Published:Updated:

`சைல்ட் போர்னோகிராபி பார்த்த பட்டியலில் அரசியல்வாதிகள், முதியவர்கள்!'- என்ன செய்யப்போகிறது போலீஸ்?

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

கல்லூரி, மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும் அதில் அடங்கியிருப்பதுதான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படம் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த 6,500 பேர் லிஸ்ட் தயாராகியுள்ளது. மாவட்ட வாரியாகப் பிரித்து பின்னர் அவர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

குழந்தைகள்
குழந்தைகள்

இந்த நிலையில் தென் மாவட்டத்தில் ஓர் இளைஞர் ஆபாசப் படம் பார்த்த விவகாரத்தில் போலீஸார் அழைத்து விசாரித்திருக்கும் சம்பவம் தற்பொழுதைய ஹாட் டாப்பிக். உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக ஆபாசப் படங்கள் பார்க்கிறார்கள். இதை ஆதாரத்துடன் அதற்கான லிஸ்டை எப்.பி.ஐ, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

அதில் தமிழகத்தில் 6,500 பேர்கொண்ட பட்டியல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபாசப் படம் பார்ப்பது சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கக் கூடிய ஆபாசப் படம் பார்ப்பதுதான் குற்றம். இந்தியாவில், அதிலும் தமிழகத்தில் இதுபோன்ற குழந்தைகளின் ஆபாசப் படத்தைப் பார்த்தவர்கள் பட்டியல் ரெடியாகி இருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்

இந்தப் பட்டியலில் உள்ளவர்களைக் கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தனிப்படை ஐ.பி அட்ரெஸை வைத்து யார் யாரெல்லாம் பார்த்தார்கள் என்ற லிஸ்ட் எடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தென்மாவட்டங்களான நெல்லை, மதுரை, திருச்சி தஞ்சாவூர் எனப் பல மாவட்டங்களிலிருந்தும் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் மாவட்டத்தில் உள்ள இளைஞரிடம் போலீஸார் போனில் பேசியிருக்கிறார்கள்.

அதில், ``டே தம்பி. நீ அதிகமாக ஆபாச படங்களைப் பார்க்கிறாய். இதை நிறுத்திக்கொள். உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்" என்று வாக்கி டாக்கி சத்தத்தோடு பேசும் இரண்டு நிமிட ஆடியோ பதிவு நீள்கிறது. அதன் பிறகு, "உன் அப்பாவோடு நம்பரைக் கொடு" என்றும் அந்த இளைஞரை மிரட்டியிருக்கிறார்கள். அவரும் பயந்து போய் நம்பரைக் கொடுத்திருக்கிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இந்த நிலையில் ஆடியோவைக் கேட்ட பலருக்கும் நமக்கு எப்போது போன் கால் வரப்போகிறதோ என்ற ஆழ்மனம் படபடத்துக்கொண்டே இருக்கிறது. ஆபாசப் படம் பார்ப்பவர்களை லிஸ்ட் அவுட் எடுப்பது உண்மையா என்று போலீஸார் வட்டாரத்தில் பேசினோம். ``உண்மைதான். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாசப்படங்களைப் பார்ப்பதோடு அதை டவுன்லோடு செய்வது, ஷேர் செய்துவது போன்றவைதான் சட்டப்படி குற்றம்.

பாலியல் குற்றம்
பாலியல் குற்றம்

அதற்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு இவ்விவகாரத்தில் மட்டும் 6,500 பேரை லிஸ்ட் எடுத்து வைத்திருக்கிறோம். அதை மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்ப இருக்கிறோம். அந்தப் பட்டியலில் கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பதோடு 50 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களும் அதிகம் இருக்கிறார்கள். இதைவிட வெக்கக் கேடான செயல் என்னவென்றால், கட்சி பிரபலங்களும் இருக்கிறார்கள். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தலையைப் பிச்சிக்கிட்டு இருப்பதோடு, இருதலைக்கொல்லியாகத் தவிக்கிறோம். அதேபோல் எல்லோரையும் திடுதிப்பொன்று உடனே அழைத்து விசாரித்துவிட மாட்டோம். முதலில் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்பு அவர்களுக்குத் தகவல் அளித்த பிறகு முறையாக விசாரிப்போம். நாங்கள் யாரையும் போனில் அழைத்து விசாரிப்பது இல்லை. யாரும் அப்படிப் பேசினால் எங்களிடம் தகவல் சொல்லுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்" என்று முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு