Published:Updated:

சேலம்: `பாலியல் தொழிலுக்கு கிரீன் சிக்னல்?!’ - செல்போன் கால் ஹிஸ்டரியால் சிக்கிய 4 போலீஸார்

சேலத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த பெண்ணின் போன் ஹிஸ்டரியை எடுத்து விசாரித்ததில், நான்கு போலீஸார் சிக்கியிருக்கின்றனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (27). இவர் சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி எனப் பல இடங்களில் ஆத்தூரைச் சேர்ந்த தனது காதலரான பிரதாப் என்பவருடன் சேர்ந்து மசாஜ் சென்டர் நடத்திவந்தார். இவர்கள் இருவரும் சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தனர். கடந்த அக்டோபர் 15-ம் தேதி தேஜ்மண்டல் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, சூட்கேஸில் அடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த பரணில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தேஜ்மண்டலின் வீட்டருகே தங்கியிருந்து, அவருடைய மசாஜ் சென்டரில் வேலை பார்த்துவந்த மூன்று இளம்பெண்கள்தான் இந்தக் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையில் தெரியவந்தது.

கொலையான தேஜ்மண்டல்
கொலையான தேஜ்மண்டல்

அதையடுத்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து களத்தில் இறங்கினர். விசாரணையில் கொலையாளிகளான மூன்று இளம்பெண்களும் வங்கதேச நாட்டுக்குத் தப்பிச் சென்றது அவர்களுடைய செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்திருக்கிறது. அதேபோல, உயிரிழந்த தேஜ்மண்டலின் செல்போன் ஹிஸ்டரியை ஆய்வு செய்தபோது, சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் நான்கு பேர் தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்துவந்தது தெரியவந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நான்கு போலீஸாருக்கும், உயிரிழந்த தேஜ்மண்டலுக்கும் என்ன தொடர்பு என சேலம் வடக்கு சரக துணை கமிஷனர் மாடசாமி விசாரணையில் இறங்க, அதிரவைக்கும் வகையில் பல தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; சூட்கேஸில் கிடந்த பிணம்; பெண் கொலையில் நடந்ததென்ன?

அதாவது, கொலை செய்யப்பட்ட தேஜ் மண்டல் சேலம் மாநகரில் ஸ்பா என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் பெண்களைவைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தாராம். அஸ்தம்பட்டி பகுதியில் இருந்த ஸ்பா சென்டர்களை போலீஸார் சோதனை செய்தபோது, தேஜ்மண்டலிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவரை வழக்கில் சேர்க்காமல் போலீஸார் விட்டிருக்கின்றனர். இதற்குக் கைம்மாறாக, பல ஆயிரங்களை லஞ்சமாகப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இது விசாரணையில் தெரியவர, தேஜ்மண்டலுடன் தொடர்பில் இருந்ததோடு, சட்டவிரோதச் செயலுக்கு துணைபோனதாக அஸ்தம்பட்டியில் அப்போது பணியில் இருந்த எஸ்.ஐ ஆனந்தகுமார், எஸ்.எஸ்.ஐ சேகர், கலைச்செல்வன், ஏட்டு மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் சேலம் மாநகர கமிஷனர் நஜ்முல்கோடா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

representational image
representational image

சமீபத்தில், சேலம் மாவட்டத்திலுள்ள போலீஸார் எந்தெந்த விஷயங்களுக்கு, எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீஅபிநவ் பட்டியல் வெளியிட்டு அதிரடித்திருந்தார். இப்படியான நிலையில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனரும் தவறு செய்த காவலர்கள் நான்கு பேரைப் பாரபட்சமின்றி சஸ்பெண்ட் செய்திருப்பது பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு