Published:Updated:

`என்னை நம்பினால் அரசு வேலை நிச்சயம்!' - டிஎன்பிஎஸ்சி மோசடியில் யார் இந்த `சலூன்கடை' அய்யப்பன்?

அய்யப்பன்
அய்யப்பன்

முடிதிருத்தும் நிலையம் வைத்திருந்த அய்யப்பன் என்பவர், டிஎன்பிஎஸ்சி புரோக்கராகச் செயல்படத் தொடங்கிய பின்னர், வசதி வாய்ப்புடன் ஊருக்குள் உலா வந்திருக்கிறார். அவரிடம் பணம் கொடுத்து வேலை பெற பலர் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், அடுத்தடுத்து பலரைக் கைதுசெய்தனர். இதுவரை இந்த முறைகேடு தொடர்பாக 40-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

`ஆதார் கட்டாயம்... விரல் ரேகை உண்மைத்தன்மை!’ - டி.என்.பி.எஸ்.சி கொண்டுவந்துள்ள 6 மாற்றங்கள் என்ன?

இந்த முறைகேட்டில், மாவட்டம்தோறும் பலர் புரோக்கர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் சிக்கிய நிலையில்... முக்கிய புரோக்கர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்யும் பணியில் சிபிசிஐடி போலீஸார் தீவிரம்காட்டிவருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட விஜயாபதி கிராமத்தைச் சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன், அய்யப்பன். கடந்த இரண்டு வருடங்களாக புரோக்கராகச் செயல்பட்ட இவர், இந்த முறை முறைகேடாகத் தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

முதல்கட்ட விசாரணைக்கு வந்த அய்யப்பன், திடீரெனத் தலைமறைவாகிவிட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரித்தோம்.
சிபிசிஐடி

ராமநாதபுரம் மையத்தில் தேர்வு எழுதிய அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. முதல்கட்ட விசாரணைக்கு ஆஜரான அவரை இரண்டாம் கட்ட விசாரணைக்கு அழைத்திருந்தனர். ஆனால் அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

அய்யப்பன் போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில், சாத்தான்குளம் நீதிமன்றத்தில் அய்யப்பன் சரணடைந்தார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார். 

சரணடைந்த அய்யப்பன்
சரணடைந்த அய்யப்பன்

ராதாபுரம் பகுதியில், இந்த ஆண்டு 20-க்கும் அதிகமானோர் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே ராமநாதபுரத்தில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். அந்த நபர்களுக்கு புரோக்கராக அய்யப்பன் செயல்பட்டாரா என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

அய்யப்பன், பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்தவர். ஊரில் முடிதிருத்தும் நிலையம் நடத்திவந்தவருக்கு டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர், அவரது நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அடிக்கடி சென்னை செல்லும் அவர் அரசியவாதிகளுடன் நெருக்கத்தில் இருந்திருக்கிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பலரும் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். அதனால் ஊருக்குள் செல்வாக்குடன் வலம்வந்த அவர், `என்னை நம்பினால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்’ என நேரடியாகவே தெரிவிப்பாராம். அதன்படி அவரை நம்பி பணம் கொடுத்தவர்களுக்கு, அரசு வேலையை வாங்கிக் கொடுத்து விடுவாராம்.

`கணினி சென்டர் டு  காட்ஃபாதர் ஜெயக்குமார்!' -டிஎன்பிஎஸ்சி மோசடியின் மையப்புள்ளி மிஸ்டர் `என்' யார்?

ராதாபுரம் வட்டாரத்தில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள், உறவினர்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் குரூப்-4 தேர்வில் வெற்றிபெற்று அரசு வேலையில் சேர்ந்துள்ளனர். மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அடுத்தடுத்த வருடங்களில் வேலையில் சேர்ந்துள்ளனர். ”ராதாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அரசு வேலையில் சேர காரணமாக இருந்ததாகக் கருதப்படும் அய்யப்பன், தானும் அரசு வேலையில் சேர முடிவெடுத்து இந்த முறை ராமநாதபுரம் மையத்தில் தேர்வெழுதியுளார். அதில் வெற்றிபெற்று, அரசு வேலையும் கிடைத்துள்ள நிலையில், தற்போது சிபிசிஐடி பிடியில் சிக்கியிருக்கிறார்” என்கிறார்கள், அவரை நன்கு அறிந்த சொந்த ஊர் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு