Published:Updated:

நித்யானந்தாவிடம் கஸ்டடி... பல் மருத்துவரைத் தேடும் போலீஸ்! #TamilnaduCrimeDiary

#TamilnaduCrimeDiary
#TamilnaduCrimeDiary

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து மகனை மீட்கப் போராடும் வயதான தாயின் போராட்டம் முதல், நீலகிரியில் கொள்ளையடிக்கப்படும் கோயில் கலசங்கள் வரை... #TamilnaduCrimeDiary

ஈரோடு நாச்சியப்பா வீதியைச் சேர்ந்தவர்கள், பழனிச்சாமி - அங்குலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு, முருகானந்தம் என்ற ஒரே ஒரு மகன் இருக்கிறார். பி.டி.எஸ் (பல் மருத்துவம்) படித்த இவர், மேல்படிப்புக்காக 2003-ல் பெங்களூரு சென்றுள்ளார். அங்கே, எதேச்சையாக ஒருநாள் நித்யானந்தாவின் சொற்பொழிவைக் கேட்க, `நித்தியே சரணம்' என பிடதி ஆசிரமத்திலேயே முருகானந்தம் சரண்டராகிவிட்டார். `பிராணாசாமி’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, சாமியாராகிவிட்டார்.

பிராணாசாமி என்கிற முருகானந்தம்
பிராணாசாமி என்கிற முருகானந்தம்

விஷயம் தெரிந்து பதறிப்போன பெற்றோர், மகனை மீட்க மூன்று ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சி எடுத்து, 2006-ல் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளனர். 2006-ல் சேலம் மாவட்டம் மேட்டூரில் பல் மருத்துவ கிளினிக் ஒன்றைத் திறந்து நல்லபடி இருந்து வந்தார் முருகானந்தம். ஒரே வருடம்தான், 2007-ல் மறுபடியும் நித்தியைத் தேடி பெங்களூருக்கு ஓடிப்போய்விட்டார். வயதான தம்பதியினர், மகனை மீட்க கால்கடுக்க அலைந்தும் பலனில்லை. இதற்கிடையே, உடல்நிலை சரியில்லாமல் முருகானந்தத்தின் தந்தை பழனிச்சாமி 2017-ல் காலமாகிவிட்டார். தந்தை இறந்த செய்தியறிந்து பெங்களூரு ஆசிரமத்திலிருந்து வந்த முருகானந்தம், ஒரே நாளில் காரியங்களை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் பிடதி சென்றுவிட்டார்.

அதன்பிறகு, கணவரை இழந்த அங்குலட்சுமி அம்மாளும் ஆறுதலுக்காக அவ்வப்போது பெங்களூரு சென்று மகனைப் பார்த்துவந்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக, பெங்களூரு ஆசிரமத்தில் முருகானந்தத்தைப் பார்க்க அங்குலட்சுமி அம்மாளுக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரமத்தில் முருகானந்தம் இல்லை என்ற தகவலும் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நித்யானந்தா
நித்யானந்தா

அதைக்கேட்டு பதறிப்போன அங்குலட்சுமி அம்மாள், `நித்யானந்தாவின் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்த என் மகனைக் காணவில்லை' என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, 4 வாரத்தில் முருகானந்தம் இருப்புகுறித்து பதிலளிக்க நித்யானந்தாவுக்கும் ஈரோடு எஸ்பி-க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். அதையடுத்து, ஈரோடு போலீஸ் டீம் முருகானந்தத்தைத் தேடி பெங்களூருவில் உள்ள நித்தியின் ஆசிரமத்துக்கு விரைந்தது.

இதுகுறித்து முருகானந்தத்தின் மைத்துனர் பிரகாஷிடம் பேசினோம். ``நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்த தகவல் தெரிந்த உடனேயே, முருகானந்தம் எங்களை வீடியோ கால் மூலமாகத் தொடர்புகொண்டார். தான் நலமாக இருப்பதாகக் கூறினார். ஆனால், அவர் ஏதோ அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் உட்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. வீடியோ காலில் பேசினாலும், அவர் பெங்களூருவில்தான் இருக்கிறாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. போலீஸார் தான் முருகானந்தத்தை மீட்டு, உண்மை நிலவரத்தைத் தெரிவிக்க வேண்டும். தாயின் கடைசிக் காலத்தில் முருகானந்தம் உடனிருக்க வேண்டுமென்பதே எங்கள் குடும்பத்தின் ஆசை" என்றார்.

ஈரோடு எஸ்.பி சக்திகணேசன்
ஈரோடு எஸ்.பி சக்திகணேசன்

இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசனிடம் பேசினோம். ``தேர்தல் பணிகளால் போலீஸ் டீம் பெங்களூருக்குச் செல்லவில்லை. விரைவில் பெங்களூரு ஆசிரமத்திற்குச் சென்று, முருகானந்தம் அங்கிருக்கிறாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார்.

எஸ்பி இப்படிச் சொன்னாலும், ஈரோடு போலீஸ் டீம் ஒன்று பெங்களூருக்குச் சென்று ஆசிரமத்தில் விசாரணை நடத்தியிருக்கிறது. அப்போது, முருகானந்தம் ஆசிரமத்தில் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஜனவரி 6-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகானந்தத்தை போலீஸார் ஆஜர்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது. நீதிமன்ற விசாரணையில்தான் ஆசிரமத்தில் என்னென்ன நடந்தது என்பது தெரியவரும்.

தாய் தடம் மாறியதால், மகள்களுக்கு நேர்ந்த சோகம்...

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தைச் சேர்ந்தவர், விஜயா. இவருடைய கணவர் ரவிக்குமார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். 17 ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் விபத்தில் இறந்துவிட, மூத்த மகளை மாமியார் தனத்திடம் ஒப்படைத்து விட்டு, மற்ற இரண்டு மகள்களையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார்.

தருமபுரியில், ஓர் அரசுப் பள்ளி விடுதியில் மகள்களைச் சேர்த்து விட்ட விஜயாவின் வாழ்வு தவறான பாதைக்குச் சென்றுவிட்டது. பிரபல ரவுடி சாமுவேலுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் இணைந்து வாழ்ந்திருக்கின்றனர். இச்சூழ்நிலையில், விடுதியில் படித்த மகள்கள் இருவரும் பருவம் அடைந்து தாயிடம் வந்தபோது, அவர்களைப் பணக்கார முதலைகளுக்கு விருந்தாக்கி பணம் பார்க்க விஜயாவும் சாமுவேலும் முடிவெடுத்து, டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது.

க்ரைம் ஸ்டோரி
க்ரைம் ஸ்டோரி

இவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல், நடுமகள் காதல் திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறார். இளைய மகள், குருசாமிபாளையத்தில் மூத்த அக்கா இருக்கும் பாட்டி தனத்திடம் வந்துவிடுகிறார். இளைய மகளைத் தங்களுடன் அழைத்துச் செல்வதற்காக அடிக்கடி குருசாமிபாளையம் வரும் விஜயாவும் சாமுவேலும், தனத்திடம் பலமுறை பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அந்தப் பெண்ணை அனுப்ப பாட்டி தனம் மறுத்து விடுகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி சாமுவேல், கடந்த மாதம் 15-ம் தேதி இரவு 8:30 மணிக்கு பைக்கில் ஆசிட், கத்தியோடு தனம் வீட்டுக்கு வந்துள்ளான். பாட்டி தனம் மட்டும் தனியாக இருப்பதை அறிந்து, வீட்டுக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்ட சாமுவேல், இளைய மகளுக்கு போன் போட்டு வரச் சொல்லும்படி தனத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளான்.

தனத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், அவர்களை மிரட்டுவதற்காக ஜன்னல் வழியே ஆசிட்டை வீசி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளான். இதில் காயமடைந்த பலர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். உடனே புதுச்சத்திரம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள், வீட்டுக்குள் தனத்தின் கழுத்தைக் கதறக் கதற அறுத்து, உடலில் ஆசிட் ஊற்றிக் கொன்றுவிட்டான்.

