Published:Updated:

`அவருக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டார்'- கள்ள மதுவால் கைதான தாசில்தார், சிக்கிய இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ

கள்ளச்சந்தையில் மது விற்பனை
கள்ளச்சந்தையில் மது விற்பனை

புதுச்சேரியில் மதுக்கடைகளில் இருப்பில் உள்ளதை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற அதிகாரிகளே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் தாசில்தார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 469 மதுபானக்கடைகளும் 98 சாராயக்கடைகளும், கள்ளுக்கடைகளும் இயங்கி வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. ஆனால், 750 மில்லி அளவுள்ள ரூ.400 விலை கொண்ட மதுபாட்டில் ஒன்று 3,500 ரூபாய் எனப் பலமடங்கு விலையில் கள்ளச்சந்தையில் தொடர்ந்து விற்கப்பட்டு வந்தது.

கிரண் பேடி
கிரண் பேடி

அத்துடன் காவல்துறை மற்றும் கலால்துறையின் ஒத்துழைப்போடுதான் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடக்கிறது என்று பகிரங்கமாகப் புகார் எழுந்தது. மேலும், கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவது குறித்த தகவல்கள் ஆதாரங்களுடன் சமூகவலைதளத்தில் பரவியதையடுத்து, அனைத்துக் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மதுக்கடைகளின் உரிமையாளர்களே கள்ளச்சந்தையில் மது விற்கிறார்கள் என்றும் மதுக்கடைகளில் மதுபாட்டில்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், கவர்னர் கிரண்பேடியிடம் புகார் மனுவை அளித்தார்.

கைது செய்யப்பட்ட நில அளவை தாசில்தார் கார்த்திகேயன்
கைது செய்யப்பட்ட நில அளவை தாசில்தார் கார்த்திகேயன்

அதையடுத்து அனைத்து மதுக்கடைகள், மொத்த விற்பனை குடோன்கள், சில்லறை மதுபானக் கடைகளில் மது வகைகளின் இருப்புகளை ஆய்வு செய்ய கலால்துறை அதிகாரிகள் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழு அனைத்து மதுக்கடைகளிலும் கடந்த மார்ச் 24-ம் தேதி வைத்திருந்த இருப்புடன் தற்போது உள்ள இருப்பை ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.

ஆனாலும், மது விற்கப்படும் பகுதிகளிலுள்ள காவல் நிலைய அதிகாரிகள் கணிசமான மாமூலைப் பெற்றுக்கொண்டு கள்ளச்சந்தைக் கும்பலைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதால் விற்பனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக பாகூர், வில்லியனூர், திருக்கனூர் உள்ளிட்ட புதுச்சேரியின் கிராமப்புறங்களில் காவல்துறையினருடன் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு மது விற்பனையை அதிகரித்தது கள்ளச்சந்தை கும்பல். அதேபோல மதுக்கடைகளுக்கு ஆய்வு மேற்கொள்ளச் செல்லும் அதிகாரிகளே மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டும், கள்ளச்சந்தைக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இடமாற்றம் செய்யப்பட்ட வில்லியனூர் எஸ்.ஐ நந்தகுமார்
இடமாற்றம் செய்யப்பட்ட வில்லியனூர் எஸ்.ஐ நந்தகுமார்

இதைத் தொடர்ந்து, ``கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாகக் கலால்துறையும் காவல்துறையும் மாறி மாறி புகார் கூறிக் கொள்கின்றனர். கள்ளச்சந்தையில் மது விற்கப்பட்டால் அதனைக் கண்டறிவதுதான் காவல்துறையின் பணி. கள்ளச்சந்தையில் மது விற்பனைக்குக் காரணம் போலீஸாரின் கவனக்குறைவுதான். அதை ஏற்கவே முடியாது. கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால் அந்தப் பகுதிக்குட்பட்ட காவல்நிலைய அதிகாரி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்கப்படுவார். இந்த விசாரணையில் துணைநிலை ஆளுநர், டி.ஜி.பி, ஐ.ஜி, எஸ்.எஸ்.பி ஆகியோர் ஈடுபடுவோம்” என்று அதிரடியாகத் தெரிவித்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,

மதுக்கடைகளில் இருப்பு நிலவரத்தைக் கணக்கெடுக்கவும், கள்ளச்சந்தை மது விற்பனையைத் தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.

இடமாற்றம் செய்யப்பட்ட பாகூர் இன்ஸ்பெக்டர் அனில்குமார்
இடமாற்றம் செய்யப்பட்ட பாகூர் இன்ஸ்பெக்டர் அனில்குமார்

இந்நிலையில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற மதுக்கடை ஊழியர் ஆனந்த்பாபு என்பவரை போலீஸார் நேற்று இரவு வளைத்துப் பிடித்து விசாரித்தபோது, ``மடுகரை தனியார் மதுபானக்கடைக்கு தாசில்தார் கார்த்திகேயன் ஆய்வுக்கு சென்றபோது அங்கிருந்த மதுபாட்டில்களைத் தனது தேவைக்கு எடுத்துக் கொண்டதுடன் எனக்கும் கொடுத்தார். நான் அதை விற்பனை செய்தேன்” என்று தெரிவித்தார்.

அதையடுத்து காவல்துறை தலைமை மேற்கொண்ட விசாரணையில், மதுக்கடைகளில் கணக்கெடுப்புக்குச் சென்ற கலால்துறை அதிகாரிகளும் காவல்துறையினருமே கள்ளச்சந்தை மது விற்பனைக்குத் துணைபோயிருப்பது தெரியவந்தது. அதையடுத்து சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால் தலைமையிலான போலீஸார் நேற்று நள்ளிரவில் நிலஅளவை தாசில்தார் கார்த்திகேயன் வீட்டுக்குச் சென்று அவரை வளைத்துப் பிடித்ததுடன், அவர் வீட்டிலிருந்து மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி பாகூர் காவல் நிலையம்
புதுச்சேரி பாகூர் காவல் நிலையம்

தொடர்ந்து, தாசில்தார் கார்த்திகேயன் மீது அரசு ஊரடங்கு உத்தரவை மீறல், தொற்று நோயைப் பரப்புதல், பேரிடர் காலத்தில் அரசு உத்தரவை மீறுதல், கலால்துறை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவருடன் ஆய்வுக்குச் சென்ற வருவாய் ஆய்வாளர் வரதன், எழுத்தர் சேதுராமன், டிரைவர் கருணாமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல கள்ளச்சந்தை மது விற்பனை கும்பலை கண்டுகொள்ளாமல் இருந்ததாக பாகூர் இன்ஸ்பெக்டர் அனில்குமார், வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், திருபுவனை ஏ.எஸ்.ஐ ராஜசேகர் ஆகியோர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு