ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள், வசதி படைத்தவர்கள் கோயிலுக்குத் தங்களால் முடிந்ததை உபயமாகக் கொடுத்துவருகின்றனர்.
அவ்வாறு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி தொழிலதிபர் மார்ட்டின் என்பவர் கொடுத்த தங்க ருத்ராட்ச மாலை, வைர நெக்லஸை கோயில் பணியாளர்கள் கையாடல் செய்ததாகப் புகார் எழுந்தது. ஆனால், கோயில் இணை ஆணையரிடம் 36 லட்சம் மதிப்புள்ள ருத்ராட்ச மாலை ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பணியாளர்கள் தெரிவித்துவந்தனர்.

இதற்கிடையில், தொழிலதிபர் கொடுத்தது பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் எனவும், அவற்றைக் கோயில் ஊழியர்கள் கையாடல்செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசினார்கள். ``எங்களின் முதற்கட்ட விசாரணையில் தொழிலதிபர் மார்ட்டின் தங்க ருத்ராட்ச மாலை மட்டுமின்றி, வைரம், வைடூரியம், பவளம், மரகதம் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பெரிய நெக்லஸையும் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்ட்டின் கோயிலுக்கு வழங்கிய நகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.27 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அந்த ருத்ராட்ச மாலையையும், நகையையும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்து அறநிலையத்துறை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேற்கொண்டு தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.