Published:Updated:

`ரெய்டு; கூகுள் பே மூலம் லஞ்சம்; அத்துமீறிய புதுச்சேரி காவலர்கள்! - அதிரடி காட்டிய காவல்துறை தலைமை

காவலர்கள்
காவலர்கள்

புதுச்சேரியில் விடுதியில் தங்கியிருந்தவர்களை மிரட்டிப் பணம் பறித்த சம்பவத்தில் காவலர் உள்ளிட்ட இருவர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை தலைமை.

புதுச்சேரி பெரிய கடை காவல் நிலையத்தை கடந்த 12-ம் தேதி இரவு தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு நபர், தான் காவல்துறை கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசுவதாகவும், அம்பலத்தடையார் மடத்து வீதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடப்பதாகவும் அங்கு சென்று ஆய்வு நடத்தும்படி கூறினார். அதையடுத்து, அன்று பணியில் இருந்த காவலர் சதீஷ்குமாரும், மாசிமகத் திருவிழா பணிக்காக வந்திருந்த ஐ.ஆர்.பி.என் பிரிவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் சீருடையில் வி.எஸ்.டெக்ஸ் என்ற அந்த தங்கும் விடுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியிருக்கின்றனர்.

லஞ்சம்
லஞ்சம்

அப்போது அந்த விடுதியின் இரண்டாவது மாடியில் அறை எண் 302-ல் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்கியிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் வேறொருவரின் மனைவி என்பதும், அந்த ஆண் வேறொரு பெண்ணின் கணவர் என்பதும் தெரியவந்தது.

மேலும், புதுச்சேரியைச் சேர்ந்த அந்த இருவரும் கடந்த 6 மாதமாக நெருக்கமாகப் பழகிவந்ததும், அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டதும் தெரியவந்தது. உடனே, `பாலியல் தொழில் செய்கிறீர்களா? உங்களைக் கைது செய்கிறோம்' என்று கூறி ஆய்வுக்குச் சென்ற இருவரும் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதில் பயந்துபோன அந்த ஜோடி, `யாரிடமும் சொல்லிடாதீங்க. பணம் கொடுக்கிறோம். எங்களை விட்டுவிடுங்கள்' என்று கூறியதாகத் தெரிகிறது. அதற்கு காவலர்கள் ஒப்புக்கொண்டதால் அந்தப் பெண் தன்னிடமிருந்த 3,000 ரூபாயைக் கொடுத்திருக்கிறார்.

காவலர் சதீஷ்குமார்
காவலர் சதீஷ்குமார்

அதேபோல அவருடன் தங்கியிருந்த ஆண் தன்னிடம் பணம் இல்லையென்று கூறியதுடன், ஏ.டி.எம்மில் எடுத்துத் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் அதை ஏற்க மறுத்த காவலர்கள் `கூகுள் பே’ மூலம் அனுப்பும்படி கூறியிருக்கின்றனர். அதையடுத்து `கூகுள் பே’ மூலம் 2,000 ரூபாயைக் காவலர்களுக்கு அனுப்பியிருக்கிறார் அந்த நபர். அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டதுடன், காவல் நிலையத்தில் அந்த விடுதியில் பாலியல் தொழில் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறிவிட்டனர்.

ஆனால், சம்பவம் நடந்து 2 நாள்கள் கழித்து விடுதியில் தங்கியிருந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்ததுடன், மிரட்டிப் பணம் பறித்ததாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து சம்பந்தப்பட்ட இருவரையும் காவல் நிலைய அதிகாரிகள் அழைத்து விசாரித்தவுடன், அவர்களை மிரட்டி பணம் வாங்கியது உண்மைதான் என்றும் ஆனால் பாலியல் ரீதியில் அந்தப் பெண்ணை துன்புறுத்தவில்லை என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் கிரண் பேடி ஆய்வு
காவல் நிலையத்தில் கிரண் பேடி ஆய்வு

அதையடுத்து, அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த காவல்துறை தலைமை, அதுகுறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. அதையடுத்து பெரிய கடை காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில்,``காவல் நிலையத்துக்கு வந்த அழைப்பின்பேரில் அங்கு விசாரணைக்குச் சென்ற காவலர் சதீஷ்குமார் மற்றும் ஐ.ஆர்.பி.என் சுரேஷும் விடுதியில் தங்கியிருந்த ஆண் மற்றும் பெண்ணை மிரட்டி 5,000 ரூபாய் பணம் வாங்கியிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

கிரண் பேடி
கிரண் பேடி

சம்பந்தப்பட்ட அந்தப் பெண் முதலில் தன்னிடமிருந்த 3,000 ரூபாயைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதையடுத்து தங்களைப்பற்றி வெளியே சொல்லாதீர்கள் என்று அந்த நபர் 2,000 ரூபாயைச் சேர்த்து 5,000 ரூபாய் கொடுத்திருக்கிறார். அந்தக் காவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 34 கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதேபோல காதலர் கண் எதிரில் பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் அதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரி கடற்கரையில் சடலமாகக் கிடந்த கேரள காவலர்! - லாட்ஜில் மயங்கிக் கிடந்த இளம்பெண்

தொடர்ந்து பெரிய கடை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, ``விடுதியில் ஆய்வுக்குச் சென்றோர் யார்? யாருடைய உத்தரவின் பேரில் அங்கு சென்றனர். ஏன் ரெய்டின்போது பெண் காவலர்களை உடன் அழைத்துச் செல்லவில்லை. இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அது நீதியல்ல. காவல்நிலையத்துக்கு வந்த புகார்கள், கடிதம் மூலம் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க யார் களத்துக்குச் செல்கிறார்கள். ரோந்துக் காவலர்களின் பணி என்ன? தவறு செய்திருந்தால் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட இருவரையும் அதிரடியாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை தலைமை.

அடுத்த கட்டுரைக்கு