சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் ரவி (26). இவர் எம்.எம்.டி.ஏ பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை செய்துவந்ததோடு, கால் டாக்ஸி டிரைவராகவும் பணியாற்றிவந்தார். அவரின் மனைவி ஐஸ்வர்யா (23). அவர் கே.கே.நகர், சத்யா கார்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக இருந்தார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் ரவி அண்மையில் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்.
ரவி வீட்டின் அருகே, கோயம்பேடு காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணியாற்றிய செந்தில்குமார் என்பவர் வசித்துவந்தார். பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ற அடிப்படையில் ரவியும் செந்தில்குமாரும் நட்புடன் பழகி வந்திருக்கின்றனர். செந்தில்குமார் சில தினங்களுக்கு முன்பு செம்பியம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி ரவியை காவல்துறையினர் சிலர் வந்து அழைத்துச் சென்றிருக்கின்றனர். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. காவல் நிலையத்தில் விசாரித்தபோது ரவியை அழைத்துச் செல்லவில்லை என போலீஸார் தெரிவித்துவிட்டனர். பல இடங்களில் தேடியும் ரவி கிடைக்காததால் கடந்த 4-ம் தேதி கே.கே.நகர் காவல் நிலையத்தில் தன் கணவரைக் காணவில்லை என புகார் அளித்திருந்தார் அவர் மனைவி. அத்துடன் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.

இந்தச் சூழலில், செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்ததால் போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ரவியின் மனைவி ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்று காட்டியபோது அங்கு கிடப்பது தன் கணவரின் உடல் என்பதை அடையாளம் காட்டினார். கை கால்கள் துண்டாக்கப்பட்டுப் பாதி எரிந்த நிலையில் உடல் கிடந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு, செம்பியத்துக்கு மாறுதலாகிச் சென்ற காவலர் செந்தில்குமார்மீது சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் அவர் பணிக்குச் செல்லாமல் தலைமறைவாக இருந்தார். அதனால் அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் ஐந்து பேரையும் போலீஸார் தேடிவந்தனர்.

தன்னை போலீஸார் தேடிவருவதை அறிந்த செந்தில்குமார் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்திருக்கிறார். போலீஸ் நெருங்கியதை உணர்ந்த அவர் இன்று தன் நண்பரான ஐசக் என்பவருடன் நெல்லை இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்ட்ரேட் ஆறுமுகம் முன்னிலையில் சரணடைந்தார்.
காவலர் செந்தில்குமாரின் காதலியான சாந்தி என்பவருடன் ரவிக்குப் பழக்கம் ஏற்பட்டதால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள். இது தவிர வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது தொடர்பாக அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவுசெய்திருக்கின்றனர்.