Published:Updated:

`அதிக சத்தத்தோடு சென்ற பைக், திரும்பி வந்தது!' -புதுவை அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

செல்போன்
செல்போன் ( மாதிரிப் படம் )

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் செல்போனை மர்ம நபர்கள் வழிப்பறி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தின் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். அமைச்சர் என்ற பந்தா இல்லாமல் மக்களிடம் எளிமையாகப் பழகும் இவர் காரைக்காலைச் சேர்ந்தவர். தற்போது புதுச்சேரியில் இருக்கும் இவர் வார இறுதி நாள்களில் காரைக்காலுக்குச் சென்று தனக்குச் சொந்தமாக இருக்கும் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்வார்.

அமைச்சர் கமலக்கண்ணன்
அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரியில் இருக்கும் நாள்களில் கடற்கரைச் சாலையில் அன்றாடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது இவரது வழக்கம். அதன்படி நேற்றிரவு தனது பாதுகாவலர் ஒருவருடன் கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி செய்த அமைச்சர், இரவு 10.15 மணிக்குத் தனது வீட்டை நோக்கித் திரும்பியிருக்கிறார்.

`ரூ.2 கோடி நிலுவை; டீசல் கிடையாது!'- காரை ஒப்படைத்துவிட்டு பேருந்தில் பயணித்த புதுவை அமைச்சர்

அமைச்சரிடம் உள்ள 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனை அவரது பாதுகாப்பு அதிகாரியான எஸ்.ஐ ரத்தினவேல் வைத்திருக்க, அமைச்சர் முன்னே நடந்து சென்றிருக்கிறார். கடற்கரைச் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாதுகாப்பு அதிகாரியின் கைகளில் இருந்த செல்போனைப் பறித்துச் சென்றனர். எதிர்பாராத இந்தச் சம்பவத்தில் அந்தப் பாதுகாப்பு அதிகாரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். தனது கண் முன்னே நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்தார் அமைச்சர் கமலக்கண்ணன்.

புதுச்சேரி கடற்கரைச் சாலை
புதுச்சேரி கடற்கரைச் சாலை

தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அமைச்சர் கமலக்கண்ணனைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து பிரிவு 356 மற்றும் 379 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கும் ஓதியன்சாலை காவல்துறையினர், சம்பவம் நடைப்பெற்ற பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம், ``அதிக சத்தத்துடன் எங்களைக் கடந்து சென்ற அந்த இளைஞர்கள் திரும்ப வந்து செல்போனைப் பறித்துச் சென்றனர்” என்று காவல்துறையினரிடம் அமைச்சர் கமலக்கண்ணன் கூறியிருப்பதால், அமைச்சர் என்று தெரிந்தே அவரது செல்போனைப் பறித்துச் சென்றிருக்கலாம் அல்லது அவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர்.

அடுத்த கட்டுரைக்கு