Published:Updated:

அதிகாலை ரோந்து.. பேக்கரியில் பிரச்னை.. போலீஸ் எஸ்.ஐ-யை பதறவைத்த மர்ம நபர்கள்!

தாக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ-யிடம் விசாரணை
தாக்கப்பட்ட போலீஸ் எஸ்.ஐ-யிடம் விசாரணை ( உ.பாண்டி )

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு ஆய்வாளர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே இன்று அதிகாலை ரோந்து மற்றும் விசாரணை பணியில் ஈடுபட்டிருந்த இரு சார்பு ஆய்வாளர்களை அடையாளம் தெரியாத நபர்கள் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் தலை மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சார்பு ஆய்வாளர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உச்சிப்புளி காவல் நிலையம்
உச்சிப்புளி காவல் நிலையம்

கடந்த இரு தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை, துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னரே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் சார்பு ஆய்வாளர்கள் இருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் ஜெயபாண்டி, நந்தகுமார்.

காயமடைந்த எஸ்.ஐ ஜெயபாண்டி.
காயமடைந்த எஸ்.ஐ ஜெயபாண்டி.

இவர்கள் இருவரும் இன்று அதிகாலை உச்சிப்புளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி ஒன்றின் முன்பு பிரச்னை செய்து கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பகுதியில் இருந்து வந்த அடையாளம் தெரியாத நபர் தான் எடுத்து வந்த உருட்டு கட்டையினால் விசாரணையில் ஈடுபட்டிருந்த சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியை கண் இமைக்கும் நேரத்தில் சரமரியாக தாக்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்றொரு சார்பு ஆய்வாளரான நந்தகுமார் இதனை தடுக்க முயன்ற நிலையில் ஏற்கனவே பிரச்னை செய்து கொண்டு இருந்த இருவரும் அவர்களை தாக்கியுள்ளனர்.

இதனால் அங்கிருந்த சேரினை அவர்கள் மீது வீசி தாக்குதலில் இருந்து தப்ப முயன்றனர். ஆனால் அந்த அடையாளம் தெரியாத நபர்களோ, சாலை ஓரம் கிடந்த கற்களை எஸ். ஐ-க்கள் இருவர் மீதும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பேக்கரிக்குள் சென்று உயிர் தப்பினர். இதன் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் போலீஸாரின் டூ வீலரையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த எஸ்.ஐ-க்கள் இருவரும் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் எஸ்.ஐ ஜெயபாண்டியின் தலை மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் எஸ்.பி வருண்குமார்
போலீஸ் எஸ்.பி வருண்குமார்
உ.பாண்டி

தகவலறிந்து வந்த ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமார், சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ ஜெயபாண்டியிடம் நலம் விசாரித்ததுடன், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வருண்குமார், ''ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ-க்களை தாக்கியவர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே இது போன்ற ஒரு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு