Published:Updated:

`முன்பே செய்திருந்தால் சுபஸ்ரீ நம்முடன் இருந்திருப்பார்’ - பேனர் விவகாரம் கடந்து வந்த பாதை!

சுபஸ்ரீ உடலுக்கு யார் பொறுப்பேற்பது- பரங்கிமலை போக்குவரத்து காவல் நிலையமா, பள்ளிக்கரணை சட்ட ஒழுங்கு காவல்நிலையமா என்ற பிரச்னையில் 2 மணி நேரம் கேப்பாரற்று கிடந்தது சுபஸ்ரீ உடல்.

subashri
subashri

சுபஸ்ரீ உயிரிழப்புக்குப் பிறகு அரசியல்கட்சிகள் `இனி பேனர் வைக்க மாட்டோம்’ என்று உறுதியளித்துள்ளனர். நடிகர் விஜய், சூர்யாகூட பேனர் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக நீதிமன்றம் பல்வேறு சம்பவங்களில் `சட்டவிரோத பேனர்’ குறித்து அதிகாரிகளைச் சாடியுள்ளது. தொடர்ந்து, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததே சுபஸ்ரீயின் மரணத்துக்குக் காரணம் என்கின்றார் சமூக ஆர்வலர் புகழேந்தி. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் கடந்துவந்த பாதையை அவர் பட்டியிலிடுகிறார். ``2014-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் R.பாத்திமா என்பவர் சட்டவிரோத பேனர்கள் குறித்து பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

banner
banner

அதில், `பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைப்பது சட்டவிரோதம் என இருந்தும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடி வந்ததேன்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு என்னவாயிற்று எனத் தெரியவில்லை. அதேபோல 2019 மார்ச் மாதம், காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் அ.தி.மு.க-வினர் பேனர் வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆட்சியர் பொன்னையா மற்றும் எஸ்.பி சந்தோஷ் ஹடிமானி இருவரையும் நீதிமன்றம் கண்டித்தது.

தவிர, வேறு நடவடிக்கை இல்லை. 2018-ம் ஆண்டு அமித்ஷா வருகையையொட்டி பேனர்கள் வைக்கப்பட்டதற்குத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கண்டித்தார். ஆனால், நடவடிக்கை இல்லை. பிப்ரவரி 2019-ல் அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகம் முன் சட்டவிரோதமாகப் பேனர் வைக்கப்பட்டதை ஆங்கில நாளிதழ் படம்பிடித்து அமைச்சர் உதயகுமாரிடம் "நீங்கள் பேனர் வைப்பதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கினீர்களா" எனக் கேட்டதற்குப் பதில் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றமும் தாமாக முன்வந்து கேள்வி எழுப்பவில்லை.

டிராஃபிக் ராமசாமி சென்னையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக பேனர்கள் வைத்ததை எதிர்த்து 6 அரசியல் கட்சியினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 30 பக்க இடைக்கால தீர்ப்பை நீதியரசர்கள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் வாசித்தனர். அதில் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தபோதிலும், நடவடிக்கை எடுக்கவில்லை. சுபஸ்ரீ உடலுக்கு யார் பொறுப்பேற்பது-பரங்கிமலை போக்குவரத்துக் காவல் நிலையமா, பள்ளிக்கரணை சட்ட ஒழுங்கு காவல்நிலையமா என்ற பிரச்னையில் 2 மணி நேரம் கேட்பாரற்று சுபஸ்ரீ உடல் இருந்தது மிகவும் கொடுமையான விஷயம்.

pugazhenthi
pugazhenthi

காவல்துறை விசாரணை அதிகாரி, விபத்து நடந்த இடத்தில் 4 பேனர்கள்தான் இருந்தன எனக் கூறியதை, அதற்கு மேல் இருந்தன என நீதியரசர்கள் கூறியதிலிருந்து விசாரணை சரியாக நடக்கவில்லை என்பது தெளிவாகிறது. மேலும், 4.30-க்கு உடலை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக விசாரணை அதிகாரி கூற, CCTV கேமரா ஆதாரம் வேறுவிதமாக உள்ளது என நீதியரசர்கள் கூறியுள்ளனர். விசாரணை சரியான திசையில்தான் செல்லுமா என்பது கேள்விக்குறியே!" என்கிறார்.