Published:Updated:

`மருத்துவரோடு நட்பு; கிளினிக்கைப் பூட்டிய மாமனார்'-இளம்பெண்ணுக்கு அரசியல் கட்சிகளால் நேர்ந்த கொடூரம்

கட்டப்பஞ்சாயத்து பேசிய அரசியல் பிரமுகர்கள்
கட்டப்பஞ்சாயத்து பேசிய அரசியல் பிரமுகர்கள்

இளம்பெண்ணை கிளினிக்கில் அடைத்து வைத்து அரசியல் கட்சியினர் நள்ளிரவு வரை தாக்கிய சம்பவம், திருப்பத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் மனோஜ்குமார் என்பவரின் வீடு திருப்பத்தூர் கச்சேரித் தெருவில் உள்ளது. இந்த வீட்டிலேயே அவர் கிளினிக்கையும் நடத்திவருகிறார். மனோஜ்குமாரின் மனைவி வெளியூரில் தங்கி மருத்துவ மேற்படிப்பு படிக்கிறார்.

இந்த நிலையில், திருப்பத்தூர் கோட்டைத் தெருவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் மருத்துவர் மனோஜ்குமாருக்கு நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மனோஜ்குமாரைப் பார்ப்பதற்காக அடிக்கடி அந்தப் பெண்ணும் கிளினிக்கிற்கு வந்து சென்றுள்ளார். இந்த விவகாரம், நாளடைவில் மனோஜ்குமாரின் மாமனார் ரவிக்குத் தெரியவந்தது. அரசுப் பள்ளியில் ஆசிரியராக உள்ள ரவி திருப்பத்தூரில் முக்கியப் புள்ளியாகவும் வலம் வருகிறார்.

கட்டப்பஞ்சாயத்து பேசிய அரசியல் பிரமுகர்கள்
கட்டப்பஞ்சாயத்து பேசிய அரசியல் பிரமுகர்கள்

மருமகனுடன் நெருக்கமாக உள்ள அந்தப் பெண்ணை பழிதீர்க்க நினைத்த ஆசிரியர் ரவி நேற்று முன்தினம் இரவு கிளினிக்கை நோட்டம் பார்த்துள்ளார். கிளினிக்கிற்குள் மனோஜ்குமாருடன் அந்தப் பெண்ணும் இருப்பதைத் தெரிந்துகொண்டு உடனடியாக கிளினிக் கதவை வெளிப்புறமாக இழுத்துப் பூட்டியதாகக் கூறப்படுகிறது.

பிறகு, தனக்கு நெருக்கமாக உள்ள அ.தி.மு.க, தி.மு.க உட்பட பல்வேறு அரசியில் கட்சி பிரமுகர்களை அங்கு வரவழைத்துள்ளார். சுமார் 150 பேர் கிளினிக் முன்பு கூடினர். கதவைத் திறந்து உள்ளே சென்றதும் அந்தப் பெண்ணைப் பிடித்து முகம், வயிறு, தலைப் பகுதியில் சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.

வலி தாங்க முடியாமல் கதறி அழுத அந்தப் பெண், ‘‘அண்ணா விட்ருங்க... அடிக்காதீங்க, என்ன நடந்தது என்று கேளுங்க. நாங்க எந்தத் தவறும் செய்யல’’ என்று கெஞ்சினார். தகவலறிந்ததும், திருப்பத்தூர் நகர போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். அந்தப் பெண்ணை மீட்காமல் அவர்களும் வேடிக்கைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அரசியல் கட்சியினர் தொடர்ந்து அந்தப் பெண்ணை எட்டி உதைத்து தாக்கிக் கொண்டே இருந்தனர்.

பின்னர், மிரட்டி வெள்ளைத் தாளில், `எனக்கும் மருத்துவர் மனோஜ்குமாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று எழுதி வாங்கிக்கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றுள்ளது. அதன்பிறகே அந்தப் பெண்ணை விடுவித்தனர்.

இளம்பெண்ணைத் தாக்கும் பிரமுகர்கள்
இளம்பெண்ணைத் தாக்கும் பிரமுகர்கள்

கிளினிக்கிலிருந்து வெளியில் வந்த பிறகும் தெருவில் மடக்கி மீண்டும் தாக்கத் தொடங்கினர். இந்தச் சம்பவம் வெளியில் கசியாமல் இருப்பதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல் துறையினர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் அன்றிரவே பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக அவர் புகார் கொடுக்க முன்வரவில்லை. அதற்கேற்பக் காவல் துறையினரும் புகாரைப் பெறும் நோக்கத்தில் இல்லை என்கிறார்கள்.

நான் அங்கிருக்கும் போது அந்தப் பெண் மீது யாரையும் கை வைக்க விடவில்லை. நான் அங்கிருந்து சென்ற பிறகே சிலர் அடித்ததாகச் சொல்கிறார்கள்.
திருப்பத்தூர் நகர தி.மு.க செயலாளர்

இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவத்தில், திருப்பத்தூர் நகர தி.மு.க செயலாளர் எஸ்.ஆர் என்கிற எஸ்.ராஜேந்திரனின் பெயர் அடிபடுகிறது. அவரிடம் இதுதொடர்பாகப் பேசினோம். ``மருத்துவர் மனோஜ்குமாரின் மாமனார் ரவி என்னுடைய உறவினரே தவிர அந்தச் சம்பவம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏதோ குடும்பப் பிரச்னை என்று கேள்விப்பட்டேன். நான் அங்கிருக்கும் போது அந்தப் பெண் மீது யாரையும் கை வைக்கவிடவில்லை. நான் அங்கிருந்து சென்ற பிறகே சிலர் அடித்ததாகச் சொல்கிறார்கள்’’ என்றார்.

மருத்துவர் மனோஜ்குமாரின் செல் நம்பரைத் தொடர்ந்து கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் மூலகாரணமாகச் சொல்லப்படும் மனோஜ்குமாரின் மாமனாரான ஆசிரியர் ரவியிடம் பேசினோம்.

``அந்தப் பெண்ணுடன் என் மருமகனுக்குத் தவறான உறவு இருக்கிறது. இதனால், என்னுடைய மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. என் மகளுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையின் எதிர்காலம் என்னவாகும். வெளியூரில் தங்கிப் படிக்கும் என் மகளிடம் பேசுவதையே மருமகன் நிறுத்திவிட்டார்.

எப்போது பார்த்தாலும் இந்தப் பெண்ணுடன்தான் இருக்கிறார். நானும் என் மனைவியும்தான் கிளினிக்கிற்குச் சென்று அவர்கள் இருவரையும் கன்னத்தில் அறைந்து தட்டிக்கேட்டோம். மற்றபடி, அரசியல் கட்சியினரும் பத்திரிகையாளர்களும் அங்கு எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. நானும் யாரையும் வரச் சொல்லவில்லை. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் நாங்கள் பணம் கொடுக்கவில்லை’’ என்றார்.

தாக்குதலுக்கு ஆளான இளம்பெண்ணும் அவரின் உறவினரும்...
தாக்குதலுக்கு ஆளான இளம்பெண்ணும் அவரின் உறவினரும்...

காவல் துறையினர் வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக திருப்பத்தூர் நகர இன்ஸ்பெக்டர் பேபியிடம் கேட்டதற்கு,``அதுதொடர்பான புகார் எதுவும் எங்களுக்கு இன்னும் வரவில்லை. மீடியாதான் மிகைப்படுத்திப் பேசுறாங்க. எங்க முன்னாடி எந்தப் பஞ்சாயத்தும் நடக்கவில்லை. நாங்க யாரையும் ஆதரிக்கவும் இல்லை. வீட்டுப் பிரச்னையென்று சொன்னாங்க. சம்பந்தப்பட்ட பெண்ணும் புகார் கொடுக்க வரவில்லை’’ என்றார்.

இந்த விவகாரத்தை, வேலூர் சரக டி.ஐ.ஜி காமினியின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். நம்மிடம் அவர், ``இளம்பெண் தாக்கப்பட்டது குறித்து உடனடியாக விசாரிக்கிறேன்" என்று உறுதியளித்தார்.

அடுத்த கட்டுரைக்கு