லஞ்சம் வாங்கிய எழுத்தர்; ஜீப்பில் இருந்தபடியே பதிவுசெய்த போலீஸ்! -தண்டனை கொடுத்த ராமநாதபுரம் எஸ்.பி
இங்கு கையாளப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை பெரிய மனிதர்கள் மற்றும் வசதியானவர்கள் தொடர்புடையதாகவே இருக்கும். இதனால் இந்த அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு போலீஸாரிடையே கடும் போட்டி நிலவுவது வழக்கம்.

நில மோசடி வழக்கில், சம்பந்தப்பட்ட நபரிடம் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலக ஊழியர் லஞ்சம் வாங்கும் வாட்ஸ்அப் வைரலானதால், அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார் மாவட்ட எஸ்.பி.

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த அலுவலகத்தில் நிலமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. இங்கு கையாளப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை பெரிய மனிதர்கள் மற்றும் வசதியானவர்கள் தொடர்புடையதாகவே இருக்கும். இதனால் இந்த அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு போலீஸாரிடையே கடும் போட்டி நிலவுவது வழக்கம்.
இங்கு எழுத்தராகப் பணிபுரிந்து வருபவர் தர்மர். நேற்று முன்தினம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நிலமோசடி தொடர்பான விசாரணைக்காக ராமநாதபுரம் மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்துள்ளார். விசாரணை முடிந்த நிலையில், பாலகிருஷ்ணனை விடுவிப்பதற்காக எழுத்தர் தர்மர் லஞ்சம் பெற்றுள்ளார்.

இந்தக் காட்சியை எஸ்.பி அலுவலக வளாகத்தில் இருந்த காவலர் ஒருவர் போலீஸ் ஜீப்பில் இருந்தபடியே செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதனால் ராமநாதபுரம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எழுத்தர் லஞ்சம் வாங்கும் வீடியோவைக் கண்ட, எஸ்.பி வருண்குமார் இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்டார். செல்போனில் பதிவான காட்சியை ஆய்வு செய்த எஸ்.பி, புகாரில் சிக்கிய குற்றப்பிரிவு எழுத்தர் தர்மரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.