Published:Updated:

`மதுபாட்டில்களில் சரக்குக்குப் பதில் டீ டிகாஷன்..!' -கலால்துறைக்கு அதிர்ச்சி கொடுக்கும் புதுவை போலீஸ்

புதுச்சேரி போலீஸ்
புதுச்சேரி போலீஸ்

கடத்தல் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்யும் புதுச்சேரி போலீஸார், அதிலிருக்கும் சரக்குகளை `அபேஸ்’ செய்துவிட்டு கலர் தண்ணீரை நிரப்பி வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நான்காவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முதலில் அத்தியாவசியக் கடைகளும் பின்னர் துணிக்கடை உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் படிப்படியாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழக மாவட்டங்களான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் மதுக்கடைகளைத் திறப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் புதுச்சேரியைச் சேர்ந்த குடிமகன்கள், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள்
பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகள்

அப்போது சில மதுக்கடை உரிமையாளர்கள் சீல் வைக்கப்பட்ட கடைகளை சட்டவிரோதமாக திறந்து, சரக்குப் பாட்டில்களின் விலையை பன்மடங்கு விலையை உயர்த்தி கள்ளச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் பார்க்கத் தொடங்கினர். ரூ.350 ரூபாய் மதிப்புள்ள ஃபுல் பாட்டில் ரூ.3,500 வரை விற்கப்பட்டது. அதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் கள்ளச்சந்தையில் மது விற்றதாக 102 மதுக்கடைகளின் உரிமங்களை அதிரடியாக ரத்து செய்தார் கிரண் பேடி. அதனால் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டபோதும், கவர்னர் – அமைச்சரவை பிரச்னையால் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகிறது அரசு.

அதேசமயம் புதுச்சேரியின் வரலாற்றில் எப்போது நடக்காத ஒன்றாக, தமிழகத்திலிருந்து சரக்குகள் புதுச்சேரிக்கு கடத்தப்படுகின்றன. ரூ.200 விலையுள்ள தமிழக குவார்ட்டர் பாட்டில் ரூ.500 என புதுச்சேரி குடிமகன்களிடம் விற்கப்படுகின்றன. அதனால் புதுச்சேரியின் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்படுத்தியிருக்கும் காவல்துறை, தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டு வரும் சரக்குப் பாட்டில்களை பறிமுதல் செய்துவருகிறது.

மதுபானம் கடத்திய கும்பலுடன் போலீஸ்
மதுபானம் கடத்திய கும்பலுடன் போலீஸ்

அதேபோல மது கிடைக்காத விரக்தியில் இருக்கும் போலீஸாரும் குடிமகன்களிடம் இருந்து சரக்கைப் பறித்துச் செல்லும் சம்பவங்களும் தினம்தோறும் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தமிழகப் பகுதியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து மது பாட்டில்களைப் பறித்துச் சென்ற புதுச்சேரி போலீஸார், அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். கடத்தல் சரக்குகளைப் பறிமுதல் செய்யும் போலீஸ், அந்த சரக்குகளையும் கடத்தியவர்களையும் கலால்துறையிடம் ஒப்படைப்பது வழக்கம். கலால்துறைதான் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்.

அதேபோல பறிமுதல் செய்யப்படும் சரக்குகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அவை அழிக்கப்படுவது நடைமுறை. ஆனால், ஊரடங்கு உத்தரவால் தங்கத்துக்கு நிகராக சரக்கு பாட்டில்கள் விலையேற்றம் கண்டிருப்பதால், அதைப் பயன்படுத்தி போலீஸார் லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளனர். பறிமுதல் செய்யப்படும் சரக்குகள் கட்டாயம் அழிக்கப்படும் என்பதால், கலால்துறையில் ஒப்படைப்பதற்கு முன்பு அதிலிருக்கும் சரக்குகளை `அபேஸ்’ செய்துவிட்டு, அதற்குப் பதிலாக அதில் கலர் தண்ணீரை ஊற்றி வைக்கும் தகவல் தற்போது கசிய ஆரம்பித்திருக்கிறது.

`ஊர் எல்லைக்குள் மது குடித்தால் ரூ.5,000 அபராதம்!' - அதிரடி காட்டும் தஞ்சை கிராமத்தினர்
`மண்ணுக்குப் போகும் சரக்குதானே.. நாம் எடுத்தால் என்ன' என்று காரணமும் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது சோதனை செய்தாலும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான பாட்டில்களில் டீ டிகாஷன்தான் இருக்கும்.
புதுவை காவலர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய `குடிப்பழக்கம் இல்லாத' காவலர் ஒருவர், ``பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் மதுபானங்கள், பல மாதங்களுக்குப் பிறகுதான் அழிக்கப்படும். தவிர அதை யாரும் சோதனை செய்வதற்கும் வாய்ப்புகள் இல்லை. அதனால் அதிலிருக்கும் சரக்குகளை எடுத்துவிட்டு, டீ டிகாஷன் மற்றும் வண்ணப் பொடிகள் கலந்த தண்ணீரை நிரப்பிவிடுகிறார்கள். தேவைகள் போக மீதி சரக்குகளை தண்ணீர் பாட்டிலில் அடைத்து விற்று லாபம் பார்க்கிறார்கள். `மண்ணுக்குப் போகும் சரக்குதானே.. நாம் எடுத்தால் என்ன' என்று காரணமும் சொல்லிக் கொள்கிறார்கள். இப்போது சோதனை செய்தாலும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான பாட்டில்களில் டீ டிகாஷன்தான் இருக்கும்” என்று சொல்லிச் சிரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு