Published:Updated:

`ஆன்லைனில் பேமன்ட்; கூரியர் மூலம் இறக்குமதி!’ - போலீஸாரிடம் சிக்கிய குட்கா நெட்வொர்க்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

ஒரு பார்சல் மூட்டையை சந்தேகித்து போலீஸார் நூல்பிடித்து விசாரணையில் இறங்க, குட்கா கும்பலின் நெட்வொர்க் அம்பலமாகியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, புகையிலைப் பொருள்கள், தமிழகம் முழுக்க சர்வ சாதாரணமாகப் புழங்குவதை சமீபத்தில் ஜூனியர் விகடன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். அதையடுத்து தமிழகம் முழுக்க தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு எதிராக போலீஸார் சோதனையில் இறங்கிவருகின்றனர். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் அதிகமாக இருக்கும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு, கர்நாடகாவிலிருந்து புகையிலைப் பொருள்கள் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகச் சொல்லப்பட்டுவந்தது. இந்தநிலையில் பெங்களூருவிலிருந்து, ஈரோட்டுக்கு குட்காவைக் கடத்திவரும் நெட்வொர்க் ஒன்று போலீஸில் வசமாகச் சிக்கியிருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

குடியரசு தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி காலை, ஈரோட்டின் முக்கியப் பகுதியன ‘கொங்காலம்மன் கோயில் வீதி’யில், ஈரோடு டவுன் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் பார்சல் மூட்டையுடன் வந்த ஒருவரைப் பிடித்து போலீஸார் சோதனை செய்தனர். ‘என்ன பார்சல்?’ என போலீஸார் கேட்க, அந்த இளைஞருக்கு பதற்றத்தில் வியர்த்துக் கொட்டியிருக்கிறது. போலீஸாருக்கு குட்கா வாசனை எட்ட, பார்சலைப் பிரிக்கச் சொல்லியிருக்கின்றனர். பார்சலின் உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் பாக்கெட் பாக்கெட்டாக இருந்திருக்கின்றன. அதையடுத்து குட்கா கொண்டு வந்த ஜிதேந்தர் குமார் என்ற அந்த வாலிபரை போலீஸார் கைதுசெய்து, துருவியெடுத்திருக்கின்றனர்.

விசாரணையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்திலுள்ள கூரியர் அலுவலகத்திலிருந்து இந்த பார்சல் எடுத்துவரப்பட்டது என்று தெரியவந்திருக்கிறது. அங்கிருந்து நூல்பிடித்து யார் யாருக்கெல்லாம் குட்கா, புகையிலைப் பொருள்கள் சப்ளை ஆகியிருகின்றன என போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். அதில் ஈரோடு மணிக்கூண்டு சொக்கநாத வீதியைச் சேர்ந்த பிரகலாத் பட்டேல் (22), ஈரோடு ராமசாமி லைன் இரண்டாவது வீதியைச் சேர்ந்த தாராராம் (37), அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமண ராம் (37) ஆகியோர் சிக்க, அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். இவர்கள் கருங்கல்பாளையம் கோட்டையார் வீதியில், குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் குட்கா, புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்து, சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்தது தெரிந்திருக்கிறது. அதையடுத்து குடோனில் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 4.41 லட்சம் மதிப்பிலான 468 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்து, குற்றவாளிகளை பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

இந்த விவகாரம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். ``சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பெங்களூரிலிருந்து பார்சல் லாரிகள் மூலமாக ஈரோட்டுக்கு குட்காவைக் கொண்டு வந்து, குடோன்களில் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்திருக்கின்றனர். இப்படி லாரிகளில் பார்சல் மூலமாக குட்கா கடத்திவரப்படுவதை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. இருப்பினும் அதைத் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பல்க்காக குட்கா, புகையிலைப் பொருள்களை இறக்குமதி செய்து கடைகளுக்கு விற்பனை செய்துவந்துள்ளனர். இந்த நெட்வொர்க்கின் பின்னணியில் இன்னும் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என விசாரித்துவருகிறோம்” என்றனர்.

திருச்சி: 550 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு