்காகவும் என் உயிரை விடவும் தயங்க மாட்டேன். என்பதை சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சுகாதர் அவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று என்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன்.

சக்திவேல்
சக்திவேல்

அன்று இரவு 9:45 மணிக்கு, மது போதையில் இன்ஸ்பெக்டரும், காவலர்கள் 6 பேரும் என் வீட்டிற்கு வந்தார்கள். மின்சாரத்தை ஆஃப் செய்துவிட்டு இன்ஸ்பெக்டர் என் வீட்டிற்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினார். நான் எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை. என் அப்பா, அம்மா அவருடைய காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்கள். அவர்களை ஒருமையில் பேசியதோடு எட்டி உதைத்தார். பிறகு, என்னைக் காவல் நிலையத்திற்கு தூக்கிப் போய் என்னையும் என் கட்சித் தலைவர்களையும் கொச்சையாகப் பேசி அடித்துத் துன்புறுத்தினார்'' என்றார்.

இதுபற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``இன்ஸ்பெக்டர் செய்தது தவறு. அதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அதே சமயத்தில், சக்திவேல் தீவிர சாதிய சிந்தனை கொண்டவர். பொங்கல் பண்டிகையின்போது சக்திவேலின் கிராமத்திற்குத் தலித் இளைஞர்கள் வந்தார்கள் என்பதற்காக, அவர்களை சக்திவேலும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து அடித்து பிரச்னை செய்துள்ளனர். இது, இரண்டு கிராமங்களுக்கு இடையிலான பிரச்னையாக மாறியது. இதனால் சக்திவேல் மீதும், அவருடைய நண்பர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டுள்ளோம்'' என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு