Published:Updated:

கண்காணிப்பு கேமரா, கணினி மாயம்! - விசாரணை வளையத்தில் மண்டபம் அகதிகள் முகாம்

இரா.மோகன்
உ.பாண்டி

அகதிகளைக் கண்காணிக்கவும் வெளி நபர்கள் அகதிகள் முகாமிற்குள் செல்வதைத் தடுக்கவும், முகாம் நுழைவு வாயில், உள் பகுதி மற்றும் தென் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

CCTV Camera
CCTV Camera

மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாம் நுழைவு வாயில் மற்றும் அகதிகள் மறுவாழ்வு தனி துணை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கணினி ஆகியன திருடு போனதாக, போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mandapam refugee camp
mandapam refugee camp

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு (இலங்கை அகதிகள் ) முகாம் உள்ளது. தற்போது, இங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1,700-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். முகாமில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. காலை 6 மணிக்கு மேல்தான் முகாமை விட்டு வெளியே செல்ல முடியும். அவ்வாறு செல்பவர்கள், மாலை 6 மணிக்குள் முகாமிற்கு திரும்பிவிட வேண்டும். மருத்துவ சிகிச்சை மற்றும் வெளியூரில் உள்ள உறவினர்களைக் காணச் சென்றால், அதற்கென தனி அனுமதியைப் பெற்ற பிறகே செல்ல முடியும்.

இங்கு தங்கியுள்ள அகதிகளை கண்காணிக்கவும் வெளி நபர்கள் அகதிகள் முகாமிற்குள் செல்வதைத் தடுக்கவும், முகாம் நுழைவு வாயில், உள் பகுதி மற்றும் தென் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவை தவிர மத்திய, மாநில புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த போலீஸாரும் அகதிகளைக் கண்காணித்துவருவர்.

mandapam refugee camp
mandapam refugee camp

இந்த முகாமினுள் அரசு மருத்துவமனை, தொடக்கப்பள்ளி மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியனவும் இயங்கிவருகின்றன. இங்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர், உரிய விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், முகாமை விட்டு வெளியே வந்து செல்லும் அகதிகளின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, முகாம் நுழைவு வாயில் மற்றும் தனி துணை ஆட்சியர் அலுவலகத்தில் (மறுவாழ்வு) சில மாதங்களுக்கு முன் கேமரா பொருத்தப்பட்டது.

இந்நிலையில், நுழைவு வாயிலில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா, ஆகஸ்ட் 11-ம் தேதி இரவிலும், இரு நாள்களுக்குப் பின் அலுவலகத்தில் இருந்த கணினியும் திருடு போயின. இது தொடர்பாக அன்றைய தினம் பணியில் இருந்த இரவுக் காவலர், அலுவலக உதவியாளர் உள்பட 5 பேரிடம் அதிகாரிகள் விசாரணைசெய்தனர். விசாரணையில், திருடுபோன பொருள்கள் குறித்து விவரம் ஏதும் தெரியவில்லை. இதையடுத்து, அகதிகள் முகாம் கண்காணிப்பு கேமரா மற்றும் கணினி திருடுபோனது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, தனி துணை ஆட்சியர் (மறுவாழ்வு) முருகேஸ்வரி, மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மண்டபம் போலீஸ் எஸ்ஐ, சிராஜுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகிறார்.

CCTV Camera
CCTV Camera

24 மணி நேர கண்காணிப்பின் கீழ் உள்ள அகதிகள் முகாம் நுழைவு வாயில் மற்றும் தனி துணை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்காணிப்புக் கருவிகள் திருடு போயிருப்பது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.