Published:Updated:

`புதுச்சேரி அரசுக்கு அபராதம்; சிறைத்துறை அதிகாரிக்கு ஜெயில்!' - லாக்கப் மரணத்தில் நீதிபதி அதிரடி

விசாரணைக் கைதி லாக்கப்பில் உயிரிழந்த விவகாரத்தில் சிறைக் கண்காணிப்பாளரை சிறையில் அடைத்த நீதிமன்றம், புதுச்சேரி அரசுக்கும் அபராதம் விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

Jayamoorthi
Jayamoorthi ( அ.குரூஸ்தனம் )

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடியை அடுத்த கரிக்கன் நகரைச் சேர்ந்தவர் ஜெயமூர்த்தி, வயது 22. கூலித் தொழிலாளியான இவரை இருசக்கர வாகன திருட்டு தொடர்பாகக் கடந்த 21.11.2018 அன்று கைது செய்த புதுச்சேரி பாகூர் காவல்துறையினர், மறுநாள் 23-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். அதன்பின், உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 27.11.2018 அன்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கைதி, ஜெயமூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் அன்றைய தினமே உயிரிழந்தார். பாகூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் கடுமையாகத் தாக்கியதால்தான் ஜெயமூர்த்தி உயிரிழந்தார் என்று அவரின் மனைவி கௌசல்யாவும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

உயிரிழந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள்
உயிரிழந்த ஜெயமூர்த்தியின் உறவினர்கள்
எஸ்.தேவராஜன்

மேலும், ஜெயமூர்த்தியை சட்டவிதிகளை மீறி கைது செய்ததுடன் கடுமையாகத் தாக்கி, அவரது உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் போராட்டத்தில் குதித்தன. போராட்டங்கள் தீவிரமடைந்ததையடுத்து ஜெயமூர்த்தி மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

மருத்துவமனை முன்பு போராட்டம்
மருத்துவமனை முன்பு போராட்டம்
எஸ்.தேவராஜன்

இந்தநிலையில், பாகூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து புதுச்சேரி 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரண்யா முன்னிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற ஜெயமூர்த்தியின் பிரேதப் பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் சரண்யா, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கைதி ஜெயமூர்த்தி உடலில் 30 காயங்கள் இருந்ததாகவும், பாகூர் காவல் துறையினரும், சிறைத்துறையினரும் தாக்கியதால்தான் ஜெயமூர்த்தி உயிரிழந்தார் என்று அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை
காலாப்பட்டு மத்திய சிறைச்சாலை
அ.குரூஸ்தனம்

அதைத் தொடர்ந்து பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், துணை உதவி ஆய்வாளர் திருமால், சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறை மருத்துவர் வெங்கடரமண நாயக் ஆகியோர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி உயிரிழந்த ஜெயமூர்த்தியின் குடும்பத்துக்கு புதுச்சேரி சமூகநலத்துறை சார்பில் ரூ.4,12,500 வழங்கப்பட்டது. இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட பாகூர் காவல்துறையினர் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியே மனுத்தாக்கல் செய்தனர்.

உதவி ஆய்வாளர் ஜெயகுரு
உதவி ஆய்வாளர் ஜெயகுரு
அ.குரூஸ்தனம்

அம்மனுக்கள் மீது விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவர்களின் முன்ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தார். மேலும், நீதித்துறை நடுவர் மற்றும் காவலர் புகார் ஆணையம் நடத்திய விசாரணையில் பாகூர் காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினர் ஜெயமூர்த்தியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டதால் அனைவரும் தலைமறைவானார்கள்.

அதைத் தொடர்ந்து காவலர் புகார் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார். மேலும், இந்த வழக்கின் புலன் விசாரணை உத்தரவு கிடைத்த நாளில் இருந்து நான்கு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டார். சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் சிறை மருத்துவர் டாக்டர் வெங்கட்ட ரமண நாயக் ஆகியோர் மீண்டும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகினர். ஆனால், கடந்த 17.09.2019 அன்று அதைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், புதுச்சேரி அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, அந்தத் தொகையை உயிரிழந்த ஜெயமூர்த்தியின் மனைவி கௌசல்யாவுக்கு வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது.

காவல் துறையினருடன் வாக்குவாதம்
காவல் துறையினருடன் வாக்குவாதம்
எஸ்.தேவராஜன்

இரண்டு முறையும் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்த சிறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணி உத்தரவின் பேரில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன், துணை உதவி ஆய்வாளர் திருமால், சிறை மருத்துவர் வெங்கட்ட ரமண நாயக் ஆகிய மூவரும் தலைமறைவாக இருக்கும் நிலையில், தான் கண்காணிப்பாளராக இருந்த சிறையிலேயே கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார் பாஸ்கர்.