Published:Updated:

6 மாதத்தில் 60 மெமோக்கள்... உயரதிகாரிகள் அழுத்தம்? - புதுச்சேரி எஸ்.ஐ மரணத்தில் விலகும் மர்மம்

எஸ்.ஐ விபல்குமார்
எஸ்.ஐ விபல்குமார்

இந்திய அளவில் சிறப்பான காவல் நிலையங்களில் ஒன்று என்று கடந்த ஆண்டு உள்துறை அமைச்சரிடம் விருது வாங்கிய புதுச்சேரி காவல் நிலையத்தில் எஸ்.ஐ ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

புதுச்சேரி வில்லியனூரை அடுத்திருக்கும் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விபல்குமார், வயது 36. நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவருக்கு கிருஷ்ணப்பிரியா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியை முடித்துவிட்டு அதிகாலையில் காவல் நிலையத்துக்கு வந்தவர், 9 மணி அளவில் அருகிலுள்ள காவலர் குடியிருப்பு ஓய்வறைக்குச் சென்றார்.

சடலமாக எஸ்.ஐ விபல்குமார்
சடலமாக எஸ்.ஐ விபல்குமார்

நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் காவல் நிலையத்திலிருந்த ஏட்டு அவரை அழைக்கச் சென்றிருக்கிறார். அங்கு எஸ்.ஐ விபல்குமார் தூக்குப்போட்டு இறந்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர், உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த ஐ.ஜி சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால், எஸ்.பி-க்கள் ரங்கநாதன், ஜிந்தா கோதண்டராமன், ரவிக்குமார் ஆகியோர் விபல்குமாரின் உடலைக் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில் அங்கு வந்த விபல்குமாரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுதனர். எஸ்.ஐ விபல்குமார் தூக்கில் தொங்கிய அறையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது மூன்று பக்கங்களில் கடிதம் எழுதப்பட்ட டைரியைக் கைப்பற்றியதாகத் தகவல் வெளியானது.

சாலைமறியல்
சாலைமறியல்

ஆனால், அந்தக் கடிதம் குறித்த தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை. 174 பிரிவின் கீழ் தற்கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறையினர், அதற்கான காரணம் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் விபல்குமார் இறந்ததாகக் குற்றம் சாட்டிய அவரின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ விபல்குமாரின் தற்கொலை மர்மமாக இருக்கும் நிலையில் அவரின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரருமான பாலு அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மீது புகார் அளித்திருக்கிறார்.

உறவினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் காவல்துறையினர்
உறவினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் காவல்துறையினர்

ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி, தலைமைச் செயலர், தலைமை நீதிபதி, காவல்துறை டி.ஜி.பி ஆகியோருக்கு அவர் கொடுத்திருக்கும் புகாரில், ``தினமும் ரூ.10,000 மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என்று கூறியதோடு முக்கியமான வழக்குகளில் என் மகனை நேர்மையாகச் செயல்பட விடாமல் தடுத்திருக்கிறார். அந்தப் பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகளோடு இணைந்துகொண்டு பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் ஒன்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். அதற்கெல்லாம் மறுத்த என் மகனை இருவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு அதைத் தற்கொலையாக மாற்றியிருக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்திருக்கிறார்.

அதேபோல, ``ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சில நபர்கள் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அது தொடர்பான புகாரை நேர்மையாக விசாரிக்க நினைத்த எஸ்.ஐ விபல்குமாரை உயரதிகாரிகள் தற்கொலைக்குத் தூண்டியிருக்கின்றனர்.

விபல்குமாரின் தந்தை பாலு
விபல்குமாரின் தந்தை பாலு

அதனால் இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதியரசர் மூலம் விசாரணை செய்து குற்றத்துக்குத் துணைபோன உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எஸ்.யு.சி.ஐ கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சமீபத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்காமல் இருக்கும்படி விபல்குமாருக்கு உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். அதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உயரதிகாரிகளிடம் புகார் அளித்ததால், அதிகாரிகள் எஸ்.ஐ விபல்குமார்தான் விசாரணை செய்யவில்லை என்று கூறி தப்பித்துக்கொண்டனர்.

எஸ்.ஐ தற்கொலை செய்துகொண்ட காவலர் குடியிருப்பு
எஸ்.ஐ தற்கொலை செய்துகொண்ட காவலர் குடியிருப்பு

அது தொடர்பாக விபல்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருந்தது. அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து நடவக்டிகை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் சிலர், ``விபல்குமார் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து 6 மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் 60 மெமோக்கள் வரை அவருக்குக் கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வாரம் கரியமாணிக்கத்தில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மெடிக்கல் ஒன்றுக்குப் பணம் கொடுத்திருக்கிறார். அங்கு வட்டிக்குப் பதிலாக வயாகரா, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தங்களுக்கான மாத்திரைகளைப் பெற்றுக்கொள்வது வழக்கம்.

நெட்டப்பாக்கம் காவல் நிலையம்
நெட்டப்பாக்கம் காவல் நிலையம்

கடந்த மாதம் வட்டிக்கும் அதிகமாக மாத்திரைகளை வாங்கிச் சென்றுவிட்டு 4,000 ரூபாயை நிலுவையில் வைத்திருக்கிறார். அந்தத் தொகையை வசூல் செய்ய அந்தக் கடையில் வேலை செய்யும் பெண் ஒருவர் அந்த நபரிடம் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசிய அந்த நபர், அவரிடம் தவறாகவும் நடக்க முயற்சி செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அந்த நபரை ஒரு நாள் முழுவதும் காவல் நிலையத்தில் உட்கார வைத்து விசாரித்தார் எஸ்.ஐ விபல்குமார்.

ஆனால், எந்த வழக்கும் இல்லாமல் ஒரே நாளில் அவரை வெளியே அழைத்து வந்ததோடு, அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வணிகர்கள் சங்கம் தொடங்கி, ஊரின் முக்கியப் புள்ளிகள் வரை காவல் நிலையத்துக்கு `அழுத்தமாகக்' கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் மிரட்டி பார்த்திருக்கிறார்கள். இறுதியாக, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நெட்டப்பாக்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்து தற்போதைய எம்.பி-யாக இருப்பவரும் அழுத்தம் கொடுத்தார். இதற்குமேல் சரிவராது என்றுதான் அந்தப் பெண் ஆளுநர் கிரண் பேடியிடம் சென்றார். அதன் பிறகு டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து அழுத்தம் வரவே விபல்குமாரை குற்றவாளியாக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்க முயன்றிருக்கிறார்கள் நேர்மையான (!?) அதிகாரிகள். அதில் மனமுடைந்துதான் விபல்குமார் தற்கொலை செய்துகொண்டார்” என்றனர்.

கடந்த ஆண்டு மத்திய அரசின் சிறந்த காவல் நிலைய விருது வாங்கியதற்கு வாழ்த்து தெரிவிக்கச் சென்ற முதல்வர் நாராயணசாமி
கடந்த ஆண்டு மத்திய அரசின் சிறந்த காவல் நிலைய விருது வாங்கியதற்கு வாழ்த்து தெரிவிக்கச் சென்ற முதல்வர் நாராயணசாமி

உடல் நிலை சரியில்லாத காரணத்தால்தான் விபல்குமார் தற்கொலை செய்துகொண்டார் என்று காவல்துறை கூறுவது உண்மையென்றால் தாமதிக்காமல், மாற்றி எழுதாமல் உண்மையான கடிதத்தை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும்.

அடுத்த கட்டுரைக்கு