Election bannerElection banner
Published:Updated:

`உன்னை நீயே சாகடிக்கும் வரை தொந்தரவு செய்வேன்!'- புழல் சிறை எஸ்.பி-யைச் சுற்றும் புதிய சர்ச்சை!

புழல் சிறை
புழல் சிறை ( vikatan )

``அறைக்கு என்னை அழைத்து பயப்பட வேண்டாம். பழசை மறந்துவிடுங்கள் என்றார். நானும் சரி என்றேன். ஆனால் இதற்குப் பிறகு அவரது நடவடிக்கையே வேறுமாதிரியாக இருந்தது''

சென்னைப் புழல் சிறைக்குக் கடந்த வருடம் மாற்றலாகி வந்தார் எஸ்.பி செந்தில்குமார். புழல் சிறையில் புதிய கண்காணிப்பாளராகப் பதவியேற்றதிலிருந்தே, கைதிகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்கிறார். தவறே செய்யாத சிறைக் கைதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கிறார் என எஸ்.பி செந்தில்குமார் மீது புகார்கள் கூறப்பட்டன. இதேபோல் இலங்கையைச் சேர்ந்த கைதி அசோக்குமார் என்பவரை மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளோடு அடைத்து கொடுமைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எஸ்.பி செந்தில்குமாரை கடுமையாகக் கண்டித்தனர் உயர் நீதிமன்ற நீதிபதிகள். இந்த சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை அவர் மீது எழுந்துள்ளது.

கைதி
கைதி

கடந்த 2013-ம் ஆண்டு புழல் சிறையில் சூப்பிரண்டு ஆக இருக்கும்போது, சுவமேகா டமஸ்கொஸ் (chukwuemeka tamaskos) என்ற நைஜீயரை தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் பழைய சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் தன்னை எஸ்.பி செந்தில்குமார் துன்புறுத்துகிறார் என்று நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நைஜீரியர் டமஸ்கொஸ். அதில், ``நான் ஒரு நைஜீரியன் சிட்டிசன். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு 2012 முதல் புழல் சிறையில் இருக்கிறேன். அப்போது எனக்கு ஜெயிலராக இருந்தவர் செந்தில்குமார். அந்தச் சமயம் என் பிளாக்கில் இருந்தவர்களுடன் எனக்கு சில பிரச்னைகள் இருந்தன. நான் செய்யாத தவறுக்காக இந்த விவகாரத்தில் என்னை இருட்டில் தனியாக அடைத்ததுடன் தனது டீமை கொண்டு என்னைக் கடுமையாகத் தாக்கி, விலா எலும்பையும் உடைத்தார் செந்தில்குமார்.

இந்தநிலையில் தான் மீண்டும் கடந்தவருடம் புழல் சிறைக்கு வந்தார் எஸ்.பி. செந்தில்குமார். அப்போது என்னைச் சந்தித்த அவர், பழைய சம்பவங்களை நியாபகம் வைத்திருந்து அதைப் பற்றிப் பேசினார். அவரின் பகை மற்றும் காழ்ப்புணர்ச்சி பேச்சால் நான் பயந்துபோய் எங்கள் நாட்டு தூதரகத்தை தொடர்புகொண்டு நடந்த சம்பவங்களை தெரியப்படுத்தினேன். பின்னர் தூதரகம் மூலம் வழக்குப் பதியப்பட்டு என்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணைக்குப் பிறகு செந்தில்குமார் அவரது அறைக்கு என்னை அழைத்து ``பயப்பட வேண்டாம். பழசை மறந்துவிடுங்கள்" என்றார். நானும் சரி என்றேன். ஆனால் இதற்குப் பிறகு அவரது நடவடிக்கையே வேறுமாதிரியாக இருந்தது. சில அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு என்னிடம் சிலவற்றை எழுதி வாங்கினார்கள்.

கடிதம்
கடிதம்

அதன்பிறகு, ``நான் காசு கொடுத்துதான் அவர் மீது புகார் சொல்லுகிறேன்" எனக் கூறியவர், ``மோசமான விளைவுகளை சந்திப்பாய், பைத்தியம் பிடித்து உன்னை நீயே சாகடிக்கும் வரை தொந்தரவு செய்வேன்" எனக் கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். ஒரு வெளிநாட்டவரான என்னால் செந்தில்குமாரையும், அவரது டீமையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடையாது. இதனால் நீதிமன்றமும், தூதரகமும் சேர்ந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். தற்போது புழல் சிறையில் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு முழுக் காரணமும் எஸ்.பி செந்தில்குமாரும், அவரது டீமும்தான். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கோழைத்தனமான மனிதன் நான் அல்ல.

Vikatan

இருந்தாலும் என்றாவது ஒருநாள் விடுதலையாகி வருவேன் என என்னை எதிர்நோக்கிக் காத்திருக்கும் என் குடும்பத்துக்கு இதை தெரியப்படுத்தவே இதை எழுதுகிறேன். செந்தில்குமார் இனியும் இங்கு தொடர்வார். ஆனால் என் வாழ்க்கை மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும் என்பது உறுதி" எனக் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிப்பதற்காக எஸ்.பி செந்தில்குமாரிடம் பேசினோம். ``வெளிநாட்டினர் எனக் கூறி அவர்தான் இங்கு பயங்கர அட்ராசிட்டி செய்கிறார். சிறை நிர்வாகத்தினருக்கு சரியாக ஒத்துழைப்பது கிடையாது. இதுக்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.

கடிதம்
கடிதம்

15 நாள்களுக்கு முன்புகூட அவரிடருந்து செல்போன் பறிமுதல் செய்து அதைப் புகாராகவும் பதிவு செய்துள்ளோம். இப்படி அவர் செய்யும் தவறுக்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கே இதுபோன்ற பொய் புகார்களை கூறுகிறார். அவரது நடவடிக்கையை கோர்ட்டிலேயே தெரிவித்துவிட்டோம். 2013-ல் நடந்த சம்பவத்தில் அவர் கூறியது அனைத்தும் பொய் என நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. சிறையில் உள்ள எல்லாரையும் நன்றாகப் பார்த்துக்கொள்வதுதான் எனது கடமை. ஆனால் எங்கள் கடைமையைச் செய்யும்போது அது அவர்களுக்கு தவறாக தெரிகிறது" எனக் கூறி முடித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு