புதுச்சேரி திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான அங்காளன், கடந்த 22.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் வல்லவனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ``முதியவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. அதன்படி எனது தொகுதியைச் சேர்ந்த பெண்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பத்துடன் வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுக்கும் குடியிருப்பு, குடியுரிமை, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை இணைத்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் வழங்குவார்கள். அதனடிப்படையில் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வருவாய்த்துறை தாசில்தார் அல்லது துணை தாசில்தார் போன்றவர்களால் வழங்கப்படும் அந்தச் சான்றிதழ்களை, கலிதீர்த்தாள் குப்பம் மேயர் தெருவைச் சேர்ந்த N.ரமேஷ் என்பவர் பயனாளிகளிடம் ரூ.10,000/- பெற்றுக்கொண்டு போலியாக தயாரித்துக் கொடுத்துவருகிறார். அதற்காக தாசில்தார், துணை தாசில்தார்களின் பெயர்கள் பதித்த முத்திரையையும், தாலுகா அலுவலத்தின் முத்திரையையும் போலியாகத் தயாரித்து பயன்படுத்துவதுடன், அவர்களின் கையெழுத்தையும் இவரே போலியாகப் போட்டு போலிச் சான்றிதழ்களை விற்றுவருகிறார். மேலும், அந்தச் சான்றிதழ்களில் வருவாய்த்துறை அலுவலகத்தில் வழங்கப்படுகிற எண்களையும் (Despatch No) போலியாகக் குறிப்பிட்டுவருகிறார். ரமேஷ் என்ற நபர் போலியாகப் போடும் எண்களை (Despatch No.) வைத்து வருவாய்த்துறையில் சரிபார்த்தால், அந்த எண் உண்மையாக யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇப்படி இந்த நபர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வருவாய்த்துறை அதிகாரிகளால் வழங்கப்படும் சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து, பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு கொடுத்துவருகிறார். வசதிபடைத்த பலர், இந்த நபரிடம் வருவாய் குறைவாக உள்ளதுபோல் சான்றிதழ்களை வாங்கி அரசுத் துறைகளில் பயனடைந்துவருகிறார்கள். இப்படியான போலிச் சான்றிதழ்களை புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கிவருகிறார் இந்த நபர். இதனால் உண்மையான பயனாளிகள் பயனடையாமல் போகின்றனர். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் திருபுவனை தொகுதியைச் சேர்ந்தவர்கள் சமர்ப்பித்திருக்கும் விண்ணப்பங்களில் உள்ள வருவாய் அதிகாரிகளின் கையெழுத்து, வருவாய் அதிகாரிகளின் பெயர் பதித்த முத்திரை, அலுவலக முத்திரை மற்றும் வருவாய்த்துறையின் நம்பர் (Despatch No.) போன்றவற்றை ஆய்வு செய்தால் பல விண்ணப்பங்கள் இந்த நபரால் போலியாக வழங்கப்பட்டது என்பது தெரியவரும்.

இதுமட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறைகளில் சான்றிதழ்களின் நகல்களைச் சமர்ப்பிக்கும்போது அதில் மருத்துவர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகளின் (Gazzetted Officer) ஒப்புதல் கையெழுத்து இருக்க வேண்டும். அந்த முத்திரைகளையும் போலியாகத் தயாரித்து, போலி கையெழுதுகளைப் போட்டுவருகிறார். எனவே, அவர்மீது உடனே தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இனிமேல் இதுபோல் போலியான சான்றிதழ்கள் அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் `லட்சுமி க/பெ கலியபெருமாள், 14 தெற்கு வீதி, கலிதீர்த்தாள் குப்பம் பேட்’ என்ற முகவரிகொண்ட விண்ணப்பம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. 03.12.2021 தேதியிட்ட அந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சான்றிதழில் வருவாய்த்துறையின் எண் (Desptch No.) 5907/TOV/C/2021 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தச் சான்றிதழ் இந்த நபரால் போலியாக வழங்கப்பட்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த விண்ணப்பத்திலிருக்கும் 5907/TOV/C/2021 என்ற எண்ணை வருவாய் அலுவலகத்தில் சோதித்தபோது, அது பிரியங்கா த/பெ முத்து என்பவருக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு மற்றும் சாதிச் சான்றிதழ் என்பதும், அவரது முகவரி எண்.12, பலராமன் ரெட்டியார் தெரு, திருபுவனை பாளையம் என்பதும் தெரியவந்தது. எனவே, லட்சுமி என்ற நபருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சான்றிதழ் போலியானது. வருவாய் அதிகாரிகளால் பிரியாங்கா என்பவருக்கு அளிக்கப்பட்ட உண்மைச் சான்றிதழின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன். இது போன்ற தவறுகள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து திருபுவனை தொகுதியின் எம்.எல்.ஏ அங்காளனிடம் பேசினோம். ``மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருப்பது உண்மைதான். அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகளாக இருந்தாலும், நலத்திட்ட உதவிகளைப் பெறுவதாக இருந்தாலும் அதற்கு வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ்தான் முக்கியமானது. அந்தச் சான்றிதழ்களை கடந்த 16 வருடங்களாக ரமேஷ் என்பவர் தனியாக வருவாய்த்துறை அலுவலகத்தை நடத்தி போலியாகத் தயாரித்து வழங்கிவருகிறார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் நாங்கள் ஆய்வுசெய்த 15 சான்றிதழ்களில் 13 சான்றிதழ்கள் போலியானவை. அப்படியானால் கடந்த 16 வருடங்களில் எத்தனை போலிச் சான்றிதழ்களைக் கொடுத்திருப்பார்... எந்தெந்தத் துறைகளில் கொடுத்திருப்பார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சான்றிதழுக்கு ரூ.10,000 எனப் பல கோடி ரூபாய் முறைகேடு செய்திருக்கிறார். புதுச்சேரி அரசின் கூட்டுறவு பஞ்சாலையில் வேலை செய்யும் ஒருவர் இவரிடம் போலிச் சான்றிதழ் பெற்று, முதியோர் உதவித்தொகையை வாங்குகிறார். ஆதாரங்களுடன் நான் புகாரளித்து ஒரு மாதமாகியும் இன்னும் அந்த நபர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றார்.
மாவட்ட ஆட்சியர் வல்லவனைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டபோது, “அனைத்துத் துறைகளிலும் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பதாக எம்.எல்.ஏ புகாரளித்திருக்கிறார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையில் விசாரணை நடத்தும்படி கூறியிருக்கிறேன். எங்கள் விசாரணையில் தாசில்தாரின் கையெழுத்தை போலியாகப் போட்டு சான்றிதழ் கொடுத்திருப்பது உறுதியாகியிருக்கிறது. அதனால் அந்தப் புகாரை சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவுக்கு அனுப்பியிருக்கிறோம். அவர்கள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்” என்றார்.

சி.பி.சி.ஐ.டி எஸ்.பி பழனிவேலைத் தொடர்பு கொண்டபோது, "நான் விடுமுறையில் இருக்கிறேன். வேறு வேலையாக வெளியூர் வந்திருக்கிறேன். விடுமுறை முடிந்து வந்ததும் நேரில் வாருங்கள். அது குறித்து போனில் பேச முடியாது" என்று முடித்துக்கொண்டார்.