Published:Updated:

`ஆசைப்பட்டுத்தான் போலீஸ் வேலையில் சேர்ந்தான்...!' - காவலர் இறப்பால் கலங்கும் மேலூர் கிராமம்

யோகேஸ்வரன்
யோகேஸ்வரன்

காவலர் யோகேஸ்வரன், பாதுகாப்புப் பணிக்காக வைத்திருந்த தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சிவகங்கை ஆயுதப்படைக் காவலர் யோகேஸ்வரன் என்பவர், திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியின் கழிப்பறையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யோகேஸ்வரன்
யோகேஸ்வரன்

மதுரை மாவட்டம் மேலுரை அடுத்த அரிட்டாபட்டியைச் சேர்ந்தவா் யோகேஸ்வரன். இவர் 2013-14ம் ஆண்டு ஆயுதப்படை காவலராகப் பணிக்குச் சேர்ந்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்துவிட்டு, சமீபத்தில் சிவகங்கை ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணி செய்துவருகிறார். இவருடன் பணியாற்றிய சக காவலர்கள், நேற்று முதல்வர் நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 6 மணிக்குத் தங்கியிருந்த அறையின் அருகே இருந்த கழிப்பறைக்குச் சென்ற யோகேஸ்வரன் நீண்டநேரமாகியும் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவருடன் பணியாற்றும் சக காவலர்கள், காலை 9 மணியளவில் கழிப்பறையின் கதவை உடைத்து திறந்திருக்கிறார்கள். அங்கு, யோகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் திருப்பத்தூர் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், யோகேஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருப்பத்தூர் போலீஸார், விசாரித்து வருகிறார்கள். காவலர் யோகேஸ்வரன், பாதுகாப்புப் பணிக்காக வைத்திருந்த தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

துப்பாக்கி
துப்பாக்கி

இதுகுறித்து காவலர் யோகேஸ்வரன் கிராமத்தினரிடம் விசாரித்தோம். ``மேலூர் பகுதியில் அரிட்டாபட்டி கிராமத்தினர் அதிகமானோர் காவல்துறை பணியில் உள்ளனர். காவல்துறை பணியில் ஆசைப்பட்டு சேர்ந்த யோகேஸ்வரன், இறந்த சம்பவத்தை நம்ப முடியவில்லை. மிகவும் அமைதியான பையன். நல்ல கபடி விளையாட்டு வீரனும்கூட.

யோகேஸ்வரனுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி உள்ளனர். அவருடைய அண்ணன், மேலூர் பகுதியில் கட்டட வேலை செய்கிறார். தம்பி வெளிநாட்டில் உள்ளார். அவர்களது தந்தை வீரனன், விவசாயப் பணிகள் செய்து வருகிறார். யோகேஸ்வரன் இறந்த செய்தி எங்கள் கிராமத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது'' என்கின்றனர்.

யோகேஸ்வரன்
யோகேஸ்வரன்

யோகேஸ்வரன் இறப்பு காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிச்சுமை காரணமாக யோகேஸ்வரன் இறந்தாரா, இல்லை வேறு எதுவும் தனிப்பட்ட பிரச்னையா என்று காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு