Published:Updated:

துரத்திய பகை; தலையில் வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டு! - புதுச்சேரியைப் பதறவைத்த இரட்டைப் படுகொலை!

புதுச்சேரியில் பிரபல ரெளடி, அவரின் நண்பர் இருவரும் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரெளடி `பாம்’ ரவி. இவர் மீது ஆறு கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையிலிருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவி, புதுச்சேரியில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்திருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட ரௌடி பாம் ரவி
கொலை செய்யப்பட்ட ரௌடி பாம் ரவி

அதற்காகத் தனது பகுதியில் சொந்தச் செலவில் சாலைகள் சீரமைப்பு, கழிவுநீர் வாய்க்கால்களைச் சரிசெய்வது போன்ற சிறு சிறு பணிகளைச் செய்துவந்திருக்கிறார். அதன்படி நேற்று மதியம் சுமார் 3:30 மணியளவில் அந்தோனி (எ) பரேட், மற்றொரு நண்பர் என இரு நண்பர்களுடன் அலேன் வீதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் `பாம்’ ரவி.

அப்போது திடீரென அவர்களை வழிமறித்த ஐந்து பேர்கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம் ரவியின் தலையைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டை வீசியது. ஆனால் அது அந்தோனியின் தலையில் விழுந்ததால் அவர் படுகாயங்களுடன் கீழே விழுந்தார். அதில் அதிர்ச்சியடைந்த பாம் ரவியும் அவருடன் சென்ற மற்றொரு நண்பரும் அங்கிருந்து தப்பித்து ஓட, அரிவாள்களுடன் அவர்களை விடாமல் துரத்தியது அந்தக் கும்பல்.

கொலை செய்யப்பட்ட அந்தோனி
கொலை செய்யப்பட்ட அந்தோனி

சிறிது தூரத்தில் ரவியின் மீதும் நாட்டு வெடிகுண்டை வீச, அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதையடுத்து அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது அந்தக் கும்பல். அதில் ரத்தவெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார் ரவி. அதேபோல தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த அந்தோனியும் நீண்ட நேரத்துக்குப் பிறகு உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இருவரையும் மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டார்கள் என்று கூறி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தால் வானரப்பேட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதால், சீனியர் எஸ்.பி லோகேஸ்வரம் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் அடித்துக் கொலை செய்யப்பட்ட ரெளடி திப்லானின் கொலைக்குப் பழிவாங்கவே இந்தக் கொலைகள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன என்பது போலீஸாரின் முதர்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

புதுச்சேரி: `கொலை வழக்குகளில் சிறை; அரசியல் என்ட்ரி!' பா.ஜ.க-வில் இணைந்த `தாதா’ எழிலரசி யார்?

யார் இந்த திப்லான்?

புதுச்சேரி திப்புராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவரான ரெளடி திப்லான் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். திருமணத்துக்குப் பிறகு திருந்தி வாழ முயன்ற அவரை, கடந்த ஆண்டு, பாம் ரவி உள்ளிட்ட அவரின் நண்பர்கள் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்தனர். அதில் ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள், திப்லானின் கல்லறையில் அவருக்குப் பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியதுடன், கொலை செய்தவரைப் பழிக்குப் பழி வாங்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தக் கொலைகள் அரங்கேறியிருக்கலாம் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு