Published:Updated:

`இப்படிப் பேச நீங்கள் யார்?' - போலீஸைக் கண்டித்து நள்ளிரவில் சாலையில் அமர்ந்த பெண்கள்

எஸ்.மகேஷ்

அடையார் பகுதியை நோக்கி வந்த சொகுசு காரை வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் மடக்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் நடுரோட்டில் அமர்ந்தனர்.

 சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

சென்னை அடையார் பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐக்கும் காரில் வந்த குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பெண்கள், நள்ளிரவில் குழந்தைகளோடு சாலையில் ஒரு மணிநேரமாக அமர்ந்தனர்.

 சொகுசு காரில் வந்த பெண்கள்
சொகுசு காரில் வந்த பெண்கள்

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கிரீன்வேஸ் சாலை பகுதியில் அபிராமபுரம் போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், தலைமைக் காவலர் ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மெரினாவிலிருந்து தினகரன் சாலை வழியாக அடையார் பகுதிக்கு சொகுசு கார் வந்தது. அந்தக் காரை போலீஸார் சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்தவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காரில் வந்த 4 பெண்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் தங்களின் 5 குழந்தைகளோடு நடுரோட்டில் அமர்ந்தனர். அவர்களை போலீஸார் சமரசப்படுத்தியும் பெண்கள் அங்கிருந்து செல்லவில்லை.

 சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

இந்தத் தகவல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், பட்டினம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பீர் பாஷா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், சாலையில் அமர்ந்திருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரத்துக்குப்பிறகு பெண்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மெரினாவிலிருந்து அடையார் பகுதிக்கு வந்த காரை சோதனை நடத்தினோம். காரை ஓட்டிய டிரைவர் கனகராஜ் மதுபோதையில் இருந்தார். இதனால் அவர், மதுகுடித்திருப்பதைக் கண்டறிய கருவி மூலம் சோதனை நடத்த முயன்றோம். ஆனால் அவர் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில் காரிலிருந்து இறங்கி வந்த பெண் ஒருவர், போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அந்தப் பெண், தன்னுடைய கையை போலீஸ் எஸ்.ஐ. பிடித்து இழுத்ததாக குற்றம் சாட்டினார்.


 சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

நிலைமை விபரீதமானதால் உயரதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி, செல்போன் மூலம் தகவல் தெரிவித்தோம். அதற்குள், 4 பெண்களும் 5 குழந்தைகளும் சாலையில் அமர்ந்தனர். அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தோம்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``காரின் டிரைவர் கனகராஜ் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதோடு போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கனகராஜ் மற்றும் யோகானந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடையாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்.

 சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

குடும்பத்தோடு வந்த இவர்கள் இருவருக்கும் ஆதரவாக காரில் வந்த பெண்கள் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் ஒரு மணி நேரம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்படவில்லை. போலீஸாருடன் காரில் வந்தவர்கள் தகராறு செய்த வீடியோ ஆதாரமாக உள்ளது" என்றார்.

அந்த வீடியோவில், காரில் வந்த பெண் ஒருவர், நீங்கள் (வாகனச்சோதனையில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ, தலைமைக்காவலர்) இப்படி பேசியதால்தான் நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம் என்று கூறியப்படி மற்ற பெண்களுடன் அவரும் சாலையில் அமர்ந்தார். அவரிடம் போலீஸ் அதிகாரி ஒருவர், ஏம்மா உனக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் என்னை ஏன் இப்படி பேசினார் என்று ஆவேசமாக பதிலளிக்கிறார்.

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

அதைக்கேட்ட போலீஸ் அதிகாரி, அந்தப் பெண்ணிடம் காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடு என்று கூறுகிறார். அதற்குள் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் நான் அப்படி எதுவும் பேசவில்லை. நீ போம்மா என்றுதான் கூறினேன் என்று சொல்கிறார். பெண்ணுக்கு ஆதரவாக பேசியவர், நீங்கள் ஏன் அசிங்கமாகத் திட்டினீர்கள், தேவையில்லாமல் பேச நீங்கள் யார் என்று கூறுவதோடு வீடியோ முடிவடைகிறது.

அண்மை காலமாக இரவு பணி, வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. மெரினா, காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே சில தினங்களுக்கு முன் புல்லட்டில் ஹெல்மெட் அணியாமல் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் இளங்காமணிக்கும் போக்குவரத்து போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது. இன்ஸ்பெக்டர் மகன் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

 சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

இந்தச் சம்பவத்துக்கு முன், பாண்டிபஜார் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர், இரவு நேர பணியின்போது 4 பேரால் தாக்கப்பட்டார். அந்த வீடியோவும் வெளியானது. இந்தச் சம்பவங்கள் இரவு பணி, வாகனச்சோதனையில் ஈடுபடும் போலீஸாருக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது. அதுபோல சில போலீஸார், பொதுமக்களிடம் நடந்துக் கொள்ளும் விதமும் முகம் சுளிக்கவைக்கிறது. எனவே, போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடக்கும் பிரச்னைகளுக்கு சுமூகதீர்வு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.