Published:Updated:

`போலி சான்றிதழ் மூலம் போலீஸ் பணி!’ -ராமநாதபுரத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை பயிற்சியாளர்

காவல்துறை தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் போலிச் சான்றிதழ் கொடுத்து சிலர் தேர்வாகி, காவலர்களாகப் பணிபுரிந்து வருவதாகத் தகவல் வெளியானது.

போலி சான்றிதழ் வழக்கில் சிக்கியவர்கள்
போலி சான்றிதழ் வழக்கில் சிக்கியவர்கள்

விளையாட்டு வீரர் என போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த போலீஸ்காரர் உட்பட 3 பேரை ராமநாதபுரம் போலீஸார் கைதுசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மேலும் சிலரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

கேணிக்கரை காவல்நிலையம்
கேணிக்கரை காவல்நிலையம்

ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகக் கடந்த மாதம் பொறுப்பேற்ற வருண்குமார், குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை நேரடியாகத் தெரிவிக்க தொலைபேசி எண் ஒன்றை அறிவித்திருந்தார்.

`இந்த எண்ணில் தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்' எனவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மது, கஞ்சா உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்த புகார்களும் பதிவாகி வந்தன. இதை அடிப்படையாகக் கொண்டு, எஸ்.பி வருண்குமார் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில், காவல்துறை தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் போலிச் சான்றிதழ் கொடுத்து சிலர் தேர்வாகி, காவலர்களாகப் பணிபுரிந்துவருவதாக, கடந்த சில நாள்களுக்கு முன் தகவல் ஒன்று பதிவானது. இதையடுத்து, எஸ்.ஐ-க்கள் குகனேஸ்வரன், முருகநாதன் ஆகியோர் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தன.

`5,000 பக்கங்கள்; அடுத்த வாரம் ஆக்‌ஷன்!'- தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பார்த்தவர்கள் விவரம்

கமுதி அருகே உள்ள ஒ.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் என்பவர், விளையாட்டு வீரர் எனப் போலிச் சான்றிதழ்களை வழங்கி வருவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவருக்கு வலைவிரித்த போலீஸார், ராஜீவ்காந்தி மூலம் புதிதாக சான்றிதழ் ஒன்றைக் கேட்டுள்ளனர். சீமானும், 50 ஆயிரம் ரூபாய் விலையை நிர்ணயித்துள்ளார். இதையடுத்து, ராஜீவ்காந்தி மூலம் அவரது வங்கிக் கணக்கில் ரூ.50 ஆயிரத்தைப் போலீஸார் செலுத்தியுள்ளனர்.

பணம் வந்ததை அறிந்த சீமான், அமெச்சூர் கபடி அசோசியேஷன் பெயரில் கேரள மாநிலம் காசர்கோடு மஞ்சேஸ்வரம் பகுதியில் தேசிய அளவிலான கபடி போட்டி நடந்ததாகவும் அந்தப் போட்டியில் 18 வயது பிரிவில் பங்கேற்றதாகப் பதிவிட்ட போலி சான்றிதழை வழங்கியிருக்கிறார். இதையடுத்து ராஜீவ்காந்தி, சீமான் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர்.

மாற்று வீரர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழைப் பயன்படுத்தி போலி சான்றிதழ் தயார்செய்துள்ளார் பயிற்சியாளர் சீமான்.
போலீஸ் தகவல்

சீமானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மாற்றாக பங்கேற்பவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் சான்றிதழ்களைப் போலியாக தயாரித்து விற்பனை செய்துவந்தது கண்டறியப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடந்த போலீஸ் தேர்வில், கமுதி ஒ.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த மணிராஜ் என்பவர் இந்த போலி சான்றிதழைப் பெற்று, காவலர் பணிக்குத் தேர்வானதும் தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவந்த மணிராஜை போலீஸார் கைது செய்தனர்.

எஸ்.பி வருண்குமார்
எஸ்.பி வருண்குமார்

மேலும், இதுபோன்று போலிச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த காவலர் ஒருவரையும் கடந்த மாதம் நடந்த காவலர் உடற்தகுதி தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்துப் பங்கேற்ற 5 பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

இதையடுத்து, விளையாட்டு ஒதுக்கீட்டில் காவலர் உள்ளிட்ட அரசுப் பணிகளில் சேர்ந்தவர்கள் கொடுத்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு நடத்த பரிந்துரைசெய்துள்ளதாக, மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்தார்.

குற்றங்களைக் கண்டுபிடிக்கும் காவல்துறை பணிக்கே போலியாகச் சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்த சம்பவம், ராமநாதபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.