Published:Updated:

போலீஸாருக்கு ராக்கி, இனிப்பு, பூ மழை..! - தெலங்கானா மக்கள் மகிழ்வு

என்கவுன்டரையடுத்து போலீஸாருக்கு ராக்கி கட்டும் மக்கள்
என்கவுன்டரையடுத்து போலீஸாருக்கு ராக்கி கட்டும் மக்கள்

திஷா கொலைக் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதையடுத்து, தெலங்கனா மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தெலங்கானாவில், இன்று காலை திஷா கொலையாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற தகவலுடன்தான் இந்தியாவே கண் விழித்தது. நாடு முழுவதும் என்கவுன்டர் சம்பவத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் மக்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி, ``தெலங்கான போலீஸாரிடத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநில போலீஸார் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில்தான் நாட்டிலேயே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம். நேற்றுகூட உன்னவா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் ஜாமீனில் இருந்த குற்றம்சாட்டப்பட்டபவர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். தற்போது, அந்தப் பெண் டெல்லி மருத்துவமனையில் 90 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸாரைக் கொண்டாடும் மக்கள்
போலீஸாரைக் கொண்டாடும் மக்கள்

சைபராபாத் சம்பவத்தைப் பொறுத்தவரை, திஷா எரித்துக் கொல்லப்பட்ட இடத்திலேயே நான்கு குற்றவாளிகளும் என்கவுன்டர் செய்யப்பட்டனர். என்கவுன்டர் குறித்து சைபராபாத் கமிஷனர் சஜ்ஜனார் கூறுகையில், ``குற்றவாளிகள் போலீஸைத் தாக்கியுள்ளனர். அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எங்கள் பாதுகாப்புக் கருதி என்கவுன்டர் செய்ய வேண்டியதாகிவிட்டது. சட்டம் தன் கடைமையைச் செய்துள்ளது. குற்றவாளிகள் தப்பி ஓடுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா?'' என்கிறார்.

12 மணி முதல் விசாரணை; 6 மணிக்கு தப்பி ஓட்டம்! - எப்படி நடந்தது ஹைதராபாத் என்கவுன்டர்? #DishaCase

என்கவுன்டர் செய்யப்பட்டவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டன. என்கவுன்டர் தகவல் அறிந்து, இன்று காலையில் அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அங்கே திரண்டிருந்த போலீஸார் மீது மலர்களைத் தூவினார்கள். சில பெண்கள் போலீஸாருக்கு ராக்கி கட்டி, இனிப்பு வழங்கினர். போலீஸ் அதிகாரிகளை மக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடினர். ``போலீஸாரும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் மகள்கள் இருப்பார்கள்தானே. எங்களைப் பாதுகாக்க அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் வகையில் போலீஸார் கையில் ராக்கிக் கயிறு கட்டினோம்'' என்று பெண் ஒருவர் கூறினார்.

என்கவுன்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள்
என்கவுன்டர் செய்யப்பட்ட குற்றவாளிகள்

அதிகாலை 3 மணியளவில் குற்றவாளிகளை சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய காரணம் என்கிற கேள்விக்கும் தற்போது தெலங்கானா போலீஸ் விளக்கமளித்துள்ளது. ``பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்கவே இரவு நேரத்தில் குற்றவாளிகளை நடித்துக் காட்ட அழைத்துச் சென்றோம். சம்பவ இடத்தை அடைந்ததும் கண்களாலேயே குற்றவாளிகள் பேசிக்கொண்டனர். தொடர்ந்து போலீஸை கற்களைக் கொண்டு தாக்கிவிட்டு ஒத்தையடிப் பாதையில் ஓடினர். பாதுகாப்பு கருதி சுட்டோம்'' என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு