Published:Updated:

`ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்றுத் தெரியாது, ஆனால்..!'- முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன்

ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
News
ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. அதை நீதிமன்றம் மூலம் சந்தித்து, தான் நிரபராதி என்பதை அவர் நிரூபிப்பார்.

"ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. நாங்களும் அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவார்" என்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன்.

ஆவினிலும், பல்வேறு அரசுத்துறைகளிலும் வேலை வாங்கித்தருவதாக ரூ.3.10 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி விஜய நல்லதம்பி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் கடந்த நவம்பர் 15-ம் தேதி புகார் அளித்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி, அவர் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 17-ம் தேதி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதே நாளில் தி.மு.க அரசைக் கண்டித்து விருதுநகரில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ராஜேந்திர பாலாஜி, தன் முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதை அடுத்து காரில் ஏறித் தப்பி தலைமறைவானார். இதையடுத்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, பெங்களூர் என அவர் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் பகுதிகளில் தனிப்படையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். போலீஸாரின் தீவிர கண்காணிப்பிலிருந்து அவர் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் குற்றப்பிரிவு போலீஸார், `லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். இதற்கிடையில் கடல் மார்க்கமாகத் தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகக் கடலோரக் கண்காணிப்பையும் போலீஸார் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அவரது வங்கிக் கணக்குகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சாத்தூர் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த ஹரிபாலு, மம்சாபுரத்தை சேர்ந்த கார்த்திக் குமார், சிவகாசி குணா தூய மணி, மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், நெய்வேலியைச் சேர்ந்த ஜோசப் ராஜ், மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த செல்வராஜ், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த வெங்கடாசலம் ஆகிய 7 பேர், பல்வேறு அரசுத்துறைகளில் வேலை பெற்றுத் தருவதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் மூலம் ராஜேந்திர பாலாஜியிடம் பணம் கொடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸிடம் புகார் அளித்தனர். அந்த 7 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் ரூ.78 லட்சம் வரை பண மோசடி செய்தது தெரியவந்தது. அதையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அவர் மீது புகார் அளித்த 7 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்
ராஜேந்திர பாலாஜி - ராஜவர்மன்

இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், உதவியாளர் சீனிவாசபெருமாள் ஆகியோரிடம் மதுரை சரக டி.ஐ.ஜி காமினி, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் ஆகியோர் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்து வெளியே வந்த சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மனிடம் விசாரணை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், "ராஜேந்திர பாலாஜியும் நீங்களும் நெருக்கமானவர்கள்தானே. அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி உள்ளது? அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்றெல்லாம் விசாரணையில் கேட்டார்கள், உண்மையைச் சொன்னோம்.

கடந்த 17-ம் தேதி விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் காரில் கிளம்பிச் சென்றார். அவருடன் நாங்கள் யாரும் போனில் தொடர்பு கொள்ளவில்லை. அவரும் எங்களுடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்களும் அவர் எங்கே இருக்கிறார் எனத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. அதை நீதிமன்றம் மூலம் சந்தித்து, தான் நிரபராதி என்பதை அவர் நிரூபிப்பார். அவர் உடல் நிலை சரியில்லாதவர். அதனால்தான் அவர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். தற்போதும் உச்ச நீதிமன்றத்திலும் முன் ஜாமீன் பெற மனு அளித்திருக்கிறார்" என்றவரிடம், "ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜராவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? ஆஜராவாரா?" எனக் கேட்டதற்கு, "அவர் வர வேண்டிய நேரத்தில் நிச்சயம் வருவார்" எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.