Published:Updated:

`சாட்சிகளை அழித்தார்; உடந்தையாக இருந்தார்!'- முகிலன் வழக்கில் கைதான விஸ்வநாதன்

``முகிலனுக்கு எதிராக விஸ்வநாதனை வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி சி.பி.சி.ஐ.டி போலீஸார் நிர்பந்தப்படுத்தினர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், இப்படிக் கைது செய்திருக்கிறார்கள்" என்று காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் கொந்தளிக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்
கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்

குளித்தலை பெண் கொடுத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள முகிலனைத் தொடர்ந்து, இப்போது புகழூரைச் சேர்ந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதனை மூன்று பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்
கைது செய்யப்பட்ட விஸ்வநாதன்

கூடங்குளம் அணுஉலை, கரூரில் நடைபெற்ற மணல் கொள்ளை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை என்று தொடர்ச்சியாக இயற்கையைக் காக்க போராடியவர் முகிலன். கடந்த பிப்வரி 15-ம் தேதி ஸ்டெர்லைட் சம்பந்தமான முக்கிய ஆவணங்களை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார். அன்று இரவு 12 மணிக்கு மதுரை செல்வதாகச் சொல்லி எழும்பூர் ரயில்நிலையம் சென்ற அவர், அதன்பிறகு மாயமானார்.

Vikatan

அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. இதற்கிடையில், நாமக்கல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குளித்தலையில் தங்கியிருக்கும் ஒரு பெண், முகிலன் மீது பாலியல் வழக்கு கொடுத்தார். குளித்தலை மகளிர் காவல்நிலையத்தில் முகிலன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மர்மமான முறையில் மாயமான முகிலனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி முகிலன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. முகிலன் மீது கொடுக்கப்பட்ட பாலியல் வழக்கும் சி.பி.சி.ஐ.டி வசம் மாறியது.

முகிலன்
முகிலன்

`உயிரோடுதான் இருக்கிறாரா?' என்று பலரும் முகிலன் நிலைமை குறித்து கவலைப்பட்ட நிலையில்தான், கடந்த மாதம் 6-ம் தேதி 141 நாள்கள் கழித்து, திருப்பதி ரயில்வே நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை அங்கு சென்று மீட்டு வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், நான்கு நாள்கள் கழித்து 10-ம் தேதி இரவு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதற்கு முன்பு, எழும்பூர் நீதிமன்றத்திலும் சரி, இங்கே கரூர் நீதிமன்றத்திலும் சரி, எந்தவித வாக்குமூலத்தையும் முகிலன் கொடுக்கவில்லை. ``என்னைக் கடத்தி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார்கள். நான் குணமானதும் வாக்குமூலம் கொடுக்கிறேன்" என்று முகிலன் சொன்னதால், அவர் திருச்சி சிறையில் இப்போது அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான், முகிலனோடு கரூர் மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டங்களில் கலந்துகொண்ட புகழூர் விஸ்வநாதனை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்ததோடு, அவர்மீது உடந்தையாக இருந்தார், கூட்டுச்சதி, சாட்சிகளை அழித்தார் என்ற மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ராஜேஷ், ``முகிலன் 141 நாள்கள் மாயமான சமயத்தில் விஸ்வநாதனை பலமுறை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணைக்கு அழைத்தார்கள். அவரும் மறுப்பு சொல்லாமல் போனார். இந்த நிலையில், முகிலன் கிடைத்தபிறகு, விஸ்வநாதனை சி.பி.சி.ஐ.டி போலீஸார், முகிலனுக்கு எதிராக பாலியல் வழக்கில் வாக்குமூலம் கொடுக்க வைக்க முயற்சி செய்தனர். அதாவது, பாலியல் வழக்கில் முகிலனுக்கு எதிரான சாட்சியாக விஸ்வநாதனை மாற்ற முயற்சி செய்தார்கள்.

ராஜேஷ்
ராஜேஷ்

ஆனால், விஸ்வநாதனோ, `நான் பார்க்காத ஒரு விஷயத்தில் நான் எப்படி வாக்குமூலம் கொடுக்கமுடியும்?'னு மறுத்துவிட்டார். தொடர்ந்து வாக்குமூலம் கேட்டு மிரட்டினர். ஆனால், ஸ்ட்ராங்காக அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில்தான், சம்மனே அனுப்பாமல், `விசாரணைக்கு வாங்க' என்று கைலியோடு வீட்டில் இருந்த விஸ்வநாதனை குண்டுக்கட்டாக தூக்கி கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்குக் கொண்டு வந்துட்டாங்க. அலறியபடியே அவர் சென்றதால், அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களும் பதறிக்கிட்டு போலீஸ் வாகனத்துக்கு பின்னாடி கொஞ்சதூரம் ஓடிவந்திருக்காங்க' என்றார்.