பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் இடங்கள் பஃபர் ஸோன் ஆக அறிவிக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. வயநாட்டிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைச் சுற்றி பஃபர் ஸோன் அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ சார்பில் வயநாட்டில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது. பேரணி வயநாடு கல்பற்றா பகுதியில் சென்றது.
அப்போது அங்கிருந்த ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்துக்குள் புகுந்த எஸ்.எஃப்.ஐ நிர்வாகிகள் அங்கிருந்த இருக்கைகள், ஃபைல்களை வீசி எறிந்ததுடன், காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் படங்களைத் தூக்கி வீசி சேதப்படுத்தினர். அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் மூன்று பேர் மீது தாக்குதல் நடத்தியதுடன் ராகுல் காந்தியின் இருக்கையில் வாழை மரங்களை நட்டுவைத்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியினர் நேற்று இரவு தொடங்கி இன்று வரை கேரள மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் வயநாட்டில் முகாமிட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்துக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ``பஃபர் ஸோன் ஏற்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள்தான் ஏதாவது செய்ய முடியும். இந்தத் தீர்ப்பை நடைமுறைபடுத்துவது சம்பந்தமாக முடிவெடுக்கவேண்டியது மாநில அரசு. அப்படி இருக்கும்போது ராகுல் காந்தி எம்.பி அலுவலகத்தை அடித்து நொறுக்க என்ன காரணம்... மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு நடந்திருக்கும் குற்றத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது" என கே.சுதாகரன் தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ராகுல் காந்தி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை முதல்வர் பினராயி விஜயன் கண்டித்திருக்கிறார். "ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நம்நாட்டில் ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும், ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை இருக்கிறது. இருப்பினும் அது எல்லை தாண்டிச் செல்லக் கூடாது. இது தவறான ஒரு போக்கு. குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பினராயி விஜயன் கூறியிருக்கிறார். சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதராம் யெச்சூரியும் எஸ்.எஃப்.ஐ தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகம் உடைக்கப்பட்ட வழக்கில் எஸ்.எஃப்.ஐ மாவட்டத் தலைவர் ஜோயல் ஜோசப், செயலாளர் ஜிஷ்ணு ஷாஜி உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். `மத்திய அரசு அமலாக்கத்துறை மூலம் விசாரணை என்ற பெயரில் ராகுல் காந்தியை வேட்டையாடும் நிலையில், மத்திய அரசை சந்தோஷப்படுத்த சி.பி.எம் அரசு இப்படி ஒரு செயலை செய்திருக்கிறது’ என காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ராகுல் காந்தி வரும் 30, 1 , 2 ஆகிய தேதிகளில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக வயநாட்டுக்கு வருகிறார். இதையடுத்து ராகுல் காந்திக்குப் பெரிய அளவில் வரவேற்பு அளிக்க காங்கிரஸ் கட்சியினர் முன்னேற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.