வீட்டுக்குள் புக முற்பட்ட காவல்துறையினர் மீதும் சாமுவேலின் ஆசிட் வீச்சு தொடர்ந்துள்ளது. கிட்டத்தட்ட நான்கு மணி நேர போராட்டத்திற்குப் பின் வெளியே ஓடிவந்த ரவுடி சாமுவேல், கல் தடுக்கிக் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டான். ஆதரவாக இருந்த பாட்டி தனமும் கொல்லப்பட்டதால், திருமணமாகாத மூன்று பெண் பிள்ளைகளும் ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள். இதுபற்றி புதுசத்திரம் காவல் நிலையத்தில் கேட்டதற்கு, ``விஜயா இந்த சம்பவத்துக்குள் வராததால், அவரைக் கைது செய்யவில்லை. அந்தப் பெண்கள் புகார் கொடுத்தால் அவரைக் கைதுசெய்யலாம்'' என்றனர்.

திருடப்படும் கோயில் கலசங்கள்!
நீலகிரியில் கைவரிசை காட்டும் கேரளக் கும்பல்

நீலகிரியில் மரக்கடத்தல், வன விலங்கு வேட்டை, கோயில் கலசத்திருட்டு, வாகனத் திருட்டு எனப் பல குற்றச் சம்பவங்களில் கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஈடுபடுகின்றது. இவர்களைப் பல்வேறு சவால்களுக்குப் பின்னர் தமிழக போலீஸார் கேரளாவுக்குச் சென்று கைதுசெய்துவருகின்றனர்.

``அமானுஷ்யத்தில் நம்பிக்கை இல்லை!'' - 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் குடியேறிய தில் டாக்டர்

கேரளா, கர்நாடகா என இரண்டு மாநிலங்களின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள மலை மாவட்டமான நீலகிரியில், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் குற்றச் சம்பவங்கள் குறைவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கேரளாவைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல்களின் ஈஸி டார்கெட்டாக நீலகிரி மாறிவருகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் பரபரப்பாக்கிய கொடநாடு கொலை, கொள்ளை முதல் தற்போது தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டுவரும் கும்பல் வரை அனைத்தும் கேரளக் கும்பல்களே.

நீலகிரி
நீலகிரி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 10 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதேபோல், கூடலூரில் தொடர் மரக்கடத்தலில் ஈடுபட்டுவந்த கும்பலை நீண்ட தேடலுக்குப்பின் கடத்தப்பட்ட மரங்களோடு குற்றவாளிகளையும் கேரளாவுக்கே சென்று கைது செய்துவந்தனர். வனத்துறையினரின் வாகனச் சோதனைகளில், நாட்டுத் துப்பாக்கிகளுடனும் தோட்டாக்களுடனும் கேரள வன விலங்கு வேட்டைக் கும்பல்களே சிக்குகின்றனர்.

இதேபோல், கேரளாவிலும் நீலகிரியிலும் வாகனத் திருட்டில் ஈடுபட்டுவரும் கைதேர்ந்த கேரள கும்பலைச் சேர்ந்த சிலரை தமிழக போலீஸார் கடந்த மாதம் கேரளாவுக்குச் சென்று கைது செய்துவந்தனர்.

கோயில் கலசம் திருட்டு
கோயில் கலசம் திருட்டு

இந்த நிலையில் தற்போது, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயில்களில் கலசங்களைக் கடத்திச்செல்ல ஒரு பெரிய நெட்வொர்க்கே நடந்துவருகிறது. இதில், கடந்த வாரம் 6 பேரை விசாரித்து 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய‌ வாகனத்தையும் பறிமுதல்செய்தனர். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் கேரள கும்பலைத்தடுக்க, கூடுதல் பாதுகாப்பு தேவை என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